Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
உயிர்மீட்சியடைந்த சபையின் மாதிரி ஜெபமே

புதிய ஏற்பாட்டுத் திருச்சபை ஜெபக்கூட்டத்தில் பிறந்தது; அது ஜெபவீரரான ஆண்கள், பெண்களால் பராமரிக்கப்பட்டது. இன்றைய விசுவாசிகளுக்கு ஜெபம் ஒரு அசாதாரண அனுபவமாகத் தோன்றினாலும், முதல் நூற்றாண்டுக் கிறிஸ்தவர்களுக்கு ஜெபம் இயற்கையானதொன்றாயிருந்தது. அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்தின் முதலாம் அதிகாரத்தில், விசுவாசிகள் ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள் (வச.14) என்று வாசிக்கிறோம். மூன்றாம் அதிகாரத்தில் பேதுருவும் யோவானும் ஜெபவேளையில் தேவாலயத்துக்குச் சென்றார்களென்றும், அப்போது ஒரு சப்பாணியை ஆரோக்கியப்படுத்தினார்களென்றும் வாசிக்கிறோம். நாலாம் அதிகாரத்தில் சபையார் ஒருமனப்பட்டுத் தேவனை நோக்கிச் சத்தமிட்டு ஜெபித்தார்களென்று வாசிக்கிறோம். இவ்வாறு நடபடிகளின் புத்தகம் முழுவதிலும் திருச்சபை தேவனையே முற்றிலும் சார்ந்திருந்ததாகக் காண்கிறோம்.

திருச்சபைச் சரித்திரத்தின் ஆரம்ப காலத்தில் சபை ஜெபித்தது மாத்திரமல்ல அது வளர்ச்சியுமடைந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் அனுதினமும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் என்று கூறுமளவுக்கு திருச்சபை வேகமாக வளர்ந்தது. ஜெபமே திருச்சபைக்கு உந்தும் சக்தியாக எப்போதும் இருந்தது என்பது சிறப்பானது. சரித்திரம்படைத்த சிறந்த உயிர்மீட்சிகளுக்குப் பின்னால் மறைவான ஜெபவீரர்களிருந்தார்கள். உயிர்மீட்சியடைந்த திருச்சபைகளுக்கு ஜெபமே பொதுவான கொள்கையாயிருந்தது என்பது மறக்க முடியாததாகும்.

உயிர்மீட்சியடைந்த திருச்சபையிலேயே உலகத்தை ஆதாயஞ்செய்யவேண்டுமென்ற புதிய வாஞ்சை பிறந்தது. பொதுவாக அந்த ஒழுங்குமுறை கீழ்க்கண்ட மாதிரியையே பின்பற்றியது: திருச்சபை தூக்கமயக்கமடைகிறது. அதினால் திருச்சபையில் துன்மார்க்கமும் ஆவிக்குரிய நிர்விசாரமும் உண்டாகின்றன. சபை தூங்கினாலும், பரிசுத்த ஆவியானவர் தூங்குவதில்லை. ஒரு சிறு விசுவாசக் கூட்டத்தாரை அவர் தட்டியெழுப்புகிறார்; அவர்கள் உயிர்மீட்சிக்காகவும் புதுப்பித்தலுக்காகவும் தேவனை நோக்கிச் சத்தமிடுகிறார்கள். தேவன் அவர்களுக்குச் செவிகொடுத்துத் தீர்க்கதரிசிகளின் கரிசனையைக் கிளறிவிடுகிறார். அவர்கள் புதுப்பிக்கப்பட்ட வல்லமையோடும் அதிகாரத்தோடும் தேவனுடைய வசனத்தை அறிவிக்க ஆரம்பிக்கிறார்கள். தூங்கிக்கொண்டிருந்த திருச்சபை உறக்கத்தைவிட்டு எழும்புகிறது. பாவங்கள் அறிக்கையிடப்படுகின்றன, பாவ உணர்வு தேவனுடைய பிள்ளைகளின் இருதயத்தைப் பற்றிக்கொள்ளுகிறது; தேவனுடைய மன்னிப்பைப் பெற்றவர்கள் அழிந்துபோகும் உலத்தைக்குறித்த பாரத்தால் மேற்கொள்ளப்படுகிறார்கள். அக்காரணங்கொண்டு திரள்கூட்டமான மக்கள் தேவனுடைய இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கிறார்கள்.

