Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
யேகோவா நம்முடைய தேவனாகிய கர்த்தர்

நான் ஆப்பிரிக்கா கண்டத்தைச் சந்தித்த முதலாம் சந்தர்ப்பம் அது. அந்தக் கண்டம் எனக்கு மிகப்பெரிய மர்மமாயிருந்தது; அங்கு சென்ற பயணம் எனக்குப் புதுமையான ஒரு அனுபவமாயிருந்தது. நான் தென் ஆப்பிரிக்காவுக்கு யாத்திரைப் புறப்பட்டபோது, தேவனை என்னுடைய கர்த்தராகிய யேகோவாவாகத் தெளிவாக அறிந்துகொள்ளுவேன் என்று நினைத்தது கிடையாது. கேப்டவுண் என்ற பட்டணத்தில் மாலைதோறும் பிரசங்கித்தேன்; அதன்பின் கடற்கரையில் கட்டப்பட்டிருந்த என்னுடைய விடுதிக்கு அருகாமையில் ஜெபத்திற்காக நேரம் செலவிட்டேன். நான் அங்குள்ள பாறைகளில் உட்கார்ந்து, அவைகளில் மோதிய அலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தேன். அப்போது தேவனுடைய வல்லமையாலும் மகத்துவத்தாலும் நான் அதிகமாய் ஆச்சரியத்துக்குள்ளானேன்.

நான் தேவனோடு செலவிட்ட அந்தத் தருணங்களில், அவருடைய தன்மையையும் இயல்பையுங்குறித்துத் தியானித்தேன். அவர் இருந்தவர், இருக்கிறவர், எப்போதும் இருப்பவர் என்கிற உண்மையை ஆழமாய்ச் சிந்தித்தேன். அந்த ஜெபவேளைகளை விவரித்துக் கூறுவது கடினம். எனக்கு எந்த அசாதாரண அனுபவமும் உண்டாகவில்லை; நான் எந்தத் தரிசனத்தைக் காணவுமில்லை, எந்தச் சத்தத்தையும் கேட்கவுமில்லை. நான் தனிமையில் அப்படியே உட்கார்ந்திருந்தேன். நித்திய தேவனுடைய பிரசன்னத்தை என் இருதயத்தின் ஆழத்தில் உணர்ந்தேன். அவர் என்னோடிருந்தாரென்றும், அவர் எப்போதும் என்னோடிருப்பார் என்றுமுள்ள அறிவு எனக்குத் தெளிவாயிற்று.

கேப்டவுணில் கூட்டங்கள் முடிந்தபின், நான் தேவபிரசன்னத்தின் புதுப்பிக்கப்பட்ட உணர்வோடு, அந்தப் பட்டணத்தைவிட்டுச் செல்லுகிறேன் என்பது எனக்குத் தெரிந்தது. தேவன் எனக்குக் குறிப்பாக ஒன்றும் செய்யவில்லை; அவரைச் சந்தித்தேன் என்பது மாத்திரம் எனக்குத் தெரியும். அவர் என்னுடைய கர்த்தர் என்றும், என்னுடைய வாழ்க்கையில் எப்போதும் அவர் அவ்வாறே இருக்கவேண்டுமென்றும் நான் அறிந்துகொண்டேன்.

நற்செய்தியாளரான என்னுடைய நண்பரொருவர், நாட்டின் பலபாகங்களிலிருந்தும் வந்த போதகர்களுக்கு எழுப்புதல் மாநாடு ஒன்று நடத்திக்கொண்டிருந்தார். கூட்டங்களில் உதவிசெய்ய அவர் என்னைக் கேட்டுக்கொண்டார். ஒரு மாலையில் நான் பேச எழும்பிநின்றபோது சிறப்பான ஓர் அனுபவம் நேரிட்டது. என்னுடைய செய்தியை நான் முடித்ததும், போதகர்கள் எழும்பிநின்று, தேவனைப் பாடி ஆராதிக்க ஆரம்பித்தார்கள். அவர்களுடைய துதி தேவனுடைய சிங்காசனத்துக்கு ஏறிச்சென்றபோது, பரிசுத்தஆவியானவர் அவர்கள்மீது அமைதியாய் இறங்கினார். போதகர்களுடைய உள்ளம் தேவனுடைய சமுகத்தில் உருகியது. சிலர் முகங்குப்புற விழுந்து, தங்கள் பாவங்களை அறிக்கையிட்டார்கள். வேறு சிலர் தலைவர்களிடம் சென்று, பிற ஊழியர்களைப் புண்படுத்திய வேளைகளுக்காக மன்னிப்புக்கேட்டார்கள். மற்று சிலர் தேவனுடைய பிரசன்னத்தின் பயபக்தியோடு அப்படியே நின்றுவிட்டார்கள். நீண்டநேரத்துக்குப்பின் அக்கூட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தலைவர்கள் முயற்சித்தபோதிலும் அவர்களால் கூடாமற்போயிற்று.

