Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
உயிர்மீட்சி வெற்றியைக் கொண்டுவருகிறது

உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ? (சங்கீதம் 85:6).

ஒரு போதகர், தன்னுடைய சபை மக்களைத் தெருக்களில் சந்திக்கும்போது, அவர்கள் துக்கமும் தோல்வியுமுற்றவர்களாய்த் தோற்றமளித்தார்களென்று அநேக ஆண்டுகளுக்குமுன் அந்தப் போதகர் என்னோடு பகிர்ந்துகொண்டார். அவர் வழக்கமான முறையில் அவர்களைப் பார்த்து, நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? என்று சுகசெய்தி விசாரிப்பார். பொதுவாக அவர்களுடைய பதில், என்னுடைய சூழ்நிலையில் நான் பரவாயில்லாமலிருக்கிறேன் என்பதாயிருக்கும். உடனடியாகப் போதகர் அவர்களைப் பார்த்து? சூழ்நிலைகளுக்குள்ளாக நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் உன்னதத்தில் வாழும்படி கிறிஸ்துவோடுகூட உயிரோடெழுப்பப்பட்டிருக்கிறீர்களென்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்பார்.

அவருடைய கேள்விகள் மிகச் சரியானவை. கிறிஸ்தவ வாழ்க்கை நம்பமுடியாத அற்புதமான சூழ்நிலைகள் நிறைந்ததல்ல. வேதனை, நோவு மற்றும் துக்கம் நிறைந்த யதார்த்த வாழ்க்கையிலிருந்து தப்பி ஓடுவதுமல்ல அது. ஆனால், நீங்கள் எந்தச் சூழ்நிலையில் வாழ்ந்தாலும், மனச்சோர்பின் ஆழத்துக்கு இழுத்துச் செல்லப்படாதபடி உங்களைக் காத்துக்கொள்ளுவதே கிறிஸ்தவ வாழ்க்கையாகும். ஒரு வெற்றியான கிறிஸ்தவன் சூழ்நிலைகளுக்குட்பட்டு வாழத் தேவையில்லை. நீங்கள் எந்தச் சூழ்நிலையில் வாழ்ந்தாலும் அவைகளுக்கு மேலாக எழும்பும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.

தேவனை உண்மையாக நேசிக்கிற மக்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் உண்மையாகவே தேவனுடைய பிள்ளைகளாயிருந்தாலும், அவர்களும் தோல்வியடைகிறார்கள். கிறிஸ்தவ வாழ்க்கைக்குத் தேவன் உத்தேசித்துள்ள மகிழ்ச்சி அவர்களிலில்லை. எழுப்புதல் அவர்களுடைய வாழ்க்கையில் அத்தியாவசியத் தேவையாயிருக்கிறது. உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ? என்று சங்கீதக்காரன் எழுதினார்.

கிறிஸ்தவ வாழ்க்கை நம்பிக்கையற்ற ஒன்றல்ல. தம்முடைய மக்களை உயிர்ப்பிக்கத் தேவன் ஆவலோடிருக்கிறார்; நமக்கு வெற்றிதரவும் அவர் ஆயத்தமே. உயிர்மீட்சியில் தேவன் தம்முடைய மக்களைச் சந்திக்கும்போது அதன் விளைவு அசாதாரணமான மகிழ்ச்சியே. அச்சமயத்தில் தேவன் தங்களுக்கு வெற்றியளித்திருப்பதால் தேவஜனம் குதூகலிக்கிறது. நம்மில் பலரும் நம்பிக்கையை இழந்துவிட்டோம். ஆனால், நாம் அப்படிப்செய்யத் தேவையில்லை. தேவன் இன்னும் தமது அரியணையில் அமர்ந்திருக்கிறார். தமது மக்களை உயிர்ப்பிக்க அவரால் கூடும்; உங்களது இருதயத்தையும் அவர் உயிர்ப்பிப்பார்.

டெல் ஃபேசன்ஃபெல்ட் என்ற ஊழியர் 1970-களில் அமெரிக்காவின் எழுப்புதலைக்குறித்த பாரங்கொண்டார். நாடு முழுவதுமுள்ள திருச்சபைகளில் எழுப்புதலின் செய்தியைப் பரவச்செய்ய அவர் முயற்சித்தார். டெல் அநேக ஆண்டுகளுக்குமுன் மரித்துப்போனபோதிலும், அவர் ஆரம்பித்த ஊழியம் இன்றும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது; அந்த ஊழியம் அமெரிக்காவிலுள்ள திருச்சபைகளின் ஆவிக்குரிய எழுச்சிக்காக செயல்படும் குழுமங்களில் மிகப்பெரியது என்றுகூடச் சொல்லலாம். தேவன் சிங்காசனத்தில் வீற்றிருக்குமட்டும், சூரியன் உதிப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு திண்ணமே உயிர்மீட்சி உருவாவதும் என்று டெல் ஒருமுறைக் கூறினார்.

இது உண்மைதான்; எழுப்புதல் சாத்தியமானதுதான். ஆகவே, உங்கள் வாழ்க்கையில் வெற்றியும் கூடுமானதே. சூழ்நிலைகளுக்கு அடிமையாக நீங்கள் வாழவேண்டியதில்லை. அச்சூழ்நிலைகள் எவ்வளவு பயங்கரமாய்த் தோன்றினாலும், தேவன் அரியணையில் அமர்ந்திருப்பதால் நீங்கள் வெற்றியோடு வாழலாம். தேவனே நம்முடைய வெற்றியின் மூலாதாரம். சோர்ந்துபோனவர்களுக்குப் புதுப்பெலன் கொடுப்பவர் அவரே. தேவனைத் தேடும்படி உங்கள் இருதயத்தில் தீர்மானியுங்கள். உங்கள் இருதயத்தை உயிர்ப்பிக்கும்படி அவரை வேண்டுங்கள். பரத்துக்கு நேராக உங்கள் முகத்தைத் திருப்புங்கள். அவர் உங்களை உயர்ப்பிப்பார்; எல்லாச் சூழ்நிலைகளிலும் அவர் உங்களுக்கு வெற்றியளிப்பார்.