Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
ஈலோஹிம் - நம்மைப் படைத்து ஆளுகிற தேவன்

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் (ஆதி.1:1).

நான் காண்பேனென்று கற்பனைசெய்யாத நேரமது. இருபதாம் நூற்றாண்டின் சரித்திரத்தில் தேவனுடைய ஆவியானவர் அசைவாடிய சிறந்த அனுபவங்களில் ஒன்று என்று நான் அதைக் கூறக்கூடும். மனித வரலாற்றின் சம்பவங்களில் ஆட்சிசெய்கிற ஒரு தேவன் உண்டென்கிற உணர்வுக்கு ஒரு நாடு முழுவதும் தட்டியெழுப்பப்பட்டக் காலமது. ஒரு நாட்டிலிருந்து நாத்தீகத்தின் ஆவி துரத்தப்பட்ட வேளையது.

அந்தச் சந்தர்ப்பம் ருமேனிய புரட்சியின் முடிவு காலம். அக்காலகட்டத்தில், ஜனவரி 1, 1990-ல் நான் ருமேனியாவுக்குள் நுழைந்தேன். இதற்குச் சரியாக ஒரு வாரத்துக்குமுன் ருமேனியாவின் கொடுங்கோலனாகிய நிக்கோலே சியாசெஸ்கு சுட்டுக் கொல்லப்பட்டான். நிக்கோலே கிறிஸ்தவர்களைக் கொடுமையாய்த் துன்பப்படுத்தினான். பாலர் பள்ளிமுதல் பல்கலைக்கழகம் வரை தேவன் இல்லையென்று கற்பிக்கப்பட்டது. ஆனால், நான் ருமேனியாவிற்குள் சென்ற காலத்தில், தெருக்களில் நடந்துசென்றபோதெல்லாம் மக்கள் என்னைச் சூழ்ந்துகொண்டு, தேவன் உண்டு! தேவன் உண்டு! என்று கத்தினார்கள்.

ஒரு நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்குள்ளும் விசுவாசம் பொங்கி எழுந்தது. அந்த நாடு முழுவதும் கிறிஸ்துவுக்குள் கொண்டுவரப்படவில்லை; அது திருச்சபையின் கடமை. ஆயினும், ஒரு நொடிப்பொழுதிலே, தேவன் ஒருவர் உண்டென்றும், அவர் மனித வரலாற்றில் ஆளுகைசெய்கிறார் என்றும் அந்த நாடு உணர்ந்துகொண்டது. ஆம், அவர் நம்மைப் படைத்து ஆளுகிறவர். கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தின்மூலமாய்த் தேவனை அறிந்துகொள்ளுவதற்குரிய முதற்படி இதுவே. நம்முடைய தனிவாழ்க்கையிலும், குடும்பங்களிலும் மற்றும் நாட்டிலும் வெற்றிகண்டடைவதற்குரிய முதற்படியும் இதுவே.

தேவனுக்கு வேதபுத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள முதல் நாமம் ஈலோஹிம் என்பது. ஆதியிலே ஈலோஹிம் (தேவன்) வானத்தையும் பூமியையும் படைத்தார் என்று ஆதியாகமம் 1:1 சொல்லுகிறது. தேவனை ஈலோஹிமாக அறியாத ஒரு நபர் வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றி அனுபவிக்கமுடியாது. ஈலோஹிமை அறியாத ஒரு நாடு, அவர் அதற்காக ஆயத்தம்பண்ணிவைத்திருக்கிற ஆசீர்வாதங்களை அடையமுடியாது.

ஈலோஹிம் என்கிற பதம் ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் முப்பதுக்கதிகமான தடவைகளிலும், பழைய ஏற்பாட்டில் இரண்டாயிரத்துக்கதிகமான தடவைகளிலும் வருகிறது. அந்தப் பதத்தின் அடிப்படைக் கருத்து என்னவென்றால், நம்மைப் படைத்தவரும் எல்லாப் படைப்பையும் ஆளுகிறவருமாகிய ஒரே தேவன் உண்டு என்பதே. இவ்வாறு அவரைப் படைக்கிறவராகவும் ஆளுகிறவராகவும் அறிவது நம்முடைய வெற்றிக்கு அடிப்படைத் தேவையாகும். அந்த அறிவினால்தான் நாம் அவரைத் துதித்து ஆராதிக்கிறோம். நம்முடைய வாழ்க்கையின் நோக்கத்தையும் கருத்தையும் புரிந்துகொள்ள அந்த அறிவு நமக்கு ஆற்றலளிக்கிறது.

ஈலோஹிம் என்னும் நாமத்தில் திரித்துவத்தின் இரகசியம் அடங்கியுள்ளது. வேதபுத்தகத்தில் திரித்துவம் எங்கே கூறப்பட்டுள்ளது என்று பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அதை நாம் வேதபுத்தகத்தின் முதலாம் வசனத்திலேயே கண்டுகொள்ளுகிறோம். ஈலோஹிம் என்பது பன்மை பெயர்ச்சொல்; ஆனால், அதோடு எப்போதும் ஒருமைப் பண்புச்சொல்லும் வினைச்சொல்லும் வருகின்றன. எடுத்துக்காட்டாக, ஆதியாகமம் 1:1-ல் தேவன் அல்லது ஈலோஹிம் என்பது பன்மை பெயர்ச்சொல்; ஆனால், படைத்தாரென்பது ஒருமைப் பெயர்ச்சொல்லோடு சேர்ந்துவரக்கூடிய ஒருமை வினைச்சொல். மேலும் ஏசாயா 45:5-ல், நானே கர்த்தர், வேறொருவர் இல்லை; என்னைத்தவிரத் தேவன் இல்லை என்று தேவன் கூறியதாக வாசிக்கிறோம். நான் என்கிற ஒருமை உயிர்ச்சொல் தேவனுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். அதே வேளையில் என்னைத் தவிரத் தேவன் (ஈலோஹிம்) இல்லை என்றும் வேதம் சொல்லுகிறது.

வேதபுத்தகத்தின் முதலாம் அதிகாரத்தில் தேவன் ஈலோஹிம் என்று அழைக்கப்பட்டுள்ளதால் அவருடைய பூரணத்துவத்தை அங்கு நாம் காண்கிறோம். பிதா குமாரன் பரிசுத்தஆவி என்னும் அகிலாண்டத்தைப் படைத்தவரும் உன்னதத்தில் ஆளுகைசெய்கிறவருமாகிய திரித்துவ தேவனின் மகாப்பெரிய இரகசியத்தை அங்கு காண்கிறோம். இந்தத் திரித்துவ தேவனைக்குறித்த அறிவு நாம் தைரியத்தோடு வாழ உதவி செய்கிறது. ஈலோஹிம்மை நாம் அறியும்போது, மனித வரலாற்றில் ஆளுகை செய்கிறவரை அறிகிறோம். அப்போது நாம் தனிப்பட்டமுறையில் வாழ்க்கையில் நோக்கமும் கருத்தும் கண்டுகொள்ளுகிறோம்.

1990-ல் தேவன் ஒருவர் உண்டு! தேவன் ஒருவர் உண்டு! என்று ருமேனியர்கள் சத்தமிட்டதுபோல, நாமும் அகிலாண்டத்தைப் படைத்தவரும் ஆளுகிறவருமாகிய ஒருவருண்டு என்று அறிவிக்க நம்முடைய இருதயங்கள் ஆர்வங்கொள்ளவேண்டும். அகிலாண்டத்தைப் படைத்து ஆளுகிறவர் ஒருவர் உண்டு; அவருடைய நாமம் ஈலோஹிம்.