Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
எல் எலியோன் - உன்னதமான தேவன்

வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன் (ஆதி.14:23).

எனக்கு விவாகமாகி இரண்டு ஆண்டுகளுக்கப்புறம் நானும் என் மனைவியும் சிக்காகோவில் மிகவும் அதிகமாகக் குற்றங்கள் நிறைந்த ஒரு பகுதிக்கு குடிபெயர்ந்தோம். மற்று யாரும் கவலைப்படாத மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கவேண்டுமென்ற பாரம் எங்களுக்கு இருந்தது. தெருக்களில் செயல்படும் கொலைபாதகக் கும்பல், வேசிகள், வீட்டைவிட்டு ஓடியவர்கள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானோர் போன்றோர் மத்தியில் நாங்கள் உழைத்தோம்.

அப்பட்டணத்தில் ஓல்ட்டவுண் என்ற பகுதிக்கு நாங்கள் பலவேளை நற்செய்திப் பகிர்ந்துகொள்ளச் சென்றோம். அங்கு ஹிப்பிகள், விலைமாதர்கள், கேளிக்கை விடுதிக்கு வருபவர்கள் மற்றும் மார்க்கப்புரட்டர்கள் போன்றோரைக் காணலாம். அங்குள்ள ஒரு இரவு விடுதியின் பணியாட்களிலொருவன் சிக்காகோ பட்டணத்திலுள்ள சாத்தானின் சபைக்குத் தானே தலைவனெனக் கூறிக்கொண்டான். ஒரு இரவு நானும் என் மனைவியும் கிறிஸ்தவக் கைப்பிரதிகளை வினியோகித்துக்கொண்டிருந்தபோது, அவன் எங்களிடம் வந்து, சிக்காகோவிலுள்ள எல்லாக் கிறிஸ்தவர்களையும் ஒன்றுசேர்த்தாலும் அதைவிடக் கூடுதல் வல்லமை என்னுடைய சுண்டுவிரலுக்கு உண்டு என்று சவால்விட்டான்.

உடனே நான் அவனுடைய கண்களுக்கு நேராகப் பார்த்து, இப்போது அதை நீ நிரூபிக்கலாம். நான் தனித்த கிறிஸ்தவனாயிருந்தாலும், நீ என்னைக் கொஞ்சமும் அச்சுறுத்தமுடியாது. உனக்குக் கூடுதல் சக்தியிருக்கிறதென்பதை நீ இப்போதே நிரூபிக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்றேன். அவன் மலைத்துவிட்டான். அவன் நகைத்துக்கொண்டே, எனக்கு எத்தகைய சக்தி இருக்கிறதென்பதை நீ சீக்கிரம் புரிந்துகொள்ளுவாய் என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து சென்றான்.

அந்த இரவின் மீந்த நேரமெல்லாம் நானும் என் மனைவியும் ஜெபித்துக்கொண்டே அந்தத் தெருக்களில் நடந்தோம். உன்னதமான தேவன் அந்தத் தெருக்களில் குறுக்கிட்டு, அப்பகுதியிலுள்ள மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்துமாறு நாங்கள் வேண்டினோம். மறுநாள் மாலையில் நாங்கள் அந்த இடத்துக்குத் திரும்பி வந்தபோது சாத்தானுடைய சபையின் அந்தத் தலைவனை எங்கும் காணோம். மறுபடியும் அவனைத் தெருக்களில் நாங்கள் ஒருபோதும் கண்டதேயில்லை. மேலும், சாத்தான் கூட்டத்தாரால் அப்பகுதியில் நடத்தப்பட்டுவந்த ஒரு காப்பிக்கடை இரண்டு வாரங்களுக்குள் தீக்கிரையாயிற்று. நம்முடைய தேவன் மற்ற தேவர்களுக்கு மேலானவர் என்பதையும், அவர் வல்லமையுள்ள உன்னதமானவர் என்பதையும் காண்பித்தார்.

தேவன் உன்னதமானவரென்பது, அதாவது அவர் எல் எலியோனென்பது ஆதியாகமம் 14:22-ல்தான் முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அகிலாண்டத்தில் அவர் முக்கியமானவர் என்று அது குறிப்பிடுகிறது. அவரைப்போல் வேறு யாருமில்லை; அவர் தனித்தன்மை வாய்ந்தவர். மனிதர் மனிதரைப் புகழலாம், மற்றவர்கள் தெய்வமில்லாதவற்றை ஆராதிக்கலாம். சிலர் சாத்தானுடைய சக்தியால் அற்புதங்களைக்கூடச் செய்யலாம். ஆனால், அவர்கள் யாரும் நம்முடைய தேவனுக்கு நிகரானவர்களில்லை. அவர் உன்னதமான தேவனாகிய எல் எலியோன்; அவர் எல்லாருக்கும் மேலாக உயர்ந்தவர்.

நம்முடைய தேவனை எல் எலியோனாகப் புரிந்துகொள்ளும்போது, நாம் வெற்றியின் பாதையிலிருக்கிறோம், பாதுகாவலான இடத்தில் வாழுகிறோம். சாத்தான் அவருக்கு நிகரானவனல்ல. அவருடைய நாமம் அறிவிக்கப்படுவதை ஒரு சர்வாதிகாரியோ, ஒரு அரசோ நிறுத்தமுடியாது. அவரில் நம்புங்கள்; அப்போது உன்னதமான தேவனுடைய வெற்றியை அனுபவிப்பீர்கள்.