Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
கெல்ஸ் என்ற இடம்

நீங்கள் பார்த்தவுடனேயே உங்களில் பயபக்தி ஏற்படுத்துகிற சில இடங்கள் இந்த உலகத்தில் உண்டு. அப்படிப்பட்ட ஒரு இடத்தைச் சந்திக்க நான் அதிகமாய் விரும்புவது உண்டு. அது பாரிசிலுள்ள ஈபெல் கோபுரமோ சீனாவிலுள்ள நெடுஞ்சுவரோ அல்ல. வட அயர்லாந்திலுள்ள கெல்ஸ் என்ற குக்கிராமத்தைக்குறித்தே நான் கூறுகிறேன். வட அயர்லாந்துக்குச் செல்லும்போதெல்லாம் இந்தக் கிராமத்துக்குச் செல்ல நான் எப்போதும் நேரமெடுத்துக்கொள்ளுவதுண்டு.

கெல்ஸின் முக்கியத்துவம் என்னவென்று நீங்கள் ஆச்சரியப்படலாம். நீங்கள் அந்தப் பெயரைக் கேட்டிருக்காமலிருக்கலாம். அங்கு ஒரே ஒரு முக்கிய வீதியும் சில கட்டிடங்களும் மாத்திரமேயுண்டு. அக்கிராமம் தனித்தே இருக்கிறது. ஆகையால்தான் அக்கிராமத்தைக்குறித்துச் சிறப்பாய்ப் பேசும்போது நம்பமுடியாமலிருக்கிறது. ஒரு நூற்றாண்டுக்குமுன் வேதத்தைக் கற்றுக்கொள்ள மக்களில் அக்கறைக் காணப்படாததால் இரண்டு வேத ஆசிரியர்கள் மிகவும் சோர்ந்துபோனார்கள். எனவே, மக்கள் கிறிஸ்துவிடம் வரத்தக்கதாக அவர்கள் இருவரும் ஒரு பள்ளிக்கூடக் கட்டிடத்தில் கூடி ஜெபிக்க ஆரம்பித்தார்கள். வெகு சீக்கிரத்தில் அவர்கள் ஜெபத்தின் நேரடிப் பலனாக ஐம்பதுபேர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். தேவனுடைய ஆவியானவர் அசைவாடுகிறாரென்கிற செய்தி வட அயர்லாந்து முழுவதும் பரவியது, ஆவியானவரின் பலத்தக் காற்று அத்தேசம் முழுவதும் அடிக்க ஆரம்பித்தது; பெல்ஃபாஸ்டிலுள்ள தாவரவியல் பூங்காவில் பத்தாயிரம்பேர் கூடி இரவுமுழுவதும் ஜெபித்தார்கள் என்று செய்தித்தாள் கூறியது.

அத்தேசமெங்கும் ஜெபக்குழுக்கள் தோன்றவே, பெரிய ஆத்தும அறுவடை நடைபெற்றது. பிரிட்டனில் பத்து இலட்சத்துக்கு அதிகமானோர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். தன்னுடைய ஊழியகாலத்தில் மிகப்பெரிய ஆவிக்குரிய அறுவடைக்காலம் அதுதான் என்று லண்டன் மாநகரிலுள்ள சிறந்த போதகராகிய சி. எச். ஸ்பர்ஜன் கூறியுள்ளார். ஒரு கிராமத்தில் இரண்டுபேர் ஜெபித்ததின்பலனாக ஒரு தேசத்தையே தேவன் அசைத்தார். ஆகையால்தான் அக்குக்கிராமத்துக்குச் செல்லுவது எனக்கு பக்திக்குரிய அனுபவமாயிருந்தது.

வல்லமையான இயந்திரமயமான இக்காலத்தில் ஜெபிக்கிற சாதாரண மக்களிலேயே ஒரு நாட்டின் நம்பிக்கையிருக்கிறது என்பதே உண்மை. பெரிய பட்டணங்களோ சிறந்த மனிதர்களோ நம்முடைய தேசத்தை மாற்றுவர்களென்று கூறமுடியாது. மகாப்பெரிய தேவன் தங்களுக்கு உண்டென்று புரிந்துகொள்ளுகிற எளிய மக்களாலேயே அவ்வாறு செய்யக்கூடும். அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? (சக. 4:10) என்று சகரியா தீர்க்கதரிசி கேட்டதின் கருத்தைப் புரிந்துகொள்ளுகிறவர்களே அவர்கள். இக்கேள்வியைக் கேட்ட சூழ்நிலையில்தான் அவர், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதினார். ஆம், ஞானிகளின் ஞானத்தை அவமாக்க பல வேளைகளில் தேவன் சிறிய இடங்களையும் அறியப்படாத மக்களையும் பயன்படுத்துகிறார்.