Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
மோசேயின் விசுவாசமுள்ள பெற்றோர்

விசுவாசமுள்ள பெற்றோர்களால்தான் தேவனுடைய மனிதர் பெருங்காரியங்களைப் பலவேளைகளில் சாதித்தார்கள். மோசேயின் நிலையும் அதுவே. எக்காலத்தும் வாழ்ந்த மிகச் சிறந்தவர்களில் ஒருவராக மோசே கருதப்படுகிறார். ஆனால், தேவபக்தியுள்ள அவருடைய பெற்றோரின் ஜெபமும் விசுவாசமுமில்லாதபடி அவர் அவ்வாறு ஆகியிருக்க முடியாது. மோசே பிறந்தபோது அவனுடைய தாய்தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்றுமாதம் ஒளித்துவைத்தார்கள் (எபி.11:23) என்று வேதம் சொல்லுகிறது.

அன்றுள்ள நிலைமை மிகவும் துக்ககரமானதும் பயங்கரமானதுமாகும். மோசே தாயாரின் கர்ப்பத்திலிருந்தவேளையில் எபிரெயருக்குப் பிறந்த எல்லா ஆண் குழந்தைகளையும் நதியில் போடும்படி பார்வோன் கட்டளையிட்டிருந்தான். எகிப்து முழுவதும் எபிரெயப் பெற்றோருடைய கூக்குரல் பரத்துக்கு நேராக எழும்பினது. மற்ற எபிரெயப் பெற்றோர் தங்கள் ஆண்குழந்தைகளை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தபோது, மோசேயின் பெற்றோர் அரசனுடைய ஆணைக்கு அஞ்சவில்லை. எனவே அக்குழந்தையை மூன்றுமாதம் ஒளித்துவைத்தார்கள். அதன்பின்பு ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையைக் கிடத்தி, அதை முதலைகள் நிறைந்த நைல் நதியின் ஓரத்திலே வைத்தார்கள். அதற்குப் பின்னாலுள்ள வரலாறு நமக்குத் தெரியும். மோசே வளர்ந்து எபிரெயருக்குள் மிகச் சிறந்த தலைவனானார். இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைசெய்ய அவர் தேவனுடைய கருவியானார். தேவன் மோசேயைப் பயன்படுத்தின மகிமையும் மகத்துவமுமான சூழ்நிலையில் அவருடைய பெற்றோரின் விசுவாசம் மறக்கப்பட்டுவிடுகிறது.

மோசே பெருங்காரியங்களைச் சாதித்ததில் அவருடைய பெற்றோரின் விசுவாசம் பெரிய பங்குவகித்தது. அவர்கள் தேவனை விசுவாசித்தார்கள். அவர்களுடைய விசுவாசம் மோசேயின் வருங்காலத்திற்கு முதற்படியாயிற்று. அவர்களுடைய விசுவாசத்தில் பல சிறப்புக்களைக் காணலாம். முதலாவதாக, மோசேயின் வாழ்க்கையில் தேவனுடைய சித்தம் என்னவென்று அவர்கள் கண்டுகொண்டார்கள். அவர்களைச் சுற்றியிருந்த சூழ்நிலையைப் பார்க்க அவர்கள் மறுத்தார்கள். அதற்குப்பதில் அவனை அழகுள்ள (அசாதாரணமான) பிள்ளையென்று கண்டார்கள் என்று வேதம் சொல்லுகிறது. குழந்தையில் ஏதோவொரு சிறப்பு இருந்தது, அதை அவர்கள் கண்டார்கள். இந்த உலகம் அக்குழந்தையை அழிப்பதற்கு அனுமதிகொடுக்க அவர்கள் மறுத்தார்கள். தங்கள் மகனுடைய வாழ்க்கையில் தேவனுக்கு ஒரு பெரிய திட்டமிருக்கிறது என்பதை நம்பி, தங்கள் விசுவாசத்தில் நிலைநின்றார்கள்.

கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாகிய நாம் காட்சியினால் நடக்கக்கூடாது; நாம் விசுவாசத்தினாலே நடக்கிறோம், வாழுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். மற்றவர்கள் காணக்கூடாதவைகளை நாம் காணும்படி விசுவாசம் உதவிசெய்கிறது. நம்முடைய பிள்ளைகளில் தேவனுடைய சித்தத்தைக் கண்டவர்களாய், மோசேயின் பெற்றோர் விசுவாசித்ததுபோல, நாமும் நம்முடைய பிள்ளைகளுக்காக விசுவாசத்தோடு ஜெபிக்கவேண்டும். நம்முடைய பிள்ளைகளுடைய காரியத்தில் நாம் சூழ்நிலைகளுக்கப்பால் பார்க்கவும், தேவனுடைய இருதயத்தைக் காணவும் விசுவாசம் நமக்கு ஆற்றலளிக்கிறது.

