Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
எழும்புதல் ஜெபமாகிய செட்டைகளில் இறங்குகிறது

என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் நான் அனுபவித்த மிகவும் வினயபூர்வமான நேரமது. உபவாசத்தைக்குறித்து நான் புத்திபூர்வமாக அறிந்துகொள்ளுவதற்குமுன். அதின் உண்மையான கருத்தை நான் அந்நாட்களில தெளிவாகக் கற்றுக்கொண்டேன். நான் முயற்சித்தாலும் என்னால் உண்ண முடியவில்லை. நான் காலையில் எழும்பியபோதெல்லாம் இரட்சகரோடு சமயம் செலவிடவே என் இருதயம் வாஞ்சித்தது. தேவனுடைய பிரசன்னத்தின் உணர்ச்சி அதிகமாயிருந்ததால் எங்களில் பலரும் ஜெப அறையில் அதிக மணிநேரத்தைச் செலவிட்டோம். காலம் நின்றுபோனதுபோல எங்களுக்குத் தோன்றியது. அந்நாட்களில் பரலோகம் பூலோகத்துக்கு இறங்கிவந்ததுபோலிருந்தது. ஒரு இளம் விசுவாசியான நான் எழுப்புதல் என்று அழைக்கப்படுவதை முதலாவதாகச் சந்தித்த அனுபவம் அதுவே.

இந்த எழுப்புதல் அனுபவம் வந்தபோது, நானும் என்னுடைய மனைவியும் புதிய தம்பதிகளாயிருந்தோம். லூசியானாவிலுள்ள மன்ட்ரோவில் ஊழியஞ்செய்த ஒரு பக்தியுள்ள போதகர், அவருடைய சபையில் வாலிபர்களுக்காக நற்செய்திக்கூட்டம் நடத்தும்படி என்னைக் கேட்டுக்கொண்டார். அங்குள்ள வாலிபர்களைச் சந்திக்கும்படி நான் முயற்சித்தேன்; ஆனால் அவர்களில் எந்த ஆர்வமுமில்லாதிருந்தது. ஆயினும் அந்தப் போதகர் என்னிடம், நான் ஜெபித்துக்கொண்டேயிருக்கிறேன், தேவன் பெரிய காரியங்களைச் செய்யப்போகிறார் என்று கூறி என்னை ஊக்கப்படுத்தினார். அவருடைய விசுவாசம் எனக்கிருந்தால் நலமாயிருக்குமே என்று நான் எண்ணினேன்.

வாலிபர்களுக்கான அக்கூட்டம் அந்தப் போதகருடைய ஆலயத்தில் ஒரு புதன்கிழமை மாலையில் ஆரம்பித்தது. அந்தக் காலகட்டத்தில் அநேக வாலிபர்கள் திருச்சபைகளைவிட்டு மொத்தமாக வெளியேறியிருந்ததால் அன்று வெகு சிலரே கூட்டத்துக்கு வந்திருந்தனர். பொதுவாக வாலிபர்களுடைய கலாச்சாரத்தில் போதை மருந்து பயன்படுத்தும் பழக்கம் வேகமாக பரவிக்கொண்டிருந்தது. வியட்நாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. இனப்பகைக் கூடிக்கொண்டிருந்தது. ஆவிக்குரிய காரியங்களைக்குறித்த ஆர்வம் அவர்களுக்குள் மிகக் குறைவாகவே காணப்பட்டது.

