Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
யோசுவாவைப் புதுத்தலைவனாகத் தகுதிப்படுத்திய மோசே

ஒவ்வொரு தலைமுறைக்கும் பரலோகத்தின் புதிய தொடுதல் தேவை. பரம்பரைச் சொத்துபோல, தேவனுடைய அபிஷேகமும் அவருடைய ஆழமான செயல்பாடும் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்திவிடமுடியாது. நம்முடைய பிள்ளைகளுக்கு ஒரு நல்ல பாரம்பரியமும் முன்மாதிரியும் விட்டுச்செல்ல முடியுமென்பது உண்மையே; ஆனால், தேவனுடைய இராஜ்யத்தில் அவர்கள் தங்கள் வழியை ஆயத்தப்படுத்திக்கொள்ளவேண்டும். அவர்கள் தங்கள் போர்களைத் தாங்களாகவே நடத்தவேண்டும். தேவனுக்கு அநேக பிள்ளைகளுண்டு, ஆனால் ஒரு பேரப்பிள்ளைகூட அவருக்குக் கிடையாது. தேவனுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் தேவனுடைய இராஜ்யம் அவர்களைவிடப் பெரியது என்றும், அவர்கள் காலத்தைவிடக் கூடுதல் நீடிக்குமென்றும் அறிந்துகொள்ளுவார்கள்.

மோசே தேவனால் வல்லமையாய்ப் பயன்படுத்தப்பட்டார். இஸ்ரவேலில் எழும்பினவர்களில் அவர் மிகவும் பெரிய தீர்க்கதரிசியாயிருந்தார். ஆனால், அவர் மறைந்தபிற்பாடும் தேவனுடைய பணி தொடர்ந்துகொண்டேயிருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். இஸ்ரவேல் மக்களை வழிநடத்தத் தகுதிபெற்றவரும் தேவனுக்கு ஏற்ற இருதயங்கொண்டவருமான ஒரு இளைஞனைக் கண்டுபிடிக்க அவருடைய கண்கள் எப்போதும் திறந்திருந்தன. அத்தகைய மனிதனை அவர் யோசுவாவில் கண்டார்.

அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி, நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான். யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கோடே யுத்தம்பண்ணினான். மோசேயும் ஆரோனும் ஊர் என்பவனும் மலையுச்சியில் ஏறினார்கள். மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில் இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான். மோசேயின் கைகள் அசந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள். அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறுபக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள்; இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது. யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான் (யாத்.17:9-13).

மோசே யோசுவாவை யுத்தத்திற்கு அனுப்பியது சுவாரசியமானது. யுத்தத்துக்கு யோசுவாவை அனுப்பினாலும் மோசே தூரத்திலில்லை. அவர் யோசுவாவின் கண் எட்டும் தூரத்திலிருந்து வெற்றியின் மூலாதாரத்தைச் சுட்டிக்காண்பித்துக்கொண்டிருந்தார். யுத்தத்தை நடத்தவும் அதில் வெற்றிபெறவும் மோசே யோசுவாவை ஞானமாக அனுப்பினார். ஆயினும், இறுதி வெற்றியைப் பெற்றுக்கொள்ளுவதற்கான வழிகாட்டுதலை அவர் கொடுத்தார்.

மோசேக்கும் யோசுவாவுக்குமிடையே உண்டான உறவின் ஒரு மாதிரியை நாம் இங்கு காண்கிறோம். முதலாவது மோசே தேவனுடைய பணியைச் செய்தார். அதன்பின்பு தேவனுடைய பணியைச் செய்ய யோசுவாவை அனுமதித்துவிட்டு அவர் பக்கத்தில் நின்றார். ஆகையால் மோசே மறைந்தபின்பு யோசுவா தேவனுடைய வேலையைச் செய்யக்கூடியதாயிற்று. புதுத் தலைமுறைத் தலைவர்களை எழுப்புவதற்குரிய தேவனுடைய மாதிரி இதுவே. முதலாவதாக, நாம் தேவனுடைய பணியைச் செய்கிறோம். பின்பு, அவர்கள் நம்மோடு சேர்ந்து அந்தப் பணியைச் செய்கிறார்கள். இறுதியாக, அவர்களாகவே தேவனுடைய ஊழியத்தைச் செய்கிறார்கள்.

மோசே யோசுவாவை தேவனுடைய பணிக்கு ஆயத்தப்படுத்தினதோடு நிறுத்தவில்லை; யோசுவா தேவனோடு நடக்கவும் அவர் கற்றுக்கொடுத்தார். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி, நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு; நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார். அப்பொழுது மோசே தன் ஊழியக்காரனாகிய யோசுவாவோடே எழுந்து போனான் (யாத்.24:12,13) என்று வேதத்தில் வாசிக்கிறோம். மோசே தேவனைச் சிறப்பாகச் சந்தித்த அந்த வேளையில் யோசுவா அதிக தூரத்திலில்லை.

ஆசாரிப்புக் கூடாரத்திலே மோசே தேவனைச் சந்தித்தபோது தேவனுடைய பிரசன்னம் மிக வல்லமையுள்ளதாயிருந்தது; யோசுவாவும் அவரோடு அந்தக் கூடாரத்திலிருந்தார். மோசே கூடாரத்தைவிட்டுச் சென்றபின்னரும் யோசுவா அங்கேயே தங்கியிருந்தார். தேவனுடைய பிரசன்னத்தைவிட்டுச் செல்ல யோசுவாவுக்கு மனதில்லாதிருந்தது. மோசே யோசுவாவைத் தேவனுடைய பணியில் தகுதிப்படுத்தியதோடு, மிகவும் சிறப்பாகத் தேவனோடுள்ள நெருக்கமான உறவில் நடக்கவும் அவருக்குப் பயிற்சியளித்தார்.

தேவனுக்குரிய புறம்பான கடமைகளைச் செய்ய ஆண்களுக்கும் பெண்களுக்கும் பயிற்சியளிப்பது எளிது. ஆனால், தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையோடு நடந்துகொள்ள அவர்களைப் பயிற்றுவிப்பது இன்னொரு காரியம். தேவனுடைய ஊழியம் ஆவிக்குரியதென்றும், அதைச் செய்து நிறைவேற்ற சிறந்த ஆவிக்குரிய மனிதர்கள் தேவையென்றும் மோசே அறிந்திருந்தார். மோசே இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து வெளியே அழைத்துவந்தார்; ஆனால், யோசுவாவோ அவர்களை வாக்குத்தத்த நாட்டிற்குள் அழைத்துச் சென்றார். மோசே யோசுவாவை ஆயத்தப்படுத்தியதால் அவர் ஆரம்பித்த ஊழியம் அவருடைய மரணத்தோடு நிற்கவில்லை. முன் ஓடியவரின் கையிலிருந்து கம்பை வாங்கிக்கொண்டு பந்தயத்தில் தொடர்ந்து ஓட புதிய தலைமுறை ஆயத்தமாயிருந்தது.

நாம் ஞானமுள்ளவர்களானால் தேவனுடைய ஊழியத்தை நாமாகச் செய்கிறது மட்டுமல்லாமல், அடுத்தத் தலைமுறைத் தேவனை அறியவும் நேசிக்கவும் அவரோடு நடக்கவும் நாம் உதவிசெய்வோம்.