Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
படைத்தவராகிய தேவன்

பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது (ஏசா.40:28).

நம்முடைய தேவன் பெரியவரும் வல்லவருமானவர். இருக்கிறவைகளும் இருக்கப்போகிறவைகளுமாகிய எல்லாவற்றையும் அவர் படைத்தார். அவரையல்லாமல் ஒன்றும் உண்டாகவில்லை. அவர் வல்லமையுள்ளவர் மட்டுமல்லாமல் நல்லவருங்கூட. அவர் நன்மையில் பூரணர். அவர் அகிலாண்டத்தைப் படைத்தபோது, தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று (ஆதி.1:31) என்று வேதம் சொல்லுகிறது. படைத்தவர் நல்லவராகையால் அவருடைய படைப்பும் நல்லதே.

இதற்கும் உங்கள் ஆளத்துவ வெற்றிவாழ்க்கைக்கும் தொடர்பென்ன? தேவன் படைத்ததெல்லாம் நல்லது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளும்போது, அவர் உங்களைப் படைத்தபோதும், இது நல்லது என்று சொன்னார் என்பதை அறிவீர்கள். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும் (சங்.139:14) என்று சங்கீதக்காரன் சொன்னார். தேவன் பயனற்றவைகளைச் செய்யார் என்று பழங்கால நற்செய்திப் பாடகரில் ஒருவர் கூறுவதுண்டு. அது எத்தனை உண்மையானது!

உங்கள் வாழ்க்கையில் தகுதியான வாய்ப்புக்கள் கொடுக்கப்படவில்லையென்று நீங்கள் எண்ணலாம். உங்கள் வாழ்க்கை சீர்கெட்டது என்றும், உங்களுக்கு ஒரு நம்பிக்கையுமில்லை என்றும் நீங்கள் கருதலாம். நான் வேறொரு குடும்பத்தில் பிறந்திருந்தாலோ, அல்லது நல்ல சூழ்நிலையில் வாழ்ந்தாலோ நான் வெற்றியடைந்திருக்கலாம் என்பனபோன்ற வேதனைகள் உங்கள் இருதயத்தில் எழும்பலாம். நீங்கள் வைக்கப்பட்டிருக்கிற சூழ்நிலைகளெல்லாம் கடினமானவைகள் என்பது உண்மையாயிருக்கலாம். ஆனால், தேவனே உங்களைப் படைத்தவர், அவர் தவறு செய்யவில்லை. பலவேளைகளில் வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலைகளைச் சந்திக்கிறவர்களே சமூகத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

என்னைக் கிறிஸ்துவிடம் வழிநடத்தினவர் மிகவும் மோசமான பின்னணியத்தில் பிறந்து வளர்ந்தவர். சில வாரங்களேயான பச்சிளங்குழந்தையாயிருந்தபோது, அவருடைய தாயார் அவரைத் தள்ளிவிட்டார்கள். பல குடும்பங்கள் அவரை மாறிமாறி வளர்த்துவந்தன. ஆனால், அவர் தேவனால் படைக்கப்பட்டவரென்றும், அவர் பிரமிக்கத்தக்க அதிசமாய் உண்டாக்கப்பட்டவர் என்றுமுள்ள உண்மை மாறவேயில்லை. இறுதியாக அவர் ஒரு பக்தியுள்ள போதகருடைய இல்லத்தில் சென்றடைந்தார். அந்தப் போதகர், தேவன் இவரை நேசிக்கிறாரென்றும், இவருடைய வாழ்க்கையைக்குறித்துத் தேவனுக்கு அற்புதமான ஒரு திட்டம் உண்டென்றும் நடைமுறையில் காண்பித்தார். நல்லவைகளையே படைத்த நல்லவராகிய தேவனை இவர் அறிந்துகொண்டபோது, இவர் தன்னுடைய வாழ்க்கையின் நோக்கத்தையும் கருத்தையும் கண்டுகொண்டார்.

என் தனிப்பட்ட கருத்தின்படி, நான் கேட்டவர்களில் இவர் மிகச்சிறந்த நற்செய்தியாளராக இருந்தார். புறக்கணிக்கப்பட்ட குழந்தையாயிருந்த இவர் தேவனால் வல்லமையாய்ப் பயன்படுத்தப்பட்டார். என்னைக் கிறிஸ்துவிடம் வழிநடத்துவதற்கு இவர் கருவியாயிருந்தார்; அதற்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாயிருப்பேன். அவரால் என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தின்மூலம் உலகின் பல பாகங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தேவன் பயனற்றவர்களைப் படைக்கமாட்டார் என்பது உண்மையே.

தேவனே படைப்பின் கர்த்தர். அதுதான் அவருடைய செயலாயிருப்பதால், அதுவே அவருடைய நாமம். அவரே எல்லாவற்றையும் படைத்த தேவன்; அவர் படைத்த எல்லாமே நல்லதுதான். அவர்தான் உங்களைப் படைத்தவர், உங்களை நன்றாகப் படைத்தார். நீங்கள் கிறிஸ்துவுக்குள் யாராயிருக்கிறீர்களோ அதை ஒப்புக்கொண்டு, அவருடைய மகிமைக்காக அவர் உங்களைப் பயன்படுத்தும்படி அனுமதியுங்கள். அவரை நம்புங்கள், அப்போது வெற்றி பின்தொடரும்.