Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
சிக்காகோ

நான் சர்வதேச பயணத்தை ஏன், எவ்வாறு ஆரம்பித்தேன் என்று அடிக்கடி என்னிடம் கேட்கப்படுவதுண்டு. இவையெல்லாம் 1970-ல் சிக்காகோவில் குற்றங்கள் நிறைந்த ஒரு பகுதியில் ஆரம்பித்தது. நானும் என் மனைவி டெக்ஸூம் அந்தப் பெரிய பட்டணத்தில் வாழ்ந்து, தெருக்களிலெல்லாம் வாலிபர்களுக்குள் உழைத்துவந்தோம். ஒவ்வொரு நாள் காலையிலும் எங்களுடைய அலுவலக ஊழியர்களொடுசேர்ந்து குழுவாக ஜெபத்தில் சமயம் செலவிடுவதுண்டு. ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு நாட்டை மனதில் கொண்டு, அந்த நாட்டுக்காக ஜெபித்தோம்.

ஒரு நாள் காலையில் நாங்கள் ஜெர்மனிக்காக ஜெபித்தோம். அவ்வாறு நாங்கள் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, என்னுடைய இருதயத்தையும், என்னுடைய உடன் பணியாளர் ஒருவருடைய இருதயத்தையும் அந்த நாட்டைக்குறித்த பாரத்தினாலே தேவன் உடைத்தார். அந்த நாள் பிந்திய மாலை வரையும் நாங்கள் ஜெபத்தில் தரித்திருந்தோம். ஜெர்மனிக்குச் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி தேவன் எங்களை வழிநடத்துகிறார் என்று நாங்கள் இருவரும் உணர்ந்தோம். ஆனால், எங்களுக்குப் பல பிரச்சனைகள் இருந்தன. முதலாவதாக, எங்களுக்கு ஜெர்மன் மொழி தெரியாது. இரண்டாவதாக, ஜெர்மனியில் எங்களுக்கு யாரையும் தெரியாது. இறுதியாக, அங்கு சென்றடைய எங்களிடம் பணமில்லை. எங்களிடம் இருந்ததெல்லாம், உடைந்த உள்ளங்களும், தேவனுடைய அரியணையை அணுகும் வாய்ப்புமே.

நாங்கள் இரவு முழுவதும் ஜெபித்தோம்; ஜெர்மனியிலுள்ள சில போதகர்களுடைய பட்டியலும் அவர்களுடைய தொலைபேசி எண்களும் என்னிடம் இருந்தது என் நினைவுக்கு வந்தது. அதில் ஒரு போதகருடைய பெயரையும் தொலைபேசி எண்ணையும் தெரிந்தெடுத்து, அவரோடு பேசினேன். அவர் என்னை அறிந்திருக்கவில்லை; அவருடைய பதில் அவ்வளவு ஊக்கமளிப்பதாகவுமில்லை. ஆயினும், இரண்டு வாரங்களுக்கப்பால், அவரிடமிருந்து தபாலில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதற்குப்பின் அவரோடு நான் தொலைபேசியில் பேசினேன்; அவர் சிக்காகோவில் நான் செய்துவந்த ஊழியத்தைக் குறித்து படித்திருக்கிறார். தேவன் அவருடைய இருதயத்தைத் தொட்டார்; அவர் என்னை ஜெர்மனியில் ஒரு போதகர்கள் மாநாட்டில் பேசும்படி அழைத்தார்.

தேவன் எங்கள் ஜெபத்தைக் கேட்டார்; அவர் நாங்கள் ஜெர்மனி முழுவதும் பிரசங்கிப்பதற்குரிய வாசலைத் திறந்தார். இப்போது ஒரே ஒரு பிரச்சனை மாத்திரமே மீந்திருந்தது. ஜேர்மனிக்குச் செல்வதற்கு எங்களிடம் பணமில்லை. அதற்குப் பின்னர், ஒரு பள்ளி ஆசிரியர் என் அலுவலகத்திற்கு வந்து, என்னோடு பேசவேண்டுமென்றார். அவர் தேவனோடு தனித்து ஜெபத்தில் தரித்திருந்தபோது, தேவன் அவருடைய இருதயத்தில் ஆழமாய்ப் பேசினார். அவர் தன்னுடைய பணத்தைச் சேமித்திருந்தார்; அந்தப் பணத்தை வங்கியிலிருந்து எடுத்து எங்களுக்குத் தரும்படி தேவன் அவரை வழிநடத்தினார். என்னால் அதை நம்ப முடியவில்லை.

நான் ஒரு சிறந்த பாடத்தைக் கற்றுக்கொண்டேன். நாம் தேவனுடைய சித்தத்தைச் செய்யும்போது, அவர் நம்முடைய எல்லாத் தேவைகளையும் சந்திப்பதற்கு அவரை நாம் நம்பலாம். அநேக ஆண்டுகள் கடந்து, ஆறு கண்டங்களைச் சந்தித்தபின், ப்தினாயிரக்கணக்கான மக்கள் கிறிஸ்துவிடம் வந்ததைக் கண்டிருக்கிறோம். இவையெல்லாம் ஒரு ஜெபக்கூட்டத்தில் ஆரம்பித்தது என்பதை என்னால் மறக்கமுடியாது. தேவனோடு சமயத்தைச் செலவிடுங்கள்; அப்போது, அவர் உணருகிறதை நீங்களும் உணருவீர்கள், நீங்கள் என்ன செய்யவேண்டுமன்று அவர் விரும்புகிறாரோ அதையே நீங்களும் செய்வீர்கள். நீங்கள் ஏன் இன்றைக்குத் தேவனோடு சிறிது சமயம் செலவிடக்கூடாது? அழிந்துபோகிற உலகத்துக்காக, அவர் உங்கள் இருதயத்தை உடைக்கட்டும்!