Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
தேவனுடைய நாமத்தில் வெற்றி

ஒரு புது ஆண்டு ஆரம்பிக்கும்போது, நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவை அறியவேண்டுமென்பதும், அவருடைய வெற்றியை முன்னைவிட சிறப்பாக அனுபவிக்கவேண்டும் என்பதுமே என் இருதயத்தின் வாஞ்சையாயிருக்கிறது. தேவனைக் கூடுதல் அறிவதும், அவரை நெருக்கமாகப் பின்பற்றுவதுமே என் இருதயத்தின் ஆவல். ஆகையால், தேவனுடைய நாமத்தை விளக்கும் தொடர்ச் செய்திகளை நான் எழுதுகிறேன். அவருடைய நாமத்தில் நமக்கு வெற்றியுண்டு; அவருடைய நாமத்தில் நாம் ராஜ்யங்களைப் பிடித்தடக்கலாம்; அவருடைய நாமத்தில் நம்முடைய பெலவீனங்களை மேற்கொள்ளும் ஆற்றல் நமக்குண்டு; அவருடைய நாமத்தில் நம்முடைய ஜெபங்கள் பதிலளிக்கப்படும் என்னும் நிச்சயம் நமக்குண்டு.

பண்டைக்காலத்தில் எபிரெய மக்களில் ஒரு நபரின் பெயர் அவருடைய பண்பை அல்லது ஆளத்துவத்தைச் சுட்டிக்காண்பிக்கிறதாயிருந்தது. ஆகையால்தான் தேவனுடைய நாமம் அவர்களுக்கு மிகவும் முக்கியமாயிருந்தது. மீதியானிய வனாந்தரத்தில் மோசே தேவனைச் சந்தித்தபோது, அவர் எகிப்துக்குத் திரும்பிச்சென்று, அவருடைய சொந்த ஜனத்தை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்குமாறு தேவன் அவருக்குக் கட்டளையிட்டார். அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான் (யாத்.3:13) என்று வாசிக்கிறோம்.

பிற்காலத்தில் மோசே தேவனுடைய கட்டளைகளைப் பெற்றுக்கொண்டார்; அவைகளில் முக்கியமான பத்துக் கற்பனைகளில் ஒன்று தேவனுடைய நாமத்தைப்பற்றியதாகும். உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார் (யாத்.20:7) என்று அந்தக் கற்பனை தெளிவாகக் கூறுகிறது. தேவனுடைய நாமத்தை அறிவதும் கனப்படுத்துவதும் அவருடைய ஜனத்துக்கு முக்கியம்; ஏனெனில், தேவன் யாரென்றும் அவர் எவ்வாறு செயல்படுகிறாரென்றும் அதிலிருந்து கற்றுக் கொள்ளுகிறோம்.

வேதபுத்தகத்தில் தேவனுக்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளில் ஒவ்வொன்றும் அவருடைய தன்மையின் ஒவ்வொரு பகுதியை விவரிக்கிறது. அவரை நாம் படைக்கிறவராக அறியும்போது, நாம் செய்யும்படி அவர் நமக்குக் கொடுத்திருக்கிற கடமைகளிலும் நாம் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவோம். அவரை நாம் யேகோவாயீரேயாக அறியும்போது, அவர் நம்முடைய எல்லாத் தேவைகளையும் சந்திக்கிறார் என்பதைக் கண்டுகொள்ளுகிறோம். இருக்கிறவராகவே இருக்கிறவராக நாம் அவரை அறியும்போது, நாம் எப்போதும் அவருடைய வெற்றியை அனுபவிக்கிறோம்.

அவருடைய நாமத்தை நாம் தொழுதுகொள்ளும்போது, அவர் நமக்கு விடுதலையளிக்கிறார்; அவருடைய நாமத்தை நாம் அறிவிக்கும்போது வாழ்க்கைகள் மாற்றமடைகின்றன. தேவனுடைய நாமங்களைக்குறித்துக் கற்றுக்கொள்ளும்போது, அவர் யார் என்றும், உங்களுடைய வாழ்க்கையில் அவர் என்ன செய்யவேண்டுமென்றிருக்கிறார் என்றுமுள்ள தெளிவான அறிவை நாம் பெற்றுக்கொள்ளுகிறோம். இயேசுவின் நாமத்தில் வல்லமையும் அன்பும் உண்டு. அவருடைய நாமத்தினால் இருதயங்கள் ஆரோக்கியமடைகின்றன.

ஒருநாள், அந்த அற்புதமான நாமத்தைக் கேட்கும்போது, எல்லா முழங்கால்களும் முடங்கும். எல்லா நாமத்துக்கும் மேலான நாமம் அது. அவருடைய நாமத்தில் பிசாசுகள் ஓடின, சப்பாணி நடந்தான், குருடர் பார்வையடைந்தார்கள், மரித்தோர் உயிரோடெழுந்தார்கள், பலவீனர் பலசாலிகளானார்கள், மற்றும் வாழ்க்கைகள் மாற்றமடைந்தன. தீய சர்வாதிகாரிகள் அவருடைய நாமத்தைப் பயன்படுத்துவதைத் தடைசெய்ய முயற்சித்தும் அது பலனில்லாமற்போயிற்று. தேவனற்றவர்கள் அவருடைய நாமத்தைப் பரிகசித்தார்கள்; ஆனால், அவர்களுடைய பெயர்கள் எப்போதோ மறக்கப்பட்டுப்போயினும், இயேசுவின் நாமம் உலகமெங்கும் இன்றும் மகிமைப்படுகிறது. இயேசுவின் நாமமே நீடிக்கும் வெற்றியை நமக்குக் கொண்டுவருகிறது. உங்கள் இருதயபூர்வமாக தேவனுடைய நாமத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது அவர் யார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுவீர்கள். அவருடைய நாமம் அதிசயமானவர்!