அந்தப் போதகர்கள் ஒரு பரிசுத்தத் தேவனைத் தரிசித்தார்கள், அவர்கள் முற்றிலும் மாற்றமடைந்தார்கள். கேப்டவுணில் நான் செலவிட்ட ஜெபநேரம் போதகர் மாநாட்டில் நடைபெற்றதற்கு நேரடியாகத் தொடர்புகொண்டிருந்தது என்பது எனக்குத் தெரியும். நாம் தேவனை நித்தியமானவராக அறியும்போது, அவரைப் பரிசுத்த தேவனாகச் சந்திக்கிறோம். ஏனெனில், நித்தியமான தேவன் தூய்மையானவர்.

ஆதியாகமம் தேவனுடைய தன்மையின் இரு கோணங்களைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. வேதபுத்தகத்தில் தேவனுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள முதல் நாமம் ஈலோஹிம் என்பது. அது தேவன் படைப்பின் கர்த்தர் என்பதைக் காண்பிக்கிறது. இரண்டாவது தேவனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள நாமம் யேகோவா என்பது. அகிலாண்டத்தைப் படைத்த ஆண்டவர் பரிசுத்தமானவர் என்பதை இது குறிப்பிடுகிறது. ஆதியாகமம் 2:4-ல் தேவனுக்கு யேகோவா என்கிற நாமம் பயன்படுத்தப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம்; அங்கு நாம், தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே என்று வாசிக்கிறோம். எபிரெய மொழியிலே இங்கு வரும் "தேவன்" என்னும் பதத்திற்கு "ஈலோஹிம்" என்றும், "கர்த்தர்" என்பதற்கு "யேகோவா" என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, படைப்பின் ஆண்டவர் நித்தியமானவரும் பரிசுத்தருமாகிய கர்த்தர்.

தேவன் மனிதனைப் படைத்ததையும் அவனைத் தன்னுடைய தார்மீக அதிகாரத்துக்குக் கீழாக அமர்த்தியதையும் ஆதியாகமம் 2-ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். அங்கு யேகோவா என்னும் நாமம் தொடர்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நம்மைப் படைத்தவராகிய ஈலோஹிம் பூரண பரிசுத்தமான யேகோவா என்று வேதம் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் தேவனாகிய கர்த்தரை (ஈலோஹிம்-யேகோவாவை) சந்தித்தார்கள். நாமும், அவருடைய சந்நிதானத்துக்கு வரும்போது, அவரை அவ்வாறே சந்திப்போம். அநேகருக்குத் தேவனை வல்லமையுள்ளவராக அறிந்துகொள்ள ஆவல்; ஆனால், அவரைப் பரிசுத்தராக அறிந்துகொள்ள அவர்கள் ஆசிப்பதில்லை. அவருடைய வல்லமையில் அவரைச் சந்திக்கிறவர்கள் அவருடைய அதிகாரத்துக்குக்கீழ் வராமலிருக்கமுடியாது. ஏனெனில், ஈலோஹிம்தான் யேகோவா.

தேவனை நாம் ஈலோஹிம்மாக அறியும்போது எழுப்புதல் உண்டாகிறது. அவ்வாறு நடைபெறும்போது, நம்முடைய வாழ்க்கையில் யேகோவாவின் அடையாளம் காணப்படும். அவர் நம்மைப் படைத்தவர் மட்டுமல்ல, நம்முடைய கர்த்தருங்கூட. அவரை நீங்கள் நெருக்கமாக அறிந்துகொள்ளும்போது உங்கள் வாழ்க்கை மாற்றமடையும்.