Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
யேகோவா சபாயோத் - சேனைகளின் கர்த்தர்

அந்த மனுஷன் சீலோவிலே சேனைகளின் கர்த்தரைப் பணிந்துகொள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்தோறும் தன் ஊரிலிருந்து போய்வருவான்; அங்கே கர்த்தரின் ஆசாரியரான ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினேகாசும் இருந்தார்கள் (1 சாமு.1:3).

அந்தச் சிறப்பு வாய்ந்த இரவை என் வாழ்நாளில் ஒருக்காலும் என்னால் மறக்கமுடியாது. ருமேனிய நாட்டின் எல்லையில் இரண்டு மணிநேரம் ரயிலில் உட்கார்ந்திருந்தோம். ஏதோ பிரச்சனைபோலத் தோன்றியது. நாட்டிற்குள் பிரவேசிக்க ரயிலை அனுமதிக்க அதிகத் தாமதமானது. அக்காலத்தில் ருமேனிய அரசு கிறிஸ்தவர்களுக்கு எதிரானது, கிறிஸ்தவர்களைக் கொடுமையாகத் துன்பப்படுத்தியது. எனவே, எனக்குச் சற்று கலக்கமாகத்தானிருந்தது.

நான் ரயிலின் ஜன்னல்வழியாகப் பார்த்தபோது, பத்துப் போர்வீரர்கள் ரயிலுக்கு நேராக ஓடிவருவதைக் கண்டேன். என் அருகிலிருந்தவரைப் பார்த்து, யாரோ பிரச்சனையிலிருக்கிறார்கள்போலத் தோன்றுகிறது என்றேன். அந்தப் பிரச்சனையில் இருந்தது நான்தான் என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை. போர்வீரர்கள் ரயிலில் ஏறினார்கள்; அவர்களில் ஒருவன் என்னிடத்தில் வந்து, தன்னோடு போகும்படி என்னை அழைத்தான்.

அந்த இரவு என்னுடைய வாழ்க்கையில் மிகவும் தனிமையான இரவாயிருந்தது. ரயில் அந்த நிலையத்தைக் கடந்துசென்றபின், நான் காவலர்களால் சூழப்பட்டேன். அடுத்து எனக்கு என்ன நேரிடும் என்பது எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை என்னைச் சிறைக்கு அனுப்புவார்களோ என்று எண்ணினேன். அந்த நாட்டிற்குள் பிரவேசிக்க நான் நிச்சயமாய் அனுமதிக்கப்படமாட்டேன் என்பதை உணர்ந்தேன். நான் ருமேனிய நண்பர்களை மிகவும் அதிகமாய் நேசித்ததால், இந்த எண்ணம் என் இருதயத்தை உடைத்தது.

அந்த இரவு லௌகீக பெலன் எதுவும் எனக்கில்லை. என்னைப் பிடித்துவைத்திருந்தவர்களிடமிருந்து தப்பும் ஆற்றலும் எனக்கில்லாதிருந்தது. நின்றுகொண்டிருந்த நான் காவலர்களோடு உட்கார்ந்து அழ ஆரம்பித்தேன். அப்போது ஆகாயத்தைப் பார்த்து, அங்குள்ள நட்சத்திரங்களைக் கண்டேன். வானமண்டலம் உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமை என்று கத்துவதுபோலிருந்தது. நானும் படைப்புக்களோடு சேர்ந்து தேவனைத் துதித்துப்பாட ஆரம்பித்தேன். விசுவாசத்தைத் தூண்டும் சிறந்த ஞானப்பாடல்களைப் பாடினேன். அந்த இரவில் தேவனை நான் சேனைகளின் கர்த்தராகக் கண்டுகொண்டேன். அவர் அகிலாண்டத்தை ஆளுகிற மகத்துவமானவர். வானமண்டலங்களிலுள்ள தூதகணங்களின் அதிபதி அவர். அவரோடு யாரையும் ஒப்பிடமுடியாது; ஏனெனில் அவர் சேனைகளின் கர்த்தர்.

சாமுவேல் தீர்க்கதரிசிதான் தேவனுக்கு இந்த நாமத்தை முதலில் பயன்படுத்தியிருக்கக்கூடும். இஸ்ரவேலின் படைகள் சிறியவைகளும் போர்வீரர் பெலவீனருமாயிருக்க, அவர்களுடைய பகைவர்களோ அநேகரும் அதிக வல்லமையுள்ளவர்களாயுமிருந்தபோது, தேவனை சேனைகளின் கர்த்தராக அவர்கள் அறிந்தார்கள். அவரே வானத்திலும் பூமியிலுமுள்ள எல்லாச் சேனைகளுக்கும் கர்த்தர்; அவரே அவைகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். தேவனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பட்டப்பெயர் வேதத்தில் இருநூற்று அறுபது தடவை வருகிறது.

நம்முடைய பெலவீன நேரங்களில்தான் தேவனை நாம் சேனைகளின் கர்த்தராக அறிந்துகொள்ளுகிறோம். நாம் மிகவும் அற்பமானவர்களாகவும் நம்முடைய பகைவர்கள் பெலமுள்ளவர்களாகவும் தோன்றும்போது, தேவன் தம்மை நமக்கு சேனைகளின் கர்த்தராக வெளிப்படுத்துகிறார். அத்தகைய வேளைகளில்தான் அவரை நாம் பரலோகத்தின் சேனைகளை ஆளுகிற ராஜரீகத் தேவனாக அறிகிறோம். உங்கள் பெலவீன வேளைகளில் அவரிடம் அண்டுங்கள். சேனைகளின் கர்த்தராகிய அவர் உங்கள் பெலனாயிருப்பார். அந்த சேனைகளின் கர்த்தர் ருமேனியாவுக்குள் நான் மறுபடியும் சென்று நற்செய்தியை அறிவிக்க வாசல்களைத் திறந்தார்.