Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
அந்தரங்கமான காரியங்கள்

வட அமெரிக்காவில் ஜெப இயக்கம் வளர்ந்துகொண்டேயிருக்கிறது. ஆயினும், ஆவிக்குரிய நிலையும் சன்மார்க்க வாழ்க்கையும் ஏன் வரவர சீர்கெட்டுக்கொண்டேபோகின்றன என்பதைக்குறித்து நீங்கள் வியப்புக்கொண்டதுண்டா? அதற்கு ஒரு காரணம் நம்முடைய இருதயங்களிலுள்ள அந்தரங்கமான காரியங்களோடு தொடர்பு கொண்டதாயிருக்கலாம். ஜெபம் என்பது தேவனோடுள்ள நெருங்கிய உறவு. உங்களுடைய ஜெபம் வல்லமையுள்ளதாயிருக்க வேண்டுமேயானால் தேவனோடுள்ள உங்களுடைய நெருங்கிய ஆழமான உறவுக்கும் உங்களுக்குமிடையே ஒன்றும் வரக்கூடாது.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குச் சற்றுமுன் உக்ரைனிலுள்ள ஐந்து நகரங்களில் நான் நற்செய்திப் பெருவிழாக்கள் நடத்தினேன். ஒவ்வொரு நாளும் நாங்கள் மழையோடு போராடினோம். பகல் முழுவதும் மழை பெய்தது; மக்கள் கூட்டங்களுக்கு வரத்தக்கதாகத் தேவன் மழையை நிறுத்தும்படி நாங்கள் ஜெபித்தோம். மழையை நிறுத்துவதற்குத் தேவன் கடமைப்பட்டிராவிட்டாலும், அவருடைய கிருபையினால் எங்களுடைய வேண்டுதலை ஏற்றுக்கொண்டார். எல்லா நகரங்களிலும் கூட்டங்கள் ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தேவன் மழையை நிறுத்தினார். ஆயிரக்கணக்கான மக்கள் முதன்முறையாக நற்செய்தியைக்கேட்டு, அதற்குக் கீழ்ப்படிந்ததைக் கண்டது மனயெழுச்சிக்குரியதாயிருந்தது.

உக்ரைனிலும் ருமேனியாவிலும் நான் யாத்திரைசெய்தபோது, மிகவும் அழகான கம்பளங்கள் குறைந்த விலைக்குக் கிடைப்பதைக் கண்டேன். எனவே, உக்ரைனில் ஒரு கம்பளத்தையும் ருமேனியாவில் இன்னொரு கம்பளத்தையும் வாங்கினேன். ஆனால், நான் ருமேனியா நாட்டைவிட்டு வெளியேறும்போது எல்லைப் பாதுகாப்புவீரர், நான் உக்ரைனில் வாங்கின கம்பளத்தை வெளியேகொண்டுசெல்லலாமென்றும், ஆனால் ருமேனியாவில் வாங்கினதை அந்த நாட்டுக்கு வெளியே கொண்டுசெல்லக்கூடாதென்றும் என்னிடம் கூறினார். அப்போது ஒரு நண்பர் என்னைப் பார்த்து, சேமி, கம்பளங்களின் பின்னாலுள்ள அடையாளத்துண்டுகளை நாம் மாற்றிவிடலாம். காவலாளிக்கு வித்தியாசம் தெரியாது. அப்படியானால் உக்ரைனில் வாங்கின கம்பளத்தை இங்கே விட்டுவிட்டு, இங்கு வாங்கின கம்பளத்தை உங்களோடு எடுத்துச்செல்லலாம் என்று சொன்னார். அப்படிச் செய்யலாமென்று எனக்கும் தோன்றிற்று.

அப்போது இன்னொரு நண்பர் என்னைப் பார்த்து, சேமி, அவர் சொல்லுவது சரிதான். ருமேனியாவில் நீ வாங்கின கம்பளத்தை நாட்டுக்கு வெளியே எடுத்துச்செல்லலாம். ஆனால், அடுத்தமுறை தேவன் மழையை நிறுத்தும்படி நீ ஜெபித்தால் அவர் நிறுத்தமாட்டார் என்பது நிச்சயமென்று சொன்னார். நான் என் இருதயத்தில் அதிகமாய் உணர்த்தப்பட்டேன். ஒரு கம்பளத்துக்காக தேவனோடுள்ள நெருங்கிய உறவையும் ஜெபத்தின் வல்லமையையும் இழந்துபோகப்பார்த்தேன். அது எவ்வளவு துக்கமானதாயிருந்திருக்கும்!

உங்களுடைய ஜெபங்களுக்குத் தேவன் பதிலளிக்காததற்கு இத்தகைய காரணங்களிருக்கலாம். உங்கள் இருதயத்தின் அந்தரங்க அறையில் ஒரு கம்பளம் மறைந்திருக்கலாம். அதைத் தேவனிடம் அறிக்கையிட்டு விட்டுவிடுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது (யாக்.5:16) என்று யாக்கோபு அப்போஸ்தலன் எழுதினார். உங்கள் ஜெபத்தின் வல்லமைக்காக நீங்கள் வாஞ்சித்தால் உங்கள் இருதயத்தின் அந்தரங்கப் பாகங்களைச் சுத்தம்பண்ணவேண்டும்.