Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
தேவனுடைய மனிதன் விழுந்தபோது

அது ஒரு எளிய கட்டளை, ஆனால் கடினமான பணி. நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் (எண்.20:8) என்று தேவன் மோசேயோடே சொன்னார். மோசே செய்யவேண்டியதெல்லாம் கன்மலையோடு பேசுவதே. எளிய காரியந்தான். ஆனால், இஸ்ரவேல் மக்களுக்கு மிகவும் இன்றியமையாதத் தண்ணீரை அந்தக் கன்மலை கொடுக்குமா? ஆம், தேவனுடைய வல்லமையும் அவருடைய அற்புதமான குறுக்கீடுந்தான் அதைச் செய்ய முடியும்.

தேவன் இதைவிட பெரிய அற்புதங்களைச் செய்ததை மோசே ஏற்கெனவே கண்டிருந்தார். அவர் கோலை ஓங்கியபோது செங்கடல் இரண்டாகப் பிளந்தது. யேகோவாயீரேயாகத் தேவன் தம்மை மக்களுக்குக் காண்பித்திருந்தார். அப்படியிருக்க, இந்த இடத்தில் மோசே ஏன் கீழ்ப்படியாமைக் காண்பித்தார்? கன்மலையோடு பேசுவதற்குப்பதில் அவர் அதை அடித்தார். அது மிகவும் சிறிய தவறுபோலத் தோன்றலாம். ஆயினும் அதுதான் மோசேயை வாக்குத்தத்த நாட்டிற்குப் புறம்பாக்கியது.

அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான். மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாகக் கூடிவரச் செய்தார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொல்லி, தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது. பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற்போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார் (எண்.20:9-12) என்று வேதத்தில் நாம் வாசிக்கிறோம்.

இந்தப் பாகத்தை முதலாவது வாசிக்கிற ஒருவர், மோசே என்ன பெரிய தவறு செய்துவிட்டார்? கன்மலையோடு பேசுவதற்குப்பதில் அவர் அடிக்கத்தானே செய்தார். எப்படியும் அது தண்ணீர் கொடுத்ததே. அப்படியிருக்க, தேவன் ஏன் மோசேயோடு கடினமாக நடந்துகொண்டார்? என்று கேட்கலாம். அதற்குரிய விடை தேவன் மோசேயோடு சொன்ன பதிலிலேயேயிருக்கிறது. தேவன் மோசேயோடு, இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற்போனீர்கள் என்று தேவன் பராது சொன்னார். அந்தக் கன்மலை கிறிஸ்துவே (1 கொரி.10:4). எனவே, மோசே பரிசுத்தமானவரை அடித்தார். அவர் அழைத்துச் சென்ற மக்களுக்கு முன்பாக அவர் அவ்வாறு செய்தது, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றினதுபோலிருந்தது. அவருடைய தலைமைத்துவத்திற்கு நிரந்தரமான களங்கம் ஏற்பட்டுவிட்டது. மோசேயைப்போல வேறுயாரும் உன்னத நிலையில் வைக்கப்படவில்லை. மோசே கண்டதை வேறுயாரும் காணவில்லை. மீதியானிய வனாந்தரத்திலுள்ள மலையில்வைத்து அவர் தேவனைச் சந்தித்தார்; அவருக்கு முதலாவது வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய தன்மை பரிசுத்தமே. கிறிஸ்துவின் தன்மைக்கொத்தவாறு தலைவர்கள் வாழவேண்டுமென்பதை மோசே கடினமான முறையில் கற்றுக்கொண்டார்.

மோசேயின் பாவம் இருவகையானது; ஒன்று, அவர் தேவனை மகிமைப்படுத்தவில்லை, இரண்டு, அவர் தேவனை நம்பவில்லை. மோசேயின் தோல்வியிலிருந்து நாம் சில சிறந்த பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். முதலாவதாக, அவிசுவாசத்தோடு ஒருபோதும் வழிநடத்தவேண்டாம். தலைவர்களுக்குத் தேவை விசுவாசம். அசாத்தியமான சூழ்நிலைகளை அடிக்கடி தேவன் நமக்குமுன்னே வைத்துக்கொண்டேயிருப்பார். நமக்கு வாக்குப்பண்ணப்பட்ட நாட்டிற்குள் நாம் சென்று, அதைக் கைப்பற்றவேண்டுமேயானால் தேவனையே நாம் முற்றும் நம்பவேண்டும். விசுவாசமும் வெற்றியும் கைகோர்த்தே நடக்கின்றன.

இரண்டாவதாக, கிறிஸ்துவுக்குநேரான தாழ்மையும் பயபக்தியுமுள்ள இருதயத்தோடு நாம் மக்களை வழிநடத்தவேண்டும். இயேசுவின் சீஷர்கள் அவரோடிருந்த எளியவர்களாயிருந்தார்கள். அவரை அவர்கள் அறிந்திருந்ததாலும், அவரைக் கர்த்தரென்று கனம்பண்ணியதாலும் இந்த உலகத்தில் அவருடைய மகிமைக்காக அவர்கள் தாக்கம் ஏற்படுத்தினார்கள். கிறிஸ்துவுக்காக இந்த உலகத்தை ஆதாயம்பண்ண நாம் பயன்படுத்தப்படவேண்டுமேயானால் ஒரு பக்தியுள்ள இருதயத்தோடு பணிபுரிய நாம் கற்றுக்கொள்ளவேண்டும். கடும்போரின் மத்தியில் கனம்பண்ணுவதற்குரிய மதியை நாம் இழந்துவிடுகிறோம்; நாம் கோபத்தோடும் மனக்கசப்போடும் செயல்படுகிறோம். கிறிஸ்துவுக்கு நாம் காண்பிக்கவேண்டிய சுத்தமான பக்தியிலிருந்து நம்மைத் தடைசெய்கிற எல்லாவற்றுக்கும் எதிராக நம்முடைய இருதயங்களை நாம் காத்துக்கொள்ளவேண்டும்.

தங்களைக்கொண்டு தேவன் செய்துநிறைவேற்ற விரும்புகிறவைகளிலிருந்து விசுவாசக்குறைவும் பக்தியின்மையும் தங்களைத் தடுத்துவிடுமென்று வெற்றியான மக்கள் கற்றிருக்கிறார்கள். மோசே எப்போதும் தேவனுடைய மனிதனாகவேயிருந்தார். இஸ்ரவேலரில் எழும்பிய தலைவர்கள் எல்லாரிலும் அவர் பெரியவராயிருந்தார். வேறுயாரும் கனவில்கூட காணமுடியாத அளவு அவர் கண்டார். ஆயினும், தேவனுடைய எதிர்பார்ப்பிலிருந்து அவர் குறைவுபட்டுவிட்டார். அதன் காரணம் மிகவும் சிறியதாகத் தோன்றிய இரண்டு சிறு பாவங்களே; ஆனால் அவை சிறியவை அல்ல. விசுவாசக்குறைவும் கனம்பண்ணத்தவறியதுமான அந்த இரு கள்ளர்களும் வாழ்க்கையை முழுமையாய் வாழமுடியாதபடி கெடுத்துப்போடுகின்றன. எனவே, நம்பி கீழ்ப்படி; இயேசுவில் மகிழ்ச்சியாயிருப்பதற்கு வேறு ஒரு வழியுமில்லை.