Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
விசுவாசமுள்ள ஜெபம்

ஐயா, எங்கள் பட்டணம் சபிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? என்று ஒரு பெண் பத்திரிகை நிருபர் என்னிடம் கேட்டார்கள். சைபீரியாவிலுள்ள அவர்களுடைய பட்டணம் ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் அடிமைகளின் உழைப்பினால் கட்டப்பட்டுள்ளது. அவர்கள் நடந்த தெருக்களும் அவர்கள் வசித்த வீடுகளும் அடிமைகளால் கட்டப்பட்டிருந்தன. கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தினால் அநேகர் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்களில் பலரும் இந்தப் பட்டணத்தைக் கட்டும்போது மரித்துப்போனார்கள்.

நான் அங்கு நற்செய்தி பிரசங்கிக்கச் சென்ற நாட்களில் வெகு சில வயது முதிர்ந்தக் கிறிஸ்தவர்களே அப்பட்டணத்தில் வாழ்ந்தார்கள். எனவே, ருமேனியாவிலுள்ள ஒரு வேதாகமக் கல்லூரியிலுள்ள மாணவர்களை, சைபீரியாவில் கூட்டங்களை ஒழுங்குசெய்யவும், பின்பு புது விசுவாசிகளுக்கு ஆலோசனைகூறவும் அங்கு அனுப்பிக்கொடுத்தோம். நான் அங்குச் செல்லுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக இந்த மாணவர்கள் அப்பட்டணத்திலுள்ள எல்லா வீடுகளுக்கும் சென்று கூட்டங்களுக்கான அழைப்பிதழ்களைக் கொடுத்ததோடு சுவிசேஷ கைப்பிரதியுங் கொடுத்தார்கள். அதன் பலனாக அந்த அரங்கத்தில் அக்கூட்டத்திற்கு வந்த மக்கள்கூட்டமே வரலாற்றில் சிறப்பானது. அங்கு நான் கண்டதுபோன்று வேறெங்கும் நான் கண்டதில்லை என்று எண்ணுகிறேன். செய்தியின் இறுதியில், கிறிஸ்துவை விசுவாசிக்கவும் பின்பற்றவும் மக்களுக்கு அழைப்புக் கொடுத்தபோது, அங்கிருந்த மக்களில் 95 சதமானம்பேர் முன்னுக்கு வந்தர்கள். அற்புதமான காட்சி அது!

இந்தக் கூட்டத்தின் முடிவில்தான் அந்தப் பெண் நிருபர் அக்கேள்வியைக் கேட்டார்கள். நான் அவர்களைப் பார்த்து, அப்படியல்ல, உங்கள் பட்டணம் சபிக்கப்பட்டிருக்கிறது என்று நான் நம்பவில்லை. அதற்குமாறாக, இந்தப் பட்டணம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறதென்றே நான் நம்புகிறேன். இங்கு உழைத்து மரித்த அடிமைகளில் பலரும் விசுவாசிகளாயிருந்ததார்களென்று நான் திட்டமாய் நம்புகிறேன். இந்தத் தெருக்களில் நடந்து, இங்குள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் ஒருநாள் நற்செய்தியைக் கேட்டு ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று அவர்கள் ஜெபித்திருப்பார்கள். அது இன்று நிறைவேறிவிட்டது; ஆகவே, உங்கள் பட்டணம் ஆசீர்வதிக்கப்பட்டது என்று நான் பதிலளித்தேன்.

இதைச் சொன்னபோது, நான் அறியாதிருந்த ஒரு காரியம் என்னவென்றால், அந்த வேதாகமக் கல்லூரி மாணவர்களில் பலருடைய தாத்தா, பாட்டிமார் சைபீரியாவிலுள்ள சிறைமுகாம்களில் மரித்துப்போனார்கள் என்பதே. அத்தலைமுறையினர் தங்கள் ஜெபத்தின் பலனான ஆசீர்வாதத்தை ஒருபோதும் காணவில்லை; ஆனால் அவர்களுடைய பேரப்பிள்ளைகள்தான் இந்த சைபீரியப் பட்டணத்துக்குக் கிறிஸ்துவின் செய்தியை முதன்முதலாவதாகக் கொண்டுவந்தார்கள். நீங்கள் சில காரியங்களுக்காக ஜெபித்திருக்கலாம், வானம் உங்கள் ஜெபத்திற்கு அடைக்கப்பட்டதுபோலத் தோன்றியிருக்கலாம். ஆனால் தேவன் தம்முடைய சித்தத்தை நிச்சயம் நிறைவேற்றுவாரென்று நீங்கள் உறுதிகொள்ளலாம்.