Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
எல் ஓலாம் - அநாதி தேவன்

பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது (ஏசா.40:28).

பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் என் ஊழியத்தை முடித்துவிட்டு வந்தபோது நான் சொன்ன ஒரு காரியம் என் மனைவியையும் நண்பர்களையும் திகைப்புக்குள்ளாக்கியது. நான் மிகவும் களைப்பாயிருக்கிறேன்; இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு, ஊழியத்திலிருந்து விலகலாம்போலத் தோன்றுகிறது என்று சொன்னேன். வீட்டிற்குச் செல்லும் எண்ணம் உனக்கு வந்துவிட்டதா என்று ஒரு நண்பர் அதிர்ச்சியோடு கேட்டார்.

அப்படியல்ல, என் மாம்சம் பெலவீனமானது, நான் களைத்துப்போனேன். இவ்வாறு நான் களைத்துப்போகும்போது, ஊழியத்தைவிட்டு விலகலாம்போலத் தோன்றுகிறது என்று நான் கூறினேன். இரண்டரை வாரக்காலமாக நான் தீவிரமான ஊழியத்திலும் ஆவிக்குரிய போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தேன். சரீரப்பிரகாரமாகவும் உளரீதியிலும் ஆவிக்குரிய நிலையிலும் நான் வறண்டுபோனேன். ஆயினும் நான் ஊழியத்தை விடப்போவதில்லை; ஏனெனில், தேவனுடைய ஆவியும் வல்லமையும் என்னுடைய பெலவீனத்தைவிட மேலானது என்பதை நான் அறிந்திருந்தேன். இனிமேல் தாக்குப்பிடிக்கமுடியாது என்று எண்ணுகிற சில சந்தர்ப்பங்கள் நம் வாழ்க்கையில் வருவதுண்டு. நம்முடைய சரீரம் களைப்படைகிறது, நம்முடைய இருதயம் சோர்ந்துபோகிறது. நமக்குத் தேவனுடைய புத்துணர்ச்சியளிக்கும் உயிர்மீட்சி தேவை.

மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், நமது தேவனுடைய நாமம் அநாதி தேவன் என்பது. அவருக்கு ஆதியுமில்லை அந்தமுமில்லை. அவர் ஆரம்பத்துக்கு முன்னிருந்தார், அவர் முடிவுக்குப் பின்னுமிருப்பார். அவர் அகிலாண்டத்தைப் படைத்தவர். அவர் நித்தியமானவர். அந்தத் தேவன் எல் ஓலாமாயிருப்பதால், அவர் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை, அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது என்று ஏசாயா சொன்னார்.

நம்முடைய தேவனை அநாதி தேவனாக அறிவதினால் இரண்டு உண்மைகளைக் கண்டுகொள்ளுகிறோம். முதலாவது, அவர் சோர்ந்து போவதுமில்லை, இளைப்படைவதுமில்லை. நாம் இளைப்படையும்போது, ஒருபோதும் சோர்வடையாத ஒருவருடைய கரங்களுக்குள் ஓடிச்செல்லலாம். அப்போது நம்முடைய இருதயத்துக்குப் புத்துயிர் தரக்கூடிய கிணறாக அவர் மாறுகிறார். என்னுடைய அறிக்கையினால் என் மனைவியையும் நண்பர்களையும் வியப்புக்குள்ளாக்கியபின், நான் அவர்களைப் பார்த்து, கவலைப்படாதேயுங்கள், நான் ஊழியத்தைவிட்டு விலகப்போவதில்லை; ஏனெனில், சோர்ந்துபோகாத ஒருவரை எனக்குத் தெரியும். அவர் என் இருதயத்துக்கும் ஆத்துமாவுக்கும் சரீரத்துக்கும் புத்துணர்ச்சியளிப்பார் என்றேன். அவரும் அவ்வாறே செய்தார். தேவனை எல் ஓலமாக நாம் அறியும்போது, நாம் எப்போதும் நீர் மொண்டு குடிக்கக்கூடிய நித்தியமான கிணறு நமக்குண்டு. வனாந்தரத்தில் நாம் தாகத்தினால் மாளவேண்டியதில்லை.

தேவனை எல் ஓலமாக அறியும்போது, இன்னொரு சிறந்த உண்மையுமுண்டு. அவருடைய அறிவு பூர்வகாலமுதல் உள்ளது; அவருடைய புத்தி வரலாற்றின் இறுதிக்குப் பின்னாலுமுள்ளது. நம்முடைய பிரயாசங்களின் பலனைக்குறித்த நிச்சயம் நமக்கு இல்லாதிருப்பதால் பலவேளைகளில் நன்மை செய்வதில் நாம் சோர்ந்துபோகிறோம். ஆனால், நம்முடைய தேவன் அநாதி தேவன், நம்முடைய கடந்தகாலத்தையும் வருங்காலத்தையும் நம்பிக்கையோடு அவருடைய கரங்களில் ஒப்படைக்கலாம். அவருக்கு எல்லாம் தெரியும், எல்லாக் காரியங்களும் அவருடைய கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கின்றன. அவருக்கு நம்முடைய சூழ்நிலைகள் தெரியும், அவர் நம்முடைய தேவைகளை அறிவார். அவர் நம்மை உருவாக்கினார். கடந்தகால நித்தியத்தில் நாம் அவருடைய சிந்தையிலிருந்தோம்; வருங்கால நித்தியத்திலும் அவர் நம்மை மறக்கமாட்டார். அவரால் கூடாதது எந்தக் காரியமுமில்லை. ஏனெனில் அவர் எல் ஓலாம், அநாதியான தேவன்.

நீங்கள் களைப்படைந்து, எல்லாவற்றையும் விட்டுவிடலாம் என்று எண்ணும்போது, அநாதியான தேவனுடைய கரங்களுக்குள் ஓடிச்செல்லுங்கள். அவர் உங்களை அறிகிறார், உங்களைப் புரிந்துகொள்ளுவார், உங்களுக்குப் புத்துயிர் அளிப்பார். எத்தகைய அற்புதமான தேவன் அவர்! அவரை நம்புங்கள்.