மோசேயின் பெற்றோரைச் சுற்றியிருந்தத் திகிலான சூழ்நிலையைக்குறித்த அச்சத்துக்கு அடிபணிய அவர்கள் மறுத்தார்கள். அவர்கள் ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படவில்லையென்று வேதம் சொல்லுகிறது. மிகவும் பயங்கரமான சூழ்நிலைகளை நம்முடைய பிள்ளைகள் சந்திக்கிற ஒரு தலைமுறையில் நாம் வாழுகிறோம். தகவல்துறை நம்பமுடியாத அளவு தவறான திக்கில் அவர்களை வல்லமையாய்ப் பாதிக்கிறது. போதைப்பொருட்கள் எங்கும் வியாபித்துள்ளன. பாலியல் குற்றங்கள் அளவுக்கதிகமாக அதிகரிக்கின்றன. எபிரெயப் பிள்ளைகளைப் பார்வோன் கொன்றதற்கு அதிகமாக எய்ட்ஸ் நோய் இளைஞர்களை அழிக்கிறது. ஆனால், கிறிஸ்தவப் பெற்றோர் பயப்படத் தேவையில்லை. நாம் பரலோகத்தை எட்டிப்பார்த்து, நம்முடைய பிள்ளைகளுக்கான தேவனுடைய திட்டத்தை நாம் கண்டுகொள்ளலாம். நாம் சூழ்நிலைகளைக்குறித்த அச்சத்திலில்லை, வல்லமையுள்ள தேவன்பேரிலுள்ள விசுவாசத்திலேயே வாழவேண்டும்.

தாயின் கர்ப்பத்திலிருக்கும்போதே எங்கள் இரண்டு பிள்ளைகளையும் நானும் என் மனைவியும் தேவனிடம் அர்ப்பணித்தோம். மிகவும் சிறு பருவத்தில் அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். வாலிபத்துக்குரிய எல்லாப் பிரச்சனைகளினூடேயும் அவர்கள் கடந்துசென்றார்கள். எங்கள் பிள்ளைகளுடைய பாவங்களுக்காக நானும் என் மனைவியும் கண்ணீர்விட்ட சந்தர்ப்பங்களுண்டு. ஆனால், தேவன் உண்மையுள்ளவர் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். நம்முடைய பிள்ளைகளை அழிவுக்கு இழுத்துச்செல்லுகிற உலகத்தின் எல்லாச் சத்துவங்களையும்விட நமக்குள்ளிருக்கிற பரிசுத்தஆவியானவர் பெரியவர். பெற்றோராகிய நாம் பயத்தில் வாழவேண்டியதில்லை என்பதை நான் கற்றிருக்கிறேன். நாம் விசுவாசத்தில் வாழும்போது, தேவன் வாக்குப்பண்ணினதை நிறைவேற்றுவார்.

இறுதியாக, மோசேயின் பெற்றோர் விசுவாசத்தில் செயல்பட்டார்கள். நாம் தேவனில் நம்பிக்கைவைத்துவிட்டு வேறொன்றும் செய்யாமல் அமைதியாயிருந்தால் போதும் என்று விசுவாசத்தைக்குறித்து அநேகர் தவறான கருத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்தக் கொள்கை விசுவாசத்துக்குப் புறம்பானது. விசுவாசத்தின் சிறந்த காட்சிசாலையான எபிரெயர் நிருபத்தின் 11-ம் அதிகாரத்தை வாசிக்கும்போது, விசுவாசத்தினால் மாத்திரம் வாழ்ந்து செயல்பட்ட ஆண்களையும் பெண்களையும் காண்கிறோம். ஆயினும், அவர்கள் கிரியை நடப்பித்தார்கள்; ஏனெனில், விசுவாசம் கிரியை செய்கிறது. விசுவாசம் கிரியைக்கு எதிரானதல்ல. விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும் (யாக்.2:17) என்றுதான் வேதம் கூறுகிறது.

தேவனே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறோம், எங்கள் பிள்ளையைக் காத்துக்கொள்ளும் என்று சொல்லிக்கொண்டு மோசேயின் பெற்றோர் சோம்பேறிகளாய் உட்கார்ந்திருக்கவில்லை. அவர்கள் ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்கு பிசினும் கீலும் பூசினார்கள். அதன்பின் பெட்டிக்குள் வைக்கப்பட்டக் குழந்தையைத் தேவனுடைய பராமரிப்புக்கு ஒப்படைத்தார்கள். அவர்கள் தங்கள் பங்கை நடப்பித்தபோது, தேவன் தமது பங்கை நிறைவேற்றினார். அவர்களுடைய பங்கு கடின உழைப்பாயிருந்தது; தேவன் தம்முடைய பங்குக்கு அற்புதம் செய்தார். அவர்கள் துணிச்சலோடு தேவனை நம்பினார்கள். தேவன் ஒரு சாதாரணக் குழந்தையை அரசக் குழந்தையாக்கினார். அவர்கள் அக்குழந்தையை ஆற்றங்கரையில் வைத்தார்கள். ஆனால் தேவனோ அதைப் பார்வோனின் அரண்மனையில் வைத்தார். அவர்கள் அழுதார்கள், தேவன் பதிலளித்தார்.

நாம் பரலோகத்துக்குச் செல்லும்போது, எதிர்பாராத அநேகக் காரியங்கள் அங்கிருக்குமென்று நான் நம்புகிறேன். அத்தகைய வியப்புக்குரியவைகளிலொன்று அநேகச் சிறந்த தேவமனிதர்கள் பக்தியுள்ள பெற்றோரின் ஜெபத்தினால் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் காண்பதாயிருக்கும். அந்தரங்கத்தில் ஒரு தாய் ஜெபத்தில் சிந்துகிற கண்ணீரிலே தேவனுடைய பிள்ளைகள் உருவாக்கப்படுகிறார்கள். நேற்றையத்தினமுள்ள தேவபக்தியுள்ள பெண்களாலேயே அநேக தேவமனிதர் இன்று சிறந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள்.