Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
வெற்றியான கிறிஸ்தவ ஜெபமே இயல்பான கிறிஸ்தவ ஜெபம்

என்னுடைய ஜெப வாழ்க்கையில் நான் போராடுகிறேன் என்பது விசுவாசிகளின் பொதுவான கதறுதலாகும். ஜெபம் எனக்கு ஒரு சடங்காக மாறிவிட்டது என்றும், ஒரு சீரான ஜெபவேளையை என்னால் கடைப்பிடிக்கமுடியவில்லையென்றும் என்னிடம் பலர் கூறியிருக்கிறார்கள். சராசரி கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு நாளும் மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் மாத்திரமே ஜெபிக்கிறார்கள்; அதுவும் பொதுவாக உணவு வேளையில்தான். ஆனால், இயல்பான கிறிஸ்தவ ஜெபவாழ்க்கையும், குறிப்பிடத்தக்க கிறிஸ்தவ ஜெபவாழ்க்கையும் வெவ்வேறானவைகளே.

அநேகக் கிறிஸ்தவர்களுக்குத் தாங்கள் ஜெபவீரர்கள் ஆகவேண்டுமென்கிற ஆவல் உண்டென்றும், ஆனால் எங்கு ஆரம்பிக்கவேண்டுமென்று தெரியவில்லையென்றும் உணருவதை நான் கவனித்திருக்கிறேன். வெற்றியான கிறிஸ்தவ ஜெபம் இயல்பான கிறிஸ்தவ ஜெபமே. சிறப்பாகப் பரிந்துபேசுவதற்கு ஒரு இறையியல் வல்லுனரோ புகழ்பெற்ற சொற்பொழிவாளரோ தேவையில்லை; ஏனெனில், ஜெபம் என்பது அறிவைச் சார்ந்ததல்ல; அது தேவனுடைய இருதயமும் மனிதருடைய இருதயமும் கொள்ளும் தொடர்பே. தேவன் சிறந்த பேச்சுத்திறமையை எதிர்பார்க்கவில்லை; அவர் தாழ்மையான இருதயங்களையே தேடுகிறார். தேவனை அறிந்து, அவரில் அன்புகூர வாஞ்சிக்கும் இருதயமுள்ள யாவரும் பரிந்துபேசுவோரின் சேனையில் அங்கம் வகிக்கத் தகுதியானவர்களே.

நம்முடைய ஜெப வாழ்க்கையில் நாம் வெற்றியடைய வேண்டுமேயானால் ஜெபத்தின் தன்மையை நாம் புரிந்துகொள்ளவேண்டும். வெற்றியான கிறிஸ்தவ ஜெபத்தின் முதற்படி, தேவனுடைய பிரசன்னத்திற்குள் நாம் பிரவேசிக்கும்படி நம் ஒவ்வொருவருக்கும் அவர் கிருபையாய்க் கொடுக்கும் அழைப்பே ஜெபம் என்று புரிந்துகொள்ளுவதே. தேவனுடைய சிங்காசனத்தை கிருபாசனம் (எபி.4:16) என்று வேதம் விவரிக்கிறது. முற்றிலும் பரிசுத்தமான தேவனை அணுகுவதற்கு ஒரே வழி அவருடைய கிருபையே. இந்த மகத்துவமான உண்மையை நாம் புரிந்துகொள்ளும்போது ஜெபம் வல்லமையுள்ளதாகிறது; நாம் தேவனோடு செலவிடும் சமயத்தில் சமாதானமும் மகிழ்ச்சியுமடைகிறோம்.

ஒவ்வொரு நாள் காலையிலும் நான் தேவனுடைய சமுகத்தில் ஆச்சரியத்தோடு நிற்கிறேன். தேவனிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்ளவேண்டுமென்று நான் அவருடைய சமுகத்தில் வரவில்லை. ஏனெனில், நான் கேட்கிறதையும் கேட்க எண்ணுகிறதையும்விடக் கூடுதலாகத் தேவன் எனக்குக் கொடுக்கிறார். அவருடைய சமுகத்தில் வருவதின் நோக்கம் இன்னும் நெருக்கமாக அவரை அறிந்துகொள்ளுவதே. அவரை அனுபவிப்பதே ஜெபத்தின் நோக்கமாகும். நம்முடைய பிதாவும் சர்வ வல்லமையுள்ள தேவனும் சமாதானப்பிரபுவும் அகிலாண்டத்தின் அரியணையில் அமர்ந்திருக்கிறவருமாகியவரோடு அன்பின் உறவை விருத்தியடையச் செய்வதற்குரிய நடைமுறையிலான வழியே ஜெபமாகும். அங்கு சலிப்புக்குரியதும் சடங்குக்குரியதும் எதுவுமில்லை. எத்தனை உற்சாகமானது அது! எல்லாரையும், எல்லாவற்றையும் அறிந்திருக்கிற ஒருவரை அறிந்துகொள்ளுவது எவ்வளவு சிறப்பானது!

ஜெபத்தைக்குறித்த இத்தகைய கண்ணோட்டத்தை நாம் விருத்தியாக்கும்போது, அது கடமையாகவல்ல மகிழ்ச்சியாகவும், மார்க்கமாகவல்ல உறவாகவும், தோல்வியாகவல்ல வெற்றியாகவும் ஆகிறது. நாம் ஒருபோதும் முறுமுறுக்காமலும் விசாரப்படாமலும் எப்போதும் தோத்தரிக்கவும் நன்றிகூறவும் விருப்பங்கொள்ளுவோம். வெற்றியோடு நாம் பரிந்துபேசவேண்டுமேயானால் நமக்கு மிகவும் முக்கியமான பண்பு அன்பே. ஜெபம் கிருபையிலிருந்து ஒழுகுகிறபடியால் பரிந்துபேசுகிறவர் தேவனுடைய அன்பில் குளிர்காய்கிறார். அவர் தேவனுடைய அன்பை அனுபவிக்கிறார்; அது தேவனுக்கு நேரான அன்பாக மாறுகிறது. எல்லாவற்றுக்குமேலாக ஜெபம் நமக்கும் தேவனுக்குமிடையேயுள்ள தொலைத்தொடர்புக்குரிய வழியாக மாறுகிறது; தேவன் நமக்குநேரான அவருடைய அன்பை நமக்கு அறிவிக்கிறார், நாம் அவருக்கு நேரான நமது அன்பை வெளிப்படுத்துகிறோம்.

தேவனுடைய இருதயத்துக்கும் மனிதனுடைய இருதயத்துக்குமிடையே உள்ள தொலைத்தொடர்பே ஜெபமாகும். தேவனுடைய இருதயம் முற்றிலும் தூய்மையும் பரிசுத்தமுமானது. அது சர்வ வல்லமை கொண்டது, நித்தியமானது. நம்முடைய இருதயங்களோ அசுத்தமானதும் எல்லாவற்றையும்விடத் திருக்குள்ளதுமாயிருக்கிறது. ஆயினும், இயேசுவின் இரத்தத்தின்மூலமாய் தேவனுடைய பிரசன்னத்துக்குள் பிரவேசிக்கும் சிலாக்கியம் பெற்றிருக்கிறோம். அதுதான் வெற்றியான ஜெபமாகும்; அது தேவனுடைய கிருபையினால் அவரை அறிந்துகொள்ளுவதே.