Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
தேவனுடைய வார்த்தை

இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே (வெளி.19:13).

தேவனுடைய நடத்துதலைக்குறித்து அண்மையில் ஒரு கிறிஸ்தவத் தலைவர்கள் மாநாட்டில் செய்திகொடுத்துக்கொண்டிருந்தேன். தேவன் என்னுடைய இருதயத்தோடு பேசினாரென்றும், இன்னின்ன காரியங்களைச் செய்யும்படி தேவன் என்னை வழிநடத்தினாரென்றும் என்னுடைய செய்தியில் நான் பலமுறை கூறினேன். அந்தச் செய்தியின் இறுதியில் ஒரு தலைவர் என்னிடம் வந்து பொருத்தமான சில கேள்விகளை என்னிடம் கேட்டார். தேவன் என்னிடம் பேசினார் என்று நீங்கள் சொன்னதின் கருத்தென்ன? தேவன் உங்களோடு எவ்வாறு பேசுகிறார்? என்பதே அவருடைய கேள்விகள்.

அதற்கு மாறுத்தரமாக நான், தேவன் பல வழிகளில் பேசுகிறார். ஒரு கழுதையைக்கொண்டு அவர் பேசினதாக வேதத்தில் வாசிக்கிறோம். அவருக்கு விருப்பமான எந்த முறையிலும் அவர் பேசலாம். ஆனால், அதிக வேளைகளிலும் அவர் வேதத்தின்மூலம் பேசுகிறாரென்பதே என் அனுபவம் என்று கூறினேன்.

வேதபுத்தகத்தை நாம் தேவனுடைய வார்த்தை என்று சொல்லுகிறோம். அதிகக் காலத்துக்குமுன் சில பழமையான சத்தியங்களைத் தேவன் தம்முடைய மக்களோடு பேசினார். அவைகள் ஒருபோதும் மாறவில்லை. அவைகள் நித்தியமானவை. நாம் திறந்த இருதயத்தோடு வேதபுத்தகத்தை வாசிக்கும்போது, அதின்வழியாகப் பரிசுத்தஆவியானவர் நம்மோடு பேசுவார். அவர் நம்முடைய வாழ்க்கைக்கு வழியையும், மனதுக்கு உண்மையையும், இருதயத்துக்கு சமாதானத்தையும் தருவார்.

வேதபுத்தகம் தேவனுடைய வார்த்தை என்று அழைக்கப்படுவதோடு, இயேசுவுக்கும் அந்தப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் கவனிக்கலாம். இயேசுவின் தெய்வீகத்தைக்குறித்த மிகச்சிறந்த வேதபாகங்களில் ஒன்றை யோவான் சுவிசேஷத்தில் காணலாம். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை (யோவா.1:1-3) என்று அங்கு வாசிக்கிறோம்.

வேதபுத்தகம் எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தை; இயேசு ஜீவிக்கிற தேவனுடைய வார்த்தை. ஜீவிக்கிற தேவனுடைய வார்த்தையாகிய இயேசு எல்லாவற்றையும் படைத்தார்; எனவே, வேதபுத்தகத்திலுள்ளதெல்லாம் அவரையே சுட்டிக்காண்பிக்கின்றன. அவராலேயல்லாமல் ஒன்றும் தோன்றவில்லை. படைப்பின் அதிகாரமாகிய ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் "தேவன் சொன்னார்" என்கிற சொற்றொடர் ஒன்பது தடவை வருகிறது. படைக்கப்பட்டதெல்லாம் தேவன் சொன்னதினாலேயே தோன்றின. உலகத்தைத் தேவன் தம்முடைய வார்த்தையினாலேயே படைத்தார். விண்மீன்களை வானவெளியிலே தம்முடைய வார்த்தையினாலேயே தொங்கவிட்டார். அவருடைய வார்த்தையினாலேயே உங்களையும் என்னையும் அவர் படைத்தார். அவருடைய பெயர் தேவனுடைய வார்த்தை என்பதே.

இதற்கும் வெற்றிக்கும் என்ன தொடர்பு? எல்லாத் தொடர்புகளும் உண்டு! அவர் சொன்னால் அப்படியே ஆகும். எருசலேம் தேவாலயத்தை மக்கள் பாராட்டியபோது இயேசு அவர்களைப் பார்த்து, நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார் (லூக்.21:6). இதை அவர் சொல்லி ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்குள், தீத்து தன்னுடைய உரோமைப் படைகளோடு எருசலேமுக்கு வந்து, இயேசு சொன்னதுபோலவே அந்த தேவாலயத்தை அழித்துப்போட்டான். இயேசு உண்மையாகவே தேவனுடைய வார்த்தைதான்.

தம்முடைய வார்த்தைகளினால் இயேசு நம்முடைய இருதயங்களோடு பேசும்போது, அவர் சொல்லுகிறதெல்லாம் உண்மை என்கிற நிச்சயத்தை நாம் பெற்றுக்கொள்ளலாம். அவர் எவைகளையெல்லாம் செய்வதாகச் சொல்லுவாரோ, அவற்றையெல்லாம் அவர் நிறைவேற்றுவார். அவர் நம்மை வெற்றிக்கு வழிநடத்துவார். அவருடைய வார்த்தைகளை நாம் நம்பலாம். என் இரட்சகராகிய தேவனுடைய வாக்குத்தத்தங்களில் நான் நிற்கிறேன் என்ற ஒரு பழைய பாடலுண்டு. அவ்வாறு தேவனுடைய வாக்குத்தத்தங்களில் நிற்க நீங்கள் கற்றுக்கொள்ளும்போது வெற்றியைக் கண்டடைவீர்கள். அவருடைய நாமத்தில் வெற்றியுண்டு.

தேவன், தம்முடைய வார்த்தைகளின்மூலம் உங்கள் இருதயங்களோடு பேசும்படி இன்றே சிறிதுநேரம் செலவிடுங்கள். அவருடைய வார்த்தையில் நிச்சயத்தின் தொனியுண்டு. அவருடைய வார்த்தை உடைந்த உங்கள் உள்ளங்களைக் குணப்படுத்தி, உங்களை வெற்றிக்கு வழிநடத்தும். அவர் சத்தியமாகையால் அவருடைய வார்த்தையும் சத்தியம். அவரே தேவனுடைய வார்த்தை.