Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
எழுப்புதலும் வெற்றியான ஜெபமும்

இரண்டு நூற்றாண்டுகளுக்குமுன் வாழ்ந்த சிறந்த ஆங்கிலப் போதகர் சார்லஸ் ஸ்பர்ஜன் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்: கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் நம்முடைய நாட்டின்மீது இறுதியாக விடிந்திருக்கிறது. எங்கும் ஊக்கமான செயல்பாடுகளுக்கும் கூடுதல் உற்சாகத்துக்குமான அடையாளங்கள் காணப்படுகின்றன. ஜெபத்தின் ஆவி நம்முடைய சபைகளைச் சந்திக்கிறது. பலத்த காற்றின் முதல்வேகம் ஏற்கனவே காணப்பட்டாயிற்று; ஊழியக்காரர்கள்மீது அக்கினிமயமான நாவுகள் இறங்கியாயிற்று என்பது அவருடைய வார்த்தைகள்.

போதகர் ஸ்பர்ஜன் விவரித்துள்ள ஜெபத்தின் ஆவியே கிறிஸ்தவ சபையின் எல்லா உயிர்மீட்சிக்கும் மூலாதாரமாய் எப்போதும் இருந்திருக்கிறது. நாம் புதிய ஏற்பாட்டை ஆராய்ந்தாலும் அல்லது சரித்திரத்தின் கூடங்களில் பார்த்தாலும் எழும்புதலுக்கு முன்னோடி எப்போதும் ஜெபமே. திருச்சபை ஜெபக்கூட்டத்திலேயே பிறந்தது என்று அப்போஸ்தலர் ஒன்றில் காண்கிறோம். அடுத்த அதிகாரத்தில் 3000 மக்கள் இரட்சிக்கப்பட்டார்கள் என வாசிக்கிறோம். அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகம் முழுவதிலும் சபை ஜெபித்தது, தேவன் அசைவாடினார் என்பதையே காண்கிறோம். முதல் பெரிய மிஷனெரி இயக்கம் ஜெபத்தில் ஆரம்பித்தது. காலங்கள்தோறும் ஒரு நபரோ அல்லது ஒரு சிறுகூட்டம் மக்களோ ஜெபித்ததின்பலனாகத் திருச்சபை வேகமாய் முன்னேறியது.

வெற்றியான ஜெபம் எழுப்புதலுக்கு அஸ்திவாரம்போடுகிறது. கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்ற சிறந்த ஆவிக்குரிய எழுப்புதல்களை நான் ஆராய்ந்திருக்கிறேன்; அவைகளெல்லாவற்றின் அடிப்படையும் ஜெபமே என்பதைக் கண்டுகொண்டேன். உயிர்மீட்சிக்கான பாரத்தை ஒருவர் பெற்று, அதற்காக ஜெபிக்க ஆரம்பிக்கிறார். இவ்வாறு மக்கள் தேவனுக்கு முன்பாகக் காத்திருக்கிறார்கள்; குறித்த காலத்தில் அவர் அவர்களுடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார். அவர்கள் தேவனைச் சந்திக்கிறார்கள்; தேவன் அவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்துகிறார்.

நான் முதல்முறை எழுப்புதலை அனுபவித்தபோது, திருச்சபைக்குள்ளும் சுவிசேஷக் கூட்டங்களுக்குள்ளும் ஜெப ஆவி பரவிச் சென்றிருந்தது. அது ஒரு ஜெபிக்கிற போதகரிடமிருந்து ஆரம்பித்திருந்தது. அவர் ஜெபத்தைக் கைவிடவோ நிறுத்தவோ மறுத்தார். சூழ்நிலைகள் அந்தகாரமானதாயிருந்தாலும் அவர் தொடர்ந்து ஜெபித்தார். திடீரென்று ஒருநாள் தேவன் வந்து தம்முடைய மக்களைச் சந்தித்தார். தேவன் வரும்போது அவர் எல்லாவற்றிலும் குறுக்கிடுகிறார். ஞாயிற்றுக்கிழமை முடிவடையவேண்டிய சுவிசேஷக்கூட்டம் ஒருவாரங்கூட நீடிக்கப்பட்டது. ஆலயம் மக்களால் நிரம்பி வழிந்தது. தேவன் செய்த பெரிய காரியங்களை செய்தித்தாள்கள் வெளியிட்டன. போதைப்பொருளுக்கு அதிககாலம் அடிமைப்பட்டிருந்த மக்கள் இரட்சிக்கப்பட்டு அதிலிருந்து விடுதலை அடைந்தார்கள். இனப்பகை கொண்டிருந்த மக்கள் கிறிஸ்துவுக்குள் சகோதரரானார்கள். தேவனுடைய மக்கள் ஜெபித்தபோது அவர் இறங்கிவந்தார்.

ஏன் இவ்வாறு நடக்கிறது என்று எல்லாவற்றையும் நான் புரிந்துகொண்டேன் என்று நீங்கள் நம்பவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இது ஒரு ஆவிக்குரிய விதியாகும்; இது உண்மையானது. தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துவதில் ஜெபமும் எழுப்புதலும் பங்காளிகளாயிருக்கின்றன. தேவன் வரும்போது அவருடைய மகிமையும் வருகிறது. அவ்வாறு நடக்கும்போது, திருச்சபையின் ஆவிக்குரியநிலையிலும் எண்ணிக்கையிலும் வளர்ச்சி வேகப்படுத்தப்படுகிறது. ஜெபத்தைத் தொடர்ந்து திருச்சபையில் மகாப்பெரிய உயிர்மீட்சி ஏற்படுகிறது; அதைத்தொடர்ந்து ஏராளமான ஆத்தும அறுவடை நடைபெறுகிறது.

ஜெபம் என்பது தேவனோடுள்ள நெருங்கிய தொடர்பே. நாம் தேவனோடு நெருங்கிய தொடர்புகொள்ளும்போது எழுப்புதலின் பாதையிலிருக்கிறோம். தேவனோடு நெருக்கமாயிருக்கிறவர்கள் மார்க்கத்தின் முகமூடியைத் தரிக்கமுடியாது. உண்மையான ஜெபம் நேர்மையான மனந்திரும்புதலைக் கொண்டுவருகிறது. ஆழமான பாவ உணர்வு நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய ஆவியை ஊற்றுகிறது. அவ்வாறு நடைபெறும்போது, நாம் எழுப்புதலின் சாலையில் நடக்கிறவர்களாவோம்.

எழுப்புதலைக்குறித்து இன்று ஏராளம் பேசப்படுகிறது. எனக்கு எழுப்புதலைக்குறித்து ஒரேயொரு காரியம் மாத்திரமே தெரியும்; எழுப்புதல் ஜெபமாகிய இறக்கைகளில் இறங்கிவருகிறது. ஜெபிக்கிற மக்கள் இறுதியில் உயிர்மீட்சியுள்ள மக்களாயிருப்பார்கள். ஜெபித்துவிட்டு தேவன் செய்கிறதைத் தூர நின்று பார்!.