Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
ஆத்தும வாஞ்சையும் உயிர்மீட்சியும்

மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது (சங்கீதம் 42:1).

அநேக ஆண்டுகளுக்குமுன் ஒரு கிறிஸ்தவ வானொலியின் நேருக்குநேர் நிகழ்ச்சியில், ருமேனியாவிலுள்ள திருச்சபைக்கும் அமெரிக்காவிலுள்ள திருச்சபைக்குமிடையேயுள்ள மிகப்பெரிய வேற்றுமை என்னவென்று என்னிடம் கேட்கப்பட்டது. அக்காலத்தில் ஏராளமான வேற்றுமைகளிருந்தன. நிக்கோலே சியாசெஸ்கு என்ற தீய சர்வாதிகாரியின் காலத்தில் ருமேனியாவில் கம்யூனிஸம் பரவியிருந்த இருண்ட நாட்கள் அவை. கிறிஸ்தவர்கள் உபத்திரவப்படுத்தப்பட்டார்கள். கிறிஸ்தவ விசுவாசத்தினிமித்தம் அநேகர் தங்கள் வேலையை இழந்தார்கள். இரட்சகர்பேரிலுள்ள பாசத்தல் பலரும் சிறைக்குச் சென்றார்கள். மிகவும் கடுமையான நாட்கள் அவைகள். ஒருமுறை ஒரு பெரிய கட்டு வேதபுத்தகம் அந்நாட்டுக்கு வருகிறது என்பதை அறிந்த நிக்கோலே அவைகளைப் பறிமுதல் செய்து, நாசப்படுத்தினான்.

இவ்வாறான மார்க்கசம்பந்தமான பிரச்சனைகள்தவிர, சரீரத்துக்கடுத்த பிரச்சனைகளையும் மக்கள் சந்திக்கவேண்டியதாயிற்று. உணவுப்பொருட்கள் பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் அநேக மணிநேரம் நின்றார்கள். உணவுத்தட்டுப்பாடும் அடிக்கடி ஏற்பட்டது. ஆயினும், இந்த எல்லாப் பாடுகளின் மத்தியிலும் அநேக ஆலயங்கள் ஆராதிக்கிறவர்களால் நிரம்பிவழிந்தன. ஆராதனை ஆரம்பிப்பதற்கு அதிக நேரத்துக்குமுன்னே விசுவாசிகள் கூடிவந்து ஜெபித்துத் தேவனைத் தேடினார்கள். தேவஜனத்துக்கு அது ஒரு அற்புதமான காலமாயிருந்தது.

அப்படியானால், என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் எவ்வாறு பதிலளித்தேன்? நான் அமெரிக்கத் திருச்சபைக்கும் ருமேனியாவிலுள்ள திருச்சபைக்குமிடையேயுள்ள வேற்றுமைகளைத் தீவிரமாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தேன். அமெரிக்காவில் வசீகரமும் வசதியுங்கொண்ட ஆலயங்களிருக்க, ருமேனியாவில் ஆராதிக்க நல்ல கட்டிடங்கள் இல்லாதது மிகப்பெரிய வேற்றுமையாயில்லை. ருமேனியக் கிறிஸ்தவர்கள் கடுமையான துன்பம் அனுபவிக்கும்போது, அமெரிக்க திருச்சபைக்கு உபத்திரவம் வராததும் மிகப்பெரிய வித்தியாசமில்லை. ஆனால், அந்நாட்களில் இந்த இரண்டு திருச்சபைகளுக்குமிடையேயுள்ள மிகவும் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், இரண்டு திருச்சபைகளிலும் தேவையிருந்தும், ருமேனிய திருச்சபை அதை அறிந்திருந்தது, ஆனால் அமெரிக்க திருச்சபை அதை அறியவில்லை.

தங்களுக்குத் தேவன் தேவையென்று ருமேனியத் திருச்சபை அறிந்திருந்தது. அவர்கள் தேவன்பேரில் வாஞ்சையாயிருந்தார்கள். அவர்களுடைய ஒரே நம்பிக்கை தேவனே. அவர்களுக்குக் கிறிஸ்தவப் புத்தகக்கடைகளோ, கிறிஸ்தவ ஒலி, ஒளிபரப்பு நிலையங்களோ இல்லை. ஆனால், மேற்கு நாடுகளிலில்லாத ஒன்று அவர்களிடமிருந்தது; அது தேவனைத் தேடும் இருதயமே. அவர்கள் தேவனை அறியவும் அவருக்குக் கீழ்ப்படியவும் அவருடைய சித்தத்தைச் செய்யவும் வாஞ்சித்தார்கள். அவர்கள் நீரோடைகளை வாஞ்சித்த மானைப் போலிருந்தார்கள். இந்த வாஞ்சையே தேவன்மீது முழு நம்பிக்கையையும் வைக்க அவர்களைத் தூண்டியது.

அந்த வாஞ்சையில் அவர்கள் தேவனிடம் திரும்பினார்கள். அவரும் அவர்களுடைய ஜெபத்தைக்கேட்டு அதற்குப் பதிலளித்தார். அத்தகைய இருதயங்களையே தேவன் தேடுகிறார். அநேகக் கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றியடைய ஆர்வத்தோடு தேடாததினாலேயே தங்கள் தீயபழக்கங்களிலிருந்து வெற்றிபெறவில்லையென்பது என் தீர்மானமான எண்ணம். அநேகத் திருச்சபைகள் தங்களது அக்கறையற்ற நிலையில் சுகமாயிருப்பதாலேயே அவைகளில் உயிர்மீட்சி உண்டாகவில்லை. எல்லாம் சரியாயில்லை என்று அறிந்த அநேக விசுவாசிகள், ஆத்தும வாஞ்சையின் உச்சகட்டத்துக்கு வரவில்லை என்பதை நான் கண்டிருக்கிறேன்.

அத்தகைய உச்சகட்டத்திலேயே நமது முழு இருதயத்தோடும் நாம் தேவனைத் தேட ஆரம்பிக்கிறோம். அவ்வாறு நாம் அவரைத் தேடும்போது, அவரை நாம் கண்டுகொள்ளுவோம். நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்; உங்கள் தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது (ஓசி.10:12) என்று ஓசியா தீர்க்கதரிசி சொன்னார். அதுதான் உயிர்மீட்சி, அதுதான் வெற்றி; அதுதான் தேவன் தம்முடைய மக்களைப் புதுப்பிக்கிறதாகும். இதுவே தேவன் தம்முடைய அன்பையும் இரக்கத்தையும் நம்மீது பொழியப்பண்ணுவதாகும். தேவனுடைய இரக்கத்தையும் கிருபையையும் நீங்கள் வாஞ்சிக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இருதயம் உயிர்ப்பிக்கப்படும்.