Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
அவிசுவாசமுள்ள தலைமுறையை ஜெபம் ஆயத்தப்படுத்துகிறது

எத்தியோப்பியா நாடு 19 ஆண்டுகளாக கம்யூனிசத்தின் ஆதிக்கத்திலிருந்தது. இறுதியாக, கிறிஸ்தவர்கள் ஆராதிக்க சுயாதீனம் வந்தபோது, அந்த நாட்டிலுள்ள விசுவாசிகளுக்கிடையில் ஒரு பிரிவினையுண்டாயிற்று. இக்காரணங்கள்கொண்டு ஆடிஸ் அபாபா பட்டணத்தில் 26 ஆண்டுகள் எந்தவித நற்செய்திப் பெருவிழாக்களும் நடைபெறவில்லை. ருவாண்டாவிலிருந்து ஜோசப் என்னும் போதகர் எத்தியோப்பியாவிற்குச் சென்று எங்கள் ஊழியத்தைக்குறித்து அங்கு அறிவித்தார். அநேக ஜெபங்களுக்குப் பதில்பெற்ற அனுபவம் அவருக்கிருந்தது. ருவாண்டா, புரூண்டி போன்ற கடினமான நாடுகளில் தேவன் நற்செய்திக்கு வாசல்கள் திறந்ததை அவர் கண்டிருக்கிறார். தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று அவர் அறிந்திருந்தார்.

நான் எத்தியோப்பியாவிற்கு ஒரு நற்செய்திக்கூட்டத்தில் பங்கெடுக்க வருகிறேனென்று ஜோசப் அந்தப் பட்டணத்திலுள்ள கிறிஸ்தவத் தலைவர்களிடம் சொன்னார். அப்போது அங்குள்ள போதகர்களும் தலைவர்களும் ஜெபித்துவிட்டு, அங்கு ஒரு நற்செய்திப் பெருவிழா நடத்துவது தேவனுடைய சித்தமென்று ஒத்துக்கொண்டார்கள். எனவே நான் அங்கு சென்றேன், தேவனுடைய ஆவியானவர் அற்புதமாய் அசைவாடினதைக் கண்டேன். பரிசுத்தஆவியானவரின் அருள்மாரி ஊற்றப்படுவதற்காக அங்குள்ள விசுவாசிகள் பேராவல் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஜெபித்தார்கள், தேவனுடைய வல்லமையுள்ள கரம் செயல்பட்டதைக் கண்டார்கள். நான்கு நாட்கள் நடந்த கூட்டத்தில் மூன்று இலட்சத்துக்கு அதிகமானோர் பங்கெடுத்தார்கள்; ஆயிரக்கணக்கானோர் தங்களைக் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்தார்கள்.

இவ்வாறு தேவன் அற்புதமான முறையில் அங்கு செயல்பட்டதின் காரணத்தை அக்கூட்டங்களில் நடந்த ஒரு சம்பவம் உறுதிப்படுத்திற்று. கால்பந்தாட்ட மைதானத்தில் கட்டப்பட்டிருந்த மேடையில் நான் உட்கார்ந்திருந்தேன். எனக்குப் பின்னாக ஒரு இடத்தில் 200 ஆண்கள் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டேன். சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு இவர்களுக்குப்பதில் வேறு 200 பேர் அங்கு வந்தார்கள். அந்தக்கூட்டம் முடிவடையுமுன் இவ்வாறு நான்குமுறை நடந்தது.

கூட்டத்தின் முடிவில் நான் கண்டதைக்குறித்து ஒரு போதகரிடம் கேட்டேன். அவர் அதற்குப் பிரதியுத்தரமாக, இவர்கள் ஜெபிக்கிற மனிதர்கள். அரங்கத்துக்குக்கீழே 200 பேர் இருக்கக்கூடிய ஒரு இடம் இருக்கிறது. ஒவ்வொரு 45 நிமிடங்களும் இருநூறுபேர் கொண்ட ஒரு குழு அங்கு சென்று ஜெபித்தார்கள் என்று கூறினார். நான் கேட்டது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அப்படியானால் நான் பிரசங்கித்துக்கொண்டிருந்த நேரத்தில் 800 பேர் எனக்காக ஜெபித்தார்கள். தேவன் இத்தகைய வல்லமையான முறையில் அசைவாடியதில் ஆச்சரியமொன்றுமில்லையே!

நற்செய்திப்பணி தேவனுடைய இருதயத்தின் வாஞ்சை. அழிந்துபோகிற உலகத்தைத் தேவன் நேசிக்கிறாரென்று வேதம் தெளிவாகச் சொல்லுகிறது. உலகத்தைத் தேவன் நேசிக்கிறபடியினால் தேவனுடைய மக்களும் உலகத்தைக்குறித்துக் கரிசனைகொள்ளவேண்டும். அப்படியிருக்குமாயின், இரட்சகரை அறியாத மக்களுக்காக நாம் கண்ணீர்விட்டுக் கதறுவோம். நற்செய்திப்பணியின் வலிமைக்குரிய இரகசியம் ஜெபமே. ஜெபத்தினால் நாம் தேவனோடு நெருங்கிய உறவுகொள்ளுகிறோம்; அவ்வாறாகும்போது உலக மக்களுடைய உள்ளத்துக்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் தேவனுடைய இராஜ்யம் வருவதை நாம் தேடுவோம். தாழ்மையும் தூய்மையுமான மக்களையே தேவன் எப்போதும் நற்செய்திப் பணியில் பயன்படுத்தியிருக்கிறார். அத்தகைய மக்களையே இன்றும் அவர் தேடுகிறார்; ஏனெனில், அவிசுவாசமுள்ள தலைமுறையை ஆயத்தப்படுத்துவது ஜெபமே. ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் (யோவா.6:65) என்று இயேசு சொன்னார். நாம் சிறந்த திட்டமிடுகிறவர்களாகவோ அல்லது திறமை வாய்ந்த பேச்சாளர்களாகவோ இருப்பதால் கிறிஸ்துவின் செய்தி மக்களிடம் சென்று சேரவில்லை. பிதா அவர்களுடைய இருதயங்களில் ஆழமான கிரியை செய்திருப்பதாலேயே நாம் அவர்களை இரட்சிப்புக்கு வழிநடத்துகிறோம். பரிசுத்தஆவியானவரே அவர்களை இரட்சகரிடம் இழுக்கிறார். அழிந்துபோகிற ஆத்துமாக்களின் இருதயங்களில் அந்தகாரத்தின் சுவர்களை உடைத்தெறிய பரிசுத்தஆவியை ஏவுவது ஜெபமே.

தேவனுடைய ஒழுங்குமுறை மாறவேயில்லை. தாழ்மையும் தூய்மையுமான ஜெபவீரர்களை அவர் இன்றும் தேடிக்கொண்டேயிருக்கிறார். அத்தகைய ஒரு நபரை அவர் கண்டுபிடிக்கும்போது, பரலோகத்தின் பண்டக சாலைகள் திறக்கப்படும்; ஆவிக்குரிய அந்தகர் பார்வையடைவார்கள், உடைந்த உள்ளங்கள் சீராக்கப்படும்.