Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
பிந்தின ஆதாம்

அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார் (1 கொரி.15:45).

என் வாழ்க்கையில் நான் கண்ட மிகவும் பயங்கரமான அனுபவம் அது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு இவ்வளவு கொடுமைகள் செய்யமுடியுமென்று நான் கனவில்கூட நினைத்ததுகிடையாது. ருவாண்டா என்னும் ஆப்பிரிக்க நாட்டிலுள்ள ஒரு வர்க்கத்தினர் இன்னொரு வர்க்கத்தினரை முற்றிலும் அழித்துப்போட முயற்சித்தார்கள். மனைவி ஹூட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவளாகவும் கணவன் டுட்சி வர்க்கத்தைச் சேர்ந்தவனாகவுமிருந்தால், அந்த மனைவி தன் கணவனைக் கொல்லப்படுவதற்குப் பகைவர்களிடம் ஒப்படைக்கத் தயங்கமாட்டாள். அதுபோலவேதான் ஹூட்டு வர்க்கத்தைச் சேர்ந்த கணவனும் செய்வான். ஒருமாத காலத்துக்குள் சுமார் பத்து இலட்சம்பேர் கொல்லப்பட்டதாக அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.

அங்குள்ள ஒரு நகரத்தந்தை என்னிடம் தன் சோகக்கதையைக் கூறினார்: எனக்கு ஏழு குழந்தைகள் இருந்தார்கள். டுட்சி இனத்தைச் சேர்ந்த அனைவரையும் கொல்லவேண்டுமென்று கட்டளைபிறப்பிக்கப்பட்டபோது, ஹூட்டு இனத்தைச்சேர்ந்த என்னுடைய ஒரு நெருங்கிய நண்பர் என்னிடம் வந்து, நீங்களெல்லாரும் ஒரு இடத்தில் ஒளித்துக்கொள்ளமுடியாது; நான் உங்களுடைய பிள்ளைகளில் நான்குபேரை ஒளித்துவைத்துக்கொள்ளுகிறேன், நீங்களும் உங்கள் மனைவியும் மற்ற மூன்று குழந்தைகளும் எங்காவது ஒளித்துக்கொள்ளலாமென்று கூறினார். நானும் அதற்கு ஒத்துக்கொண்டேன். ஆனால், அவர் என்னுடைய குழந்தைகளைக் கொண்டுபோனவுடனேயே அவர்களைக் கொல்லுவதற்கு மக்கள்படையிடம் ஒப்படைத்துவிட்டார் என்று அவர் கூறினார்.

அவர் சொன்னதைக் கேட்டபோது நான் அதிர்ச்சியுற்றேன். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில்கூட ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு இவ்வாறு துரோகம் செய்யக்கூடுமா என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தற்காலத்தில் இது எவ்வாறு நடக்கமுடியும் என்று எனக்குத்தானே கேட்டுக்கொண்டேன். என்னுடைய கேள்விக்குப் பதில் மனித வீழ்ச்சியின் ஆரம்பத்துக்குச் செல்லுகிறது. ஒரு மனிதனுடைய பாவத்தினாலே தீமைசெய்யும் இயற்கை நம்மெல்லாருக்குள்ளும் இருக்கிறதென்று வேதம் சொல்லுகிறது. முதலாம் மனிதனாகிய ஆதாம் அழிவுக்குரிய தெரிந்துகொள்ளுதலைச் செய்தான். அவன் தேவனுக்குக் கீழ்ப்படியாமைக் காண்பித்தான்; அது பிற்காலத் தலைமுறைகளுக்கு பெரும் துன்பத்தைக் கொண்டுவந்தது. தவறான தீர்மானத்தை ஆதாம் செய்யுமுன் அவனுக்கும் அவனைச்சுற்றியுள்ள உலகத்திற்குமிடையே பூரண சமாதானமும் ஒற்றுமையுமிருந்தது. ஆனால், அதற்கப்புறம் பேராசை, கொலை, துன்மார்க்கம் மற்றும் அதுபோன்ற ஏராளமான அந்தகாரக் கிரியைகள் மக்களின் வாழ்க்கையை நிரப்பிற்று.

சுருங்கச்சொன்னால், முந்தின ஆதாம் பாவஞ்செய்ததோடு, அந்தப் பாவத்தன்மையை வருங்காலச் சந்ததிகளுக்குக் கடத்திவிட்டான். அந்தப் பாவத்தன்மை அவனுடைய பின்சந்ததியாகிய அனைவருக்கும், குறிப்பாக உங்களுக்கும் எனக்கும் உண்டு. அதுதான் ருவாண்டாவில் 1994-ல் நடைபெற்ற கூட்டுக்கொலைபோன்ற நாசங்களுக்கு வித்தாயிற்று.

ஆனால் நமக்கு ஒரு நற்செய்தியுண்டு. வேதபுத்தகம் முந்தின ஆதாமைக்குறித்துமட்டும் பேசாமல், பிந்தின ஆதாமில் நமக்கிருக்கிற வெற்றியைக்குறித்தும் அது தெளிவாக்குகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் இயேசுவைப் பிந்தின ஆதாம் என்று குறிப்பிடுகிறார். முந்தின ஆதாம் தேவனோடுள்ள நம்முடைய உறவைக் கெடுத்துவிட்டார்; ஆனால், பிந்தின ஆதாம் நம்முடைய இருதயத்திலும் வாழ்க்கையிலும் மறுபிறவியைக் கொண்டு வருகிறார். ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள் (1 கொரி.15:22) என்று வேதம் சொல்லுகிறது.

பிந்தின ஆதாம் என்கிற நாமம் நம்முடைய இருதயங்களுக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் கொண்டுவருகிறது. இயேசு தேவனே; ஆனால், பிந்தின ஆதாம் என்கிற இந்தப் பட்டப்பெயர் கிறிஸ்துவின் மனிதத்தன்மையை நிச்சயப்படுத்துகிற பெயராயிருக்கிறது. இயேசு தேவனும் மனிதனும் என்பதுதான் அவருடைய தனித்தன்மையேயாகும். அவரைப்போல முந்தியோ பிந்தியோ யாருமில்லை. அவர் தேவமனிதன். அவர் அகிலாண்டத்தைப் படைத்தவர், அவரே பிந்தின ஆதாம்.

இயேசு இந்த உலகத்துக்கு வந்து, நம்மைப்போல் ஒருவராக வாழ்ந்தார். ஆயினும் அவர் பாவமற்றவராயிருந்தார். விசுவாசத்தினால் அவர் நம்முடைய இருதயங்களுக்குள் வசிக்கவரும்போது, அவருடைய உயிரளிக்கும் ஆவி நமக்குப் புத்துயிர் அளித்து, ஒரு புதிய இருதயத்தையும் புதிய தன்மையையும் நமக்குத் தருகிறது. அப்போது நாம் வெற்றியோடு வாழத்தக்கதாக நமக்குள் வல்லமை காணப்படுகிறது. நாம் பாவத்துக்கு அடிமைப்பட்டு வாழத் தேவையில்லை; நாம் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாகிறோம். தேவனுடைய ஆவியின் வல்லமையை நாம் விசுவாசத்தினாலே பெற்றுக்கொள்ளவேண்டும். அவரை இன்றே நம்புங்கள். அவரே உங்கள் வெற்றியின் ஆதாரம்.