ஆனால், அந்தப் போதகருடைய கண்கள் கலாச்சாரத்தின்மீதோ அலலது அவருடைய சூழ்நிலைகளின்மீதோ வைக்கப்படவில்லை; அவருடைய பார்வை இரட்சகர்மீதே பதிக்கப்பட்டது. அவர் ஜெபித்தார், கூடுதல் ஜெபித்தார், அவர் ஜெபித்துக்கொண்டேயிருந்தார். ஜெபத்தைக் கைவிட அவர் மறுத்துவிட்டார். நான் ஜெபித்துக்கொண்டேயிருந்தேன், எனவே, தேவன் ஒரு அற்புதத்தைச் செய்யப்போகிறார் என்று அந்தப் போதகர் சொல்லிக்கொண்டேயிருந்தார். ஆனால், முதல் புதன்கிழமை இரவு சிறப்பானதொன்றும் நடைபெறவில்லை. வந்திருந்த சிறிய கூட்டத்திற்கு நான் என் இருதயத்திலிருந்து பிரசங்கித்தேன். ஆனால், அழைப்புக் கொடுக்கப்பட்டபோது யாரும் முன்வரவில்லை. வியாழக்கிழமையும் நான் என் எல்லா வல்லமையோடும் பிரசங்கித்தேன். அன்றும் ஒன்றும் நடைபெறவில்லை. நான் மக்களுக்கு அழைப்புக் கொடுத்தபோது யாரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால், அன்று கூட்டம் முடிவடையப்போகிற தருணத்தில் ஒரு மனிதன் முன்வந்து போதகரோடு ஜெபித்தார். அதன்பின் அவர் அங்கிருந்த மக்கள், குறிப்பாக இளைஞர்கள் தன்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டார். வாலிபர்களுக்குத் தான் தகுந்த மாதிரியாயிருக்கவில்லையென்று அவர் அறிக்கையிட்டார். அவர் உட்கார்ந்ததும் சிறப்பானதொரு காரியம் நடைபெற்றது. தேவன் திருச்சபையைச் சந்தித்தார். அன்று நடைபெற்றதை விவரிக்க எனக்கு வார்த்தைகளில்லை. அநேக மக்கள் முன்வந்து, கண்ணீரோடு தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு பாவமன்னிப்பைப் பெற்றுக்கொண்டார்கள்.

வெள்ளி இரவு ஆலயம் நிரம்பியிருந்தது. தேவன் வல்லமையாய் அசைவாடினார். சனி இரவும் ஏராளமான மக்கள் கூடிவந்தார்கள். ஞாயிறன்று அதுவரையிலும் இல்லாத கூட்டம் ஆலயத்துக்கு வந்தது. அந்த பக்தியுள்ள போதகர் என்னிடம் வந்து, சேமி, இது இந்த எழுப்புதலின் முடிவல்ல, வெறும் ஆரம்பமே; இந்தக் கூட்டங்களை ஒருவாரங்கூட நாம் தொடரவேண்டும் என்று சொன்னார்.

அவ்வாறே கூட்டங்கள் நீடிக்கப்பட்டன. போதுமான இடவசதியில்லாததால் நாங்கள் பெரியதொரு கட்டடத்துக்குக் கூட்டங்களை மாற்றினோம். இவ்வாறு கட்டடங்களை மாற்றிக்கொண்டே சென்று, இறுதியாக ஆயிரக்கணக்கான மக்கள் உட்காரக்கூடிய நகராட்சி அரங்கத்துக்குச் சென்றோம். அந்தப் பட்டணத்திலுள்ள பயங்கரமான போதைப்பொருள் வியாபாரிகளிலொருவர் இரட்சிக்கப்பட்டார். முப்பது ஆண்டுகளுக்கப்புறமும் அன்னார் இன்னும் கிறிஸ்துவுக்காகவே வாழுகிறார். இரண்டு இனத்துக்குரிய மக்கள் கிறிஸ்துவுக்குள் வந்தபடியால் அவர்களுடைய தலைவர்களுக்கிடையேயிருந்த பகை குறைந்தது. அங்குள்ள நாளிதழ்களில் இந்த எழுப்புதலைக்குறித்து முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டது. தொலைக்காட்சி செய்திகளும் அதை அறிவித்தன. முப்பது ஆண்டுகளுக்குப்பின்னும் அந்தக் கூட்டங்களில் இரட்சிக்கப்பட்டவர்களிடமிருந்து இன்னும் எனக்குக் கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

குறைந்த எண்ணிக்கையில் ஆரம்பித்த அக்கூட்டங்கள் ஆயிரங்களோடு முடிவடைந்தது. ஆனால், அந்த எழுப்புதல் எளிமையும் தூய்மையுமுள்ள ஜெபித்த ஒரு போதகரிலிருந்தே ஆரம்பமானது. இவ்வாறுதான் எப்போதும் எழுப்புதல் ஆரம்பமாகிறது. எழுப்புதல்களின் சரித்திரத்தை நாம் படிக்கும்போது எந்த விதிவிலக்குமின்றி எழுப்புதல் ஜெபிக்கும் ஒரு கூட்டம் மக்களிலிருந்தே ஆரம்பிக்கிறது. ஜெபக்கூட்டத்திலிருந்தே திருச்சபை பிறந்தது; ஜெபத்தினாலேயே அது வளர்ச்சியடைந்தது. மகாப்பெரிய அகில உலக மிஷனெரி இயக்கம் ஒரு ஜெபக்கூட்டத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட்டது.

ஆகா, தேவனுடைய மகிமை ஜெபமாகிய இறக்கைகளிலேயே எப்போதும் இறங்கி வருகிறது!