Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
அடோனாய் - ஆண்டவர்

உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன். அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது (ஏசா.6:1).

என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நேரம் அது. பதினெட்டு வயதுள்ளவனாயிருந்தபோது நான் கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்தேன்; அவர் என்னுடைய பாவங்களை மன்னித்து, என்னுடைய ஆண்டவரும் இரட்சகருமானார். அந்த இரவை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது. ஒரு பெரிய சுமை என்னுடைய தோளிலிருந்து இறக்கப்பட்டதுபோலத் தோன்றியது. என் இருதயம் மகிழ்ச்சியால் நிரம்பியது, இரட்சகரோடு ஏற்பட்ட புதிய உறவினால் நான் உற்சாகமடைந்தேன்.

அந்த இரவில் நான் பெற்ற அனுபவத்தை அன்று செய்திகொடுத்த ஜேம்ஸ் ராபின்சன் என்ற ஊழியரோடு பகிர்ந்துகொண்டேன். அதோடு, தேவன் என்னை ஊழியத்திற்கு அழைக்கிறாரென்றும் அவரிடம் சொன்னேன். அவர் என்னோடு கூறிய வார்த்தைகள் என் வாழ்க்கையின் போக்கைத் தீர்மானித்தன. சேமி, இன்று இரவு உன்னை இரட்சிக்க இயேசு என்ன செய்தார் என்று உனக்குத் தெரியுமா? உன்னுடைய பாவங்களை மன்னிக்க அவர் என்ன கிரயம் கொடுத்தார் என்பதை அறிந்திருக்கிறாயா? என்ற கேள்விகளை அவர் என்னிடம் கேட்டார். நான் அதைக்குறித்துச் சிந்தித்ததேயில்லை. எனவே நான் அவரைப் பார்த்து, நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை என்று சொன்னேன்.

அவர் தொடர்ந்து, இயேசு அன்றும் இன்றும் என்றும் தேவனாயிருக்கிறார். ஆயினும் அவர் தம் மகிமையின் சிங்காசனத்தைவிட்டு இந்த பூமிக்கு வந்தார். அவர் மனித சரீரத்தைத் தரித்துக்கொண்டார். அவர் பாவமற்ற பூரண வாழ்க்கை நடத்தினார். ஆயினும் அவர் மனிதனால் அசட்டைபண்ணப்பட்டார், நண்பர்களால் கைவிடப்பட்டார், பிறரால் நகைப்புக்கும் பரிகாசத்துக்கும் நிந்தனைக்கும் ஆளானார். அவர் பொய்க்குற்றஞ்சாட்டப்பட்டு, அடிக்கப்பட்டு, குரூரமான ரோமைச் சிலுவையில் அறையப்பட்டார். அவர் தேவகுமாரன், ராஜாதி ராஜா, மற்றும் கர்த்தாதி கர்த்தா என்பதை மறந்து போகாதே. அவர் உன்னில் அன்புகூர்ந்ததால் இவை எல்லாவற்றையுஞ் செய்தார் என்று கூறினார்.

பின்னும் அவர் தொடர்ந்து, எல்லாருக்கும் ஆண்டவராகிய இயேசுவே உனக்காக எல்லாவற்றையும் கொடுத்தாரேயாகில், நீயும் அவருக்காக எல்லாவற்றையும் கொடுக்க ஆயத்தமாகவேண்டும். அதாவது, நீ அசட்டைபண்ணப்பட்டாலும், பரிகசிக்கப்பட்டாலும், ஒருவேளை கைது செய்யப்பட்டாலும், கொல்லப்பட்டாலுங்கூட எங்கும் செல்லவும், எதையுஞ் செய்யவும், அவருடைய மகத்துவமான அன்பை யாவரிடமும் கூறவும் ஆவல்கொள்ளவேண்டும் என்றார்.

என்னைத் தேவன் அதிகம் நேசித்ததால், ஆண்டவராகிய இயேசு அடிமையான இயேசுவானார் என்பதை, புது விசுவாசியான நான், அந்த இரவு உணர்ந்தேன். எனவே, அவருடைய கர்த்தத்துவத்திற்கு நான் என்னை ஒப்படைத்தேன். இதுதான் என்னுடைய கடந்தகால வாழ்க்கையில் நான் அனுபவித்த வெற்றியின் மூலாதாரமாகும். அவர் ஆண்டவர், நான் அவரது அடிமை. நாம் தேவனோடு இத்தகைய உறவில் வாழும்போது, கிறிஸ்தவ வாழ்க்கை சிறந்த பயணமாகும்.

ஏசாயா தேவனை இவ்வாறாகக் கண்டார். ஏசாயா ஆண்டவரை, அதாவது அடோனாயைக் கண்டார் என்று வேதம் சொல்லுகிறது. அடோனாய் என்பதின் பொருள் எஜமானன் என்பதுவே. இவ்வாறு ஏசாயா தேவனை ஆண்டவராக அறிந்தபோது, அவர் மக்களுக்கு ஊழியஞ்செய்ய ஏவப்பட்டார். யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தை ஏசாயா கேட்டார் (ஏசா.6:8). ஏசாயா தேவனை ஆண்டவராகத் தரிசித்ததால், இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்று தாமதமின்றி பதில் சொல்லக் கூடியதாயிற்று.

நீங்கள் தேவனை ஆண்டவராக (அடோனாயாக) அறியும்போது, நீங்களும், அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும். நீர் அனுப்புகிற இடத்திற்கு நான் செல்லுகிறேன்; நீர் செய்யச் சொல்லும் காரியங்களைச் செய்வேன்; நீர் பேசச் சொல்லும் கரியங்களைப் பேசுவேன். நீர் என் எஜமான், நான் உமது அடிமை; என்னை அனுப்பும் என்று நீங்களும் சொல்லுவீர்கள்.