உயிர்மீட்சியின் இத்தகைய சரித்திர அமைப்பு திரும்பத்திரும்ப பின்பற்றப்படுகிறது. சிறப்பான எல்லா எழுப்புதல்களுக்கும் ஆரம்பம் ஜெபமே. அது தாழ்மையுள்ள இருதயங்களின் ஏக்கமாகும். தேவனே, நீர் எனக்குத் தேவை; உம்மாலல்லாமல் என்னால் ஒன்றுஞ் செய்யக்கூடாது என்று ஜெபம் கூறுகிறது. ஜெபம் தேவனை முற்றிலும் சார்ந்து வாழுவதே. தேவனுடைய மக்கள்மீது அவருடைய கிருபை வெளிப்படுவதே உயிர்மீட்சியாகும். அந்தக் கிருபை எளிமையான இருதயத்திலேயே எப்போதும் ஊற்றப்படுகிறது. தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது (யாக்.4:6) என்று வேதத்தில் வாசிக்கிறோம். தேவன் பெருமையை வெறுக்கிறார்; ஆனால், தாழ்மையுள்ளவர்களுக்கு நேராய் கருணையும் இரக்கமும் காண்பிக்கிறார். ஜெபிக்கிற சபை எப்போதும் உயிர்மீட்சிக்கு ஆயத்தஞ்செய்கிறது.

1978-ல் ஜெர்மனி நாட்டில் ஒரு சிறிய திருச்சபையின் போதகராகப் பதவியேற்றேன். அமெரிக்க இராணுவ வீரர்களின் குடும்பத்தினரே அதில் அதிக அங்கத்தினராயிருந்தனர். திருச்சபை மக்களின் கவலையீனத்தினால் நான் மிகவும் மனம் நொந்தேன். ஒரு சிறு கூட்டம் ஆண்களை என்னிடம் அழைத்து, அவர்களுக்கு ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கத் தீர்மானித்தேன். வாரத்தில் ஒருநாள் சுமார் 15 முதல் 20 வரையிலும் ஆண்கள் என்னோடு ஜெபிக்கக் கூடிவந்தார்கள். அவர்கள் தேவனோடு நிரந்தரமாகத் தனிமையில் சமயஞ் செலவிட ஆரம்பித்தபோது, தேவன் அவர்களுடைய இருதயங்களில் ஆழமாகக் கிரியைசெய்தார். எங்கள் சுவிசேஷப் பணிக்கு ஜெபமே அடிப்படைத் திட்டமாயிற்று. அந்த மனிதர்களுடைய இருதயங்களிலும் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரின் இருதயங்களிலும் தேவன் வல்லமையாய்க் கிரியைசெய்ய ஆரம்பித்தபோது, திருச்சபை வேகமாய் வளருவதைக் கவனித்தோம். சில மாதங்களுக்குள் வருகிற எல்லா மக்களுக்கும் இடங்கொடுக்கத்தக்கதாக இருக்கைகளை மாற்றியமைத்தோம். சீக்கிரத்தில் நாங்கள் ஒன்றைவிடக் கூடுதல் ஆராதனைகள் நடத்தவேண்டியதாயிற்று. அதற்குச் சிலகாலத்துக்குப்பின் ஞாயிறு மாலை ஆராதனையைப் பக்கத்திலுள்ள உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தில் நடத்தவேண்டியதாயிற்று. தேவன் அசைவாட ஆரம்பித்தபோது, அவருடைய வசனத்துக்குப் பசிதாகங்கொண்டவர்களைத் திருப்திசெய்வது கடினமாயிற்று.

நடந்தது என்ன? ஆண்களும் பெண்களும் ஜெபிக்க ஆரம்பித்தார்கள், தேவனுடைய ஆவியானவர் ஊற்றப்பட்டார். ஆதித்திருச்சபையிலும் நடந்தது இதுவே. தேவன் மாறவில்லை. அவருடைய வழிமுறைகள் வேறுபடலாம். ஆனால், அவருடைய கொள்கைகள் எப்போதும் அவ்வாறே இருக்கின்றன. ஜெபிக்கிற சபை உயிர்மீட்சியை உருவாக்கும் சபையாகிறது.