Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
தீபமும் வெளிச்சமும்

கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதற்காக உலகத்தின் பல நாடுகளுக்கும் செல்லும்போது, இந்தத் தலைமுறையின் இருதயங்களுக்காகவும் மனதுக்காகவும் இரண்டு அரசுகளுக்கிடையில் ஒரு பெரிய யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை நான் காண்கிறேன். அதில் ஒருபுறம் தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தில் கட்டப்பட்டிருக்கிற அவருடைய இராஜ்யம்; மறுபுறம் பொய்யிலும் வஞ்சகத்திலும் பணியப்பட்டிருக்கிற சாத்தானின் அரசு. அந்தப் போரின் மையத்திலிருப்பது சத்தியம்.

கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசம் பரவியிருந்த இருண்ட நாட்களில் இது மிகவும் வெளியரங்கமாயிருந்தது. நாங்கள் ருமேனியாவின் எல்லைக்குச் சென்றபோதெல்லாம் எங்களிடம் மூன்று கேள்விகள் கேட்கப்பட்டன: முதலாம் கேள்வி, உங்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றனவா என்பது. இரண்டாவது கேள்வி, உங்களிடம் ஆபாசப் படங்கள் ஏதாவது இருக்கிறதா என்பது. உங்களிடம் வேதபுத்தகம் இருக்கிறதா என்பதே இறுதிக் கேள்வி. இந்த மூன்று கேள்விகளும் கம்யூனிச மக்களுக்கு மிகவும் முக்கியமானவை. ஆயுதங்கள் ஆட்சியை கவிழ்க்கப் பயன்படுத்தப்படலாம். எந்த சமுதாயமும் கட்டப்பட்டிருக்கிற அடிப்படை அமைப்பான குடும்பங்களை ஆபாசப் படங்கள் தகர்க்கலாம். வேதமே எல்லா சத்தியத்துக்கும் மூலாதாரம்; அது அந்தகாரம், பொய் மற்றும் வஞ்சகம் என்பவற்றின் அரசைத் தகர்க்கிறது.

ருமேனியாவின் தீய சர்வாதிகாரியாயிருந்த நிக்கோலே சியாசெஸ்கு, தேவனுடைய சத்திய வசனத்தின் வல்லமையைக்குறித்து அதிகமாய் அச்சங்கொண்டதால் வெதபுத்தகத்தை அந்த நாட்டிலிருந்து ஒழிக்க எல்லா முயற்சிகளும் மேற்கொண்டான். ஒருமுறை வேதபுத்தகங்கள் ஒரு வாகனத்தில் மறைத்துவைக்கப்பட்டு கொண்டுவருகிறதாக நிக்கோலேயின் ஆட்களுக்குத் தெரியவந்தது. அவர்கள் அந்த வாகனத்தைத் துண்டுதுண்டாக உடைத்துப் போட்டார்கள். தீய சர்வாதிகாரிகள் வேதபுத்தகத்தைக்குறித்து இவ்வளவாய் அஞ்சுவதின் காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? வேதம் சத்தியத்தின் மூலாதாரம் என்று அவர்கள் தங்கள் இருதயத்தின் ஆழத்தில் அறிந்திருக்கிறார்களென்று நான் நம்புகிறேன்; அந்த சத்தியத்தின் ஒளி வஞ்சகத்தின்மீது கட்டப்பட்டுள்ள பேரரசின் இருளை அகற்றிவிடும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

நான் உங்களை ஒரு கேள்வி கேட்கட்டும். வேத புத்தகங்கள் நம்மிடம் இருக்கின்றன, அதை வாசிக்கும் சுயாதீனமும் நமக்கிருக்கிறது; எனினும், அந்தச் சிறந்த புத்தகத்தை வாசிக்க ஏன் நாம் மிகக்குறைந்த நேரமே செலவிடுகிறோம் என்பதே என் கேள்வி. ஒரு கணக்கெடுப்பில் மலைப்பிரசங்கத்தைப் போதித்தது இயேசு என்று அநேகக் கிறிஸ்தவர்களுக்குத் தெரியாது என்று அறியவந்தது. அநேகக் கிறிஸ்தவர்கள் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்கள், நம்முடைய வாழ்க்கையையும் குடும்பத்தையும் சமுதாயத்தையும் வழிநடத்துகிற ஒளியை இழக்கும் நிலைக்கு வந்துவிட்டோம். உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது (சங். 119:105) என்று சங்கீதக்காரன் சொன்னார். நம்முடைய தீபத்தையும் வெளிச்சத்தையும் இழந்துபோனோமா? நெருப்பை மூட்டி நம்முடைய சிறிய தீபத்தைப் பிரகாசிக்கச் செய்வதற்கு இதுவே தருணம். அவ்வாறு அது பிரகாசிக்கட்டும்!