Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
எல்-ஷடைய் - சர்வவல்லமையுள்ள தேவன்

ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு என்றார் (ஆதி.17:1).

என்னுடைய வாழ்க்கையிலும் ஊழியத்திலும் நான் அனுபவித்த அசாதாரணமான சம்பவங்களிலொன்று 1999-ல் எத்தியோப்பியாவில்வைத்து நடந்தது. அங்கு கம்யூனிச ஆட்சி நடந்த 19 ஆண்டுகள் திருச்சபைகளுக்கு மிகவும் கடுமையான காலமாயிருந்தது. கம்யூனிச ஆட்சியின் வீழ்ச்சிக்குப்பின், அநேக ஆண்டுகள் திருச்சபைகள் வளர்ச்சியடைய மிகவும் பாடுபட்டன. அப்போதுதான், அந்நாட்டின் தலைநகரான ஆடிஸ் அபாபாவில் ஒரு மாபெரும் நற்செய்திக்கூட்டத்தில் செய்திகொடுக்க எனக்குத் தேவன் வாசலைத் திறந்தார்.

அக்கூட்டங்களைக்குறித்து அங்குள்ள மக்களுக்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்ததோடு, தேவன் அங்கு மிகவும் அற்புதமாகச் செயல்படப்போகிறார் என்கிற உணர்வு எனக்கிருந்தது. நான் அப்பட்டணத்துக்கு விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, தேவன் என்னிடம், மகனே! இந்த ஓட்டப்பந்தயத்தை ஓடும்படி நான் உன்னை அழைத்திருக்கிறேன்; எனவே, நீ ஒரு வீரனைப்போல் ஓடவேண்டும் என்று சொன்னார்.

முதல்நாள் கூட்டம் என்னுடைய எல்லா எதிர்பார்ப்பையும் மிஞ்சியிருந்தது. நாற்பத்தையாயிரத்துக்கு அதிகமான மக்கள் கூடிவந்தார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் அழைப்புக்குக் கீழ்ப்படிந்து முன்வந்தார்கள். அதற்கு அடுத்தநாள் கூட்டம் அதிகமானது. மூன்றாம் நாள் எழுபதாயிரத்துக்கு அதிகமான மக்கள் கூட்டத்திற்கு வந்தார்கள். அன்று காலையில் நான் விழித்தபோது, என் மனைவியை வாழ்த்த முயற்சித்தேன்; ஆனால், என் தொண்டையிலிருந்து சத்தம் வரவில்லை. என்னால் அதை நம்ப முடியவில்லை. என்னுடைய ஊழியகாலத்திலுள்ள கூட்டங்களில் அன்றுதான் மிகவும் கூடுதல் மக்களுக்கு நான் செய்திகொடுக்கவேண்டும்; ஆனால் எனக்கோ பேசமுடியவில்லை.

தேவனே! ஒரு வீரனைப்போல நான் ஓடவேண்டுமென்று நீர் என்னோடு பேசினீர், ஆனால் என்னால் பேசக்கூட முடியவில்லை. இது ஏன் ஆண்டவரே? என்ன நடக்கிறது? என்று நான் தேவனிடம் அமைதியாக என் இருதயத்தை ஊற்றினேன். தேவன் மறுமொழியாக, மகனே, என்னுடைய ராஜ்யத்தில் வீரர்கள் ஓடுவது இவ்வாறுதான் என்று சொன்னார். அன்று நான் தேவனை சர்வவல்லமையுள்ளவராக அனுபவித்தேன். நம்மால் கூடாது என்கிற நிலைக்கு நாம் வரும்போது, தேவன் நம்மை அழைத்த நோக்கத்தை நிறைவேற்ற நம்மால் முடியாதிருக்கும்போது நாம் அவர்மீது சாருகிறோம். அவர் நம்மை நேசித்து, நம்மீது கரிசனைகொள்ளுகிறபடியால், சர்வவல்லமையுள்ள தேவனாக நமக்காகச் செயல்படுகிறார்.

விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமுக்கும் அவ்வாறுதான் நேர்ந்தது. ஆரம்பத்தில் அவர் ஆபிராம் என்று அறியப்பட்டார். ஆபிராம் தேவனை சர்வவல்லமையுள்ளவராக ஆதியாகமம் 17-ல் சந்தித்தார். ஆனால், ஆதியாகமம் 15-ல் ஆபிராம் ஒரு தரிசனத்தில் தேவனைக் கர்த்தராகிய யேகோவாவாகச் சந்தித்தார். அவ்வாறு அவர் யேகோவாவை முதல்முறையாகச் சந்தித்தபோது, தேவன் அவருக்கு ஒரு நாடும் சந்ததியும் கொடுப்பதாக அவரை ஆசீர்வதித்தார். தேவன் ஆபிராமை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார் (ஆதி.15:5) என்று வாசிக்கிறோம்.

ஆனால், இந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமுன் ஆபிராமில் ஒன்று நடந்தாகவேண்டும்; அவர் தன்னுடைய ஆற்றலின் எல்லைக்கு வரவேண்டும்; அவரும் அவருடைய மனைவியும் தங்களால் குழந்தைபெறுவது கூடாதகாரியம் என்னும் நிலைக்கு வரவேண்டும். அவர் தொண்ணூற்றொன்பது வயதானபின் தேவன் மறுபடியும் அவருக்குத் தரிசனமானார். இந்தத் தருணத்தில் தேவன் தம்மை சர்வவல்லவராக அவருக்கு வெளிப்படுத்தினார். தன்னுடைய திறமையில் ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலைக்கு ஆபிராம் வந்தபோது, தேவன் தம்மை அன்பும் கரிசனையுமுள்ள சர்வவல்லவராகக் காண்பித்தார். ஆபிராமால் செய்யக்கூடாததைத் தேவனால் செய்யக்கூடியதாயிற்று.

சர்வவல்லமையுள்ள தேவனைச் சந்தித்தபின் ஆபிராமின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அந்தச் சந்திப்பின்போதுதான் அவருடைய பெயர் ஆபிரகாம் என்று மாற்றப்பட்டது. தேவனுடைய சித்தத்தைத் தன்னுடைய வல்லமையில் செய்ய ஆபிராம் முயற்சித்தார்; அதில் அவர் நிர்ப்பந்தமாகத் தோல்வியடைந்தார். அவர் தன் மனைவியின் அடிமைப்பெண் மூலமாய் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால், தேவனுடைய தன்மையையும் இயல்பையும் புரிந்துகொண்டு, அவரை முற்றிலும் நம்பியபோது வாக்குத்தத்தம் அவரில் நிறைவேறிற்று.

இதைத்தான் துல்லியமாகத் தேவன் எத்தியோப்பியாவில் எனக்குக் கற்பித்தார். அவரை சர்வவல்லமையுள்ள தேவனாக நான் அறிவேண்டுமென்று அவர் விரும்பினார். அதற்காக நான் முதலாவதாக என்னுடைய ஆற்றலின் எல்லைக்கு வரவேண்டியதாயிற்று; என்னுடைய குரலை இழந்துவிட்டேன். அன்று மாலையில் நான் மிகவும் மெதுவான குரலில்தான் செய்திகொடுக்க முடிந்தது. ஆனால், மொழிபெயர்ப்பாளர் அதைத் தெளிவாகக் கேட்டு, அழகாக விளக்கினார்; ஆயிரக்கணக்கானோர் செய்தியை ஏற்றுக்கொண்டார்கள். அந்த இறுதிநாளில் தேவன் கூட்டங்களில் அசாதாரண முறையில் அசைவாடினார். எத்தியோப்பிய மக்களின் வரலாற்றில் தெய்வீகக் குறுக்கீட்டின் வேளையாயிருந்தது அது.

நம்மால் கூடாது என்கிற நிலைக்கு வந்து, தேவனைச் சர்வவல்லவராக அறியும்போது, அவர் செயலாற்ற ஆரம்பிக்கிறார். அப்போது அவர் தம்முடைய அன்பையும் கரிசனையையும் காண்பிக்கிறார். தேவனுடைய சித்தத்தை உங்களால் செய்யமுடியாது என்று நீங்கள் உணருகிறீர்களா? அப்படியானால் அது நல்லது என்று நான் உங்களிடம் கூறிக்கொள்ளட்டும். நீங்கள் இப்போது தேவனை எல் ஷடையாக, அதாவது சர்வவல்லமையுள்ள தேவனாக அறிய ஆரம்பித்திருக்கிறீர்கள்.