Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
உங்கள் தரிசனம் என்ன?

மனித சரித்திரத்தில் வெகு சிலருக்கு மாத்திரமே அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்த ஒரு புதிய காலக்கட்டத்திற்குள் பிரவேசித்திருக்கிறோம். நாம் இரண்டாவது ஆயிரம் ஆண்டைக் கடந்திருக்கிறோம். உலகம் முழுவதுமுள்ள மக்கள் ஒரு புதிய யுகத்துக்குள் பிரவேசித்ததைக் கொண்டாடிய சிறப்பான அனுபவத்தை நாம் கண்டு களித்தோம். ஆனால், ஒரு புது ஆண்டையோ அல்லது புது நூற்றாண்டையோ அல்லது புது ஆயிரம் ஆண்டையோ நாம் எதிர்கொள்ளும்போது நம்மைச் சந்திக்கிற மிகப்பெரிய கேள்வி ஒன்றுண்டு; உங்கள் தரிசனம் என்ன? என்பதே அந்தக் கேள்வியாகும். உங்கள் வாழ்க்கையையும் குடும்பத்தையும் சமூகத்தையும் நாட்டையும் உலகத்தையுங்குறித்த உங்கள் தரிசனம் என்ன?

(தீர்க்கத்) தரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப் போவார்கள், அல்லது அழிந்து போவார்கள் என்று வேதம் சொல்லுகிறது. மக்கள் மாத்திரமல்ல தரிசனமில்லாத சபைகளும் ஊழியங்களும் நிறுவனங்களும் அழிந்துபோகும். எந்தத் தரிசனம் பெற்றிருப்பதும் போதாது, தேவனுடைய தரிசனம் பெற்றிருப்பது மிகவும் முக்கியமானதாகும். தேவனால் நம்முடைய இருதயங்களில் உருவாக்கப்பட்டதும் வேதத்துக்கொத்ததுமான தரிசனத்தை நாம் பெற்றிருப்பது தேவையானதாகும்.

ஏசாயா தரிசனம்பெற்ற மனுஷனாயிருந்தார். ஏசாயா 6-ம் அதிகாரத்தில் அவர் பெற்ற தரிசனத்தின் தெளிவான விவரணத்தை வேதம் கொடுக்கிறது. அவருடைய தரிசனம் மூன்று பகுதிகளைக் கொண்டது; அவை மேல்நோக்கியும் உள்நோக்கியும் வெளிநோக்கியுங் காணப்பட்டன. ஏசாயா கண்ட அத்தகைய தரிசனம் இந்தப் புதிய யுகத்துக்குள் பிரவேசித்திருக்கிற நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் தேவை என்று நான் நிச்சயமாய் நம்புகிறேன்.

உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது (ஏசா.6:1) என்று ஏசாயா கூறினார். ஏசாயாவின் மேல்நோக்கிய தரிசனத்தில் அவர் ஆண்டவரைக் கண்டார். சரித்திரத்தின் இந்த மிக முக்கியமான நாட்களில் நாம் காணவேண்டிய மிகச் சிறப்பான தரிசனம் இதுவே. தேவனைக் குறித்த புதிய ஒரு கண்ணோட்டம் நமக்குத் தேவை. அவருடைய தன்மையிலும் பண்புகளிலும் அவரை நாம் காணவேண்டும். பெரிய கட்டிடங்களையும் சிறந்த செயல்திறன்களையும்விட நமக்குத் தேவை தேவனைக்குறித்த புதிய தரிசனமே. அவரை அறிவதும், அவரோடு நடப்பதும், அவருடைய எல்லா மகிமையிலும் அவரைத் தரிசிப்பதுமே நம்முடைய கட்டுக்கடங்கா ஆர்வமாயிருக்கவேண்டும்.

தேவனை, அவருடைய அதிகாரத்திலும் வல்லமையிலும் அரியணையில் அமர்ந்தவராய் ஏசாயா கண்டார். அகிலாண்டத்தின்மீது தேவனுக்கு சகல வல்லமையும் அதிகாரமும் உண்டு என்பதைக் குறிப்பதே அவருடைய சிங்காசனமாகும். தேவன் இன்னும் அவருடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறாரென்பதைப் புரிந்துகொள்ளுவது நமக்கு அத்தியாவசியத் தேவையாகும். அவர் எல்லா வல்லமையையும் அதிகாரத்தையும் கொண்டவராயிருக்கிறார்.

ஏசாயா தேவனை அவருடைய பரிசுத்தத்திலும் தரிசித்தார். சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று தூதர்கள் கூப்பிட்டுச் சொன்னார்கள் (ஏசா.6:3) என்று நாம் வாசிக்கிறோம். எல்லாக் காலங்களிலும் வாழ்ந்த சிறந்த தேவ மனிதர்கள் எவ்வாறாயினும் அவருடைய பரிசுத்தத்தைக்குறித்த அறிவு பெற்றிருந்தார்கள். ஏசாயாவானாலும் நீங்களானாலும் நானாயினும் அதற்கு விதிவிலக்கில்லை. ஏசாயா தேவனை அவருடைய பூரண பரிசுத்தத்தில் தரிசித்தபோது, அவருடைய தூய்மையின் ஒளியில் தான் ஒரு அசுத்தன் என்பதை அவர் கண்டுகொண்டார். நாம் எவ்வளவுக்கதிகமாகத் தேவனைத் தரிசிக்கிறோமோ அவ்வளவுக்கதிகமாக நாம் அவருக்கு ஒத்தவர்களாயில்லை என்பதைப் புரிந்துகொள்ளுகிறோம். அத்தகைய தரிசனம் ஆழமான நொறுங்குதலையும் உண்மையான அறிக்கையையும் உண்டாக்கிற்று. நொறுங்கிய இருதயத்தையும் நருங்குண்ட ஆவியையும் தேவன் புறக்கணியார். அத்தகைய இருதயங்களையே தேவன் தேடுகிறார்.

ஏசாயா கண்ட தரிசனத்தின் இறுதிப் பாகம் அவரைச் சுற்றியுள்ள உலகத்தைக் குறித்ததே. அவர் தேவனையும் தன்னையும் கண்டபோது தேவையும் பாடுகளுங்கொண்ட ஒரு உலகத்தைக் கண்டார். அவருடைய இருதயம் உடைந்தது. அப்போது, யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தை அவர் கேட்டார். அதற்கு அவர் இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றார் (வச.8).

ஏசாயா கண்டதை நாமும் காண்போமேயானால் இயேசுவை அதிகமாய்த் தேவைப்படுகிற ஒரு உலகம் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளுவோம். அந்த உலகத்தை ஆதாயஞ்செய்ய ஆண்டவர் அழைப்பதின் சத்தத்தை நாமும் கேட்போம். உங்கள் தரிசனம் என்ன?