Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
பரிந்துபேசுகிறவர்கள் பரத்தின் இரகசிய வீரர்கள்

அது ஒரு சரித்திரம் படைத்த நேரம். மால்டோவாவிலுள்ள ஒரு கால்பந்தாட்ட அரங்கத்தில் நற்செய்தியைக் கேட்க முதன்முறையாக ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தார்கள். அந்நாட்களில் மால்டோவா சோவியத் யூனியனின் ஒரு பாகமாயிருந்தது. கிறிஸ்தவர்கள் துன்பப்படுத்தப்பட்டார்கள். வாழ்க்கை மிகவும் கடினமாயிருந்தது. எல்லாரும் நாத்தீகத்தைக்குறித்து மூளைச்சலவைச் செய்யப்பட்டிருந்தார்கள். ஆனால், தேவன் நற்செய்திப் பணிக்கு வாசல்களைத் திறக்கும்படி விசுவாசிகள் ஜெபித்தார்கள்; அவரும் அவ்வாறே செய்தார். அந்த நாள்தான் அது.

கிறிஸ்துவின் நாமத்தை அறிவிக்க நான் எழும்பிநின்றபோது அதிகமாய்ப் பதட்டமடைந்தேன். என் உள்ளத்தில் கேள்விகள் எழும்பின. மக்கள் என்ன நினைப்பார்கள்? கிறிஸ்துவிடம் வரும்படி கொடுக்கப்படுகிற பகிரங்க அழைப்புக்கு அவர்கள் கீழ்ப்படிவார்களா? கல்லூரி மாணவர்களிடம் இயேசுவைக்குறித்துக் கூறியதற்காக அநேக ஆண்டுகளுக்குமுன் சோவியத் யூனியனிலிருந்து நான் நாடுகடத்தப்பட்டேன். ஆனால், இப்போது இரட்சிப்பாகிய தேவனுடைய மகாப்பெரிய ஈவை அறிவிப்பதற்கு நான் எழும்பிநிற்கிறேன்.

அன்று மாலை என்னுடைய செய்திக்குப்பின் கிறிஸ்துவிடம் வரும்படி மக்களுக்கு அழைப்புக்கொடுத்தேன். கிறிஸ்துவை அறிந்துகொள்ள ஆசிக்கிறவர்கள் உங்கள் கரங்களை உயர்த்துங்கள், நான் உங்களுக்காக ஜெபிப்பேன் என்று நான் முதலாவது சொன்னேன். ஆனால் யாரும் கைகளை உயர்த்தவில்லை. தேவனே, இப்போது நான் என்ன செய்யவேண்டும் என்று ஜெபித்தேன். தொடர்ந்து அழைப்புக் கொடுத்துக்கொண்டேயிரு என்று ஆவியானவர் என்னிடம் பேசினார்.

கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து அவரைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் மேடைக்கு அருகில் வரும்படி நான் அழைப்புக்கொடுத்தேன். ஒருவரும் வரவில்லை. நான் மறுபடியும் ஜெபித்தேன்; ஆனால், எல்லாம் தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள்ளிருப்பதாக அவர் என்னை உணர்த்தினார். நான் எட்டிப்பார்த்தபோது, ஒரு சாதாரணமான ஏழைப் பெண்மணி தனியாகத் தன் இருக்கையிலிருந்து எழும்பி வருகிறதைக் கண்டு வியப்படைந்தேன். அவள் தன் தலையில் ஒரு பூக்கொத்தைச் சுமந்து வந்தாள். ஏராளமான மக்களைக் கடந்து தன்னந்தனியாய் மேடையண்டை வந்தாள். பூக்கொத்தை என்னிடம் கொடுத்துவிட்டு, அங்கு முழங்காற்படியிட்டு தேவனை நோக்கிக் கதற ஆரம்பித்தாள்.

அவள் ஜெபிக்க ஆரம்பித்ததும் நான் மக்களைப் பார்த்தேன். அவர்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு பத்தும் நூறுமாக முன்வந்தார்கள். அது ஒரு நம்பமுடியாத காட்சியாயிருந்தது. அந்த மாலையில் சுமார் 2500 பேர் கிறிஸ்துவுக்குத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள்.

அந்த ஏழைப்பெண்ணின் தைரியம் என்னை மிகவும் அசைத்துவிட்டது; எனவே இந்தச் சம்பவத்தைக்குறித்து எங்கள் செய்தித்தாளில் நான் எழுதினேன். அதோடு சம்பந்தப்பட்ட படங்களும் அதில் அச்சிடப்பட்டன. அதற்குச் சில நாட்களுக்குப்பின் ஒரு பெண்மணி என்னைத் தொலைபேசியில் அழைத்தார்கள்; அவர்களும் என் மனைவியும் ஒரு ஜெபக்குழுவின் அங்கமாயிருந்தார்கள். சேமி, நான் உங்கள் அலுவலகத்துக்கு வரலாமா? நான் ஒன்றை உங்களிடம் காண்பிக்கவேண்டும் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். நானும் சரியென்றேன்.

வெகுசீக்கிரத்தில் அவர்கள் என் அலுவலகத்துக்கு வந்தார்கள்; தன்னுடைய ஜெபக்குறிப்பேட்டையும் கொண்டுவந்திருந்தார்கள். தேவன் தன்னிடம் ஜெபிக்க வலியுறுத்திய காரியங்களை ஒவ்வொருநாளும் அதில் பதிவு செய்திருந்தார்கள். மால்டோவா கூட்டங்களுக்காக அவர்கள் இரண்டு மாதங்கள் ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். மால்டோவாவிலுள்ள ஒரு சாதாரண ஏழைப் பெண், தேவன் தன்னிடம் சொல்லுவதைச் செய்யும்படி தைரியம் பெற்றுக்கொள்ளுவதற்காக ஜெபிக்கும் பாரத்தைத் தேவன் அவர்களுக்குக் கொடுத்தார். அதை அவர்கள் தன் ஜெபக்குறிப்பேட்டில் எழுதியிருந்தார்கள்.

நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். அமெரிக்காவிலுள்ள ஒரு பெண்மணி ஜெபித்தார்கள், தேவன் மால்டோவா நாட்டை அசைத்தார். ஒரு சாதாரணப் பெண்ணின் இருதயத்தை ஜெபம் ஆயத்தஞ்செய்தது; அதினால் தேவன் ஒரு அற்புதத்தைச் செய்யக்கூடியதாயிற்று. நாம் பரலோகத்துக்குச் செல்லும்போது அங்குள்ள வீரர்கள் சிறந்த மேடைப்பேச்சாளர்களாயிருக்கத் தேவையில்லை என்று நாம் கண்டுகொள்ளுவோம் என்று நான் நம்புகிறேன். அவர்கள் மனிதருக்கு நன்றாய் அறிமுகமானவர்களாயிருக்கவும் தேவையில்லை; ஆனால் நிச்சயம் அவர்கள் தேவனுக்கு நன்றாய்ப் பழக்கமுள்ளவர்களாய்த்தானிருப்பார்கள்; ஏனெனில், அவர்கள் ஜெபத்தில் தேவனோடு தனித்திருந்தார்கள்.

நீயோ ஜெபம்பண்ணும்போது, அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார் (மத்.6:6) என்று இயேசு சொன்னார். தேவனுடைய இரகசிய வீரர்கள் யார்? என்று நாம் ஒருநாள் கண்டுகொள்ளுவோம். அவர்கள் அந்தரங்கத்தில் செய்த ஜெபங்களினால் தேவனுடைய இராஜ்யத்தின் சரித்திரத்தை எழுதினவர்களே.