Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
மோசேயின் தாழ்மை

என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்? என்கிற கேள்வி வேதத்தில் ஒருமுறைக் கேட்கப்பட்டுள்ளது. தேவனுடைய மனிதனாகும்படி தேடுகிற எல்லாருக்குமுரிய ஒரு நல்ல கேள்வி இது. தேவனுடைய மனிதனாகவோ மனுஷியாகவோ மாறுவதற்கு தேவன் நம்மிடத்தில் எதை எதிர்பார்க்கிறார்? இதற்குரிய பதில், நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதுதான் (மீகா 6:8). தேவனுக்குப் பிரியமானவர்களாய் மாறுவதற்கு நமக்கு ஆற்றலளிப்பது இந்தப் பாகத்தில் கூறப்பட்டுள்ள இறுதியான இயல்பே.

மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான் (எண்.12:3) என்று வேதம் சொல்லுகிறது. தேவன் மோசேயை ஏன் இவ்வளவு வல்லமையாய்ப் பயன்படுத்தினார் என்பதற்குரிய குறிப்பை இங்கு நாம் கண்டுகொள்ளுகிறோம். மோசே வாலிபனாயிருந்த காலத்தில் பலமும் பராக்கிரமும் ஆணவமும் மிகுந்தவராயிருந்தார். ஆனால், மீதியானிய வனாந்தரத்தில் ஒரு மலையில் தேவனைச் சந்தித்தபின் அவருடைய இருதயம் பழைய நிலையிலில்லை. பூமியில் மிகவும் மனத்தாழ்மையுள்ள மனிதராக மாறினார். மோசே மீதியானிய வனாந்தரத்திலிருந்து வெளியே வந்தபோது, தாழ்மையாகிய பள்ளியில் பட்டம் பெற்றிருந்தார்.

தேவமனிதர்களுக்குரிய மிகவும் முக்கியமான பண்பு தாழ்மையே. எல்லா நல்லொழுக்கங்களின் தாய் தாழ்மையே என்று ஒருமுறை அகஸ்டின் கூறினார். அது உண்மைதான்; ஏனெனில், தாழ்மையுள்ள ஒரு இருதயத்திலிருந்து மற்ற எல்லா நல்லொழுக்கங்களும் வெளிவருகின்றன. ஒருவரைத் தேவமனிதராக்குவதற்குத் தாழ்மை ஏன் முக்கியம்? அதற்கு ஓரிரு காரணங்களுண்டு.

முதலாவது, கிறிஸ்துவின் வாழ்க்கையின் சாராம்சம் தாழ்மையே. இயேசு எப்போதும் தேவனாகவேயிருந்தார்; ஆயினும் அவர் மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். அவர் பரலோகத்தின் சிங்காசனத்தை விட்டிறங்கி, மனித மாம்சத்தைத் தரித்துக்கொண்டார். இந்தப் பூவுலகத்தில் இயேசுவின் முக்கியத் தன்மை அவருடைய தாழ்மையில் வெளிப்பட்டது. தேவன் மனிதனானார். தேவமனிதனாக மாற வாஞ்சிக்கும் ஒவ்வொருவருடைய இருதயமும் கிறிஸ்துவைப்போலாக நாடவேண்டும். கிறிஸ்துவைப்போலாவதென்றால் தேவனுக்குமுன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதே.

இரண்டாவதாக, தாழ்மையில்லாமல் கிருபையில் வளரமுடியாது. தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் (யாக்.4:6) என்று வேதம் சொல்லுகிறது. இது எளிதும், ஆனால் ஆழமுமான உண்மையாகும். பெருமையுள்ள இருதயம் தேவனுக்கெதிராய்ப் போரிடும். ஆனால், தாழ்மையுள்ள இருதயத்தைத் தேவன் ஆசீர்வதிக்கிறார். அநேகர் தேவனுக்காக வல்லமையுள்ளவர்களாயிருக்க விரும்புகிறார்கள். ஆனால், முதலாவது அவர்கள் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடக்கவேண்டுமென்பதைப் புரியத் தவறிவிடுகிறார்கள். தேவனுடைய கிருபையினாலேயே நாம் எல்லாவற்றையும் அடைந்துகொள்ளுகிறோம். நாம் கிருபையால் இரட்சிக்கப்படுகிறோம், கிருபையால் மன்னிக்கப்படுகிறோம், மற்றும் கிருபையால் மாத்திரமே நாம் வளருகிறோம்.

மனத்தாழ்மை இவ்வளவு முக்கியமாயிருப்பதால், அது என்னவென்று புரிந்துகொள்ளவேண்டும். அது வெளிப்படையாகக் காண்பிக்கக்கூடிய ஒன்றல்ல. என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது (யோவா.15:5) என்று இயேசு கூறியதின் உண்மையை உணர்ந்துகொள்ளும் உள்ளான தன்மையே அது. தேவனுடைய மகத்துவத்தையும் வல்லமையையும் தூய்மையையும் காண்பதினால் தாழ்மை வருகிறது. அவர் எவ்வளவு பெரியவரும் வல்லமையுள்ளவரும் என்று நாம் சிந்திக்கும்போது, தாழ்மையான பயபக்தியோடு நாம் அவருக்கு முன்பாகப் பணிந்து வணங்குவோம். என்னால் முடியாது, ஆனால் தேவனே உம்மால் கூடும்; என்னுடைய ஆற்றல்களில் நம்பிக்கைவைக்க மறுக்கிறேன், உம்முடைய வல்லமையிலேயே நம்பிக்கைவைக்கிறேன் என்று கதறுவோம்.

தேவனை அவருடைய பரிசுத்தத்தில் தரிசிப்பதிலிருந்து தாழ்மை புறப்படுகிறது. மோசே பரிசுத்த பூமியில் நின்றார். அதற்குப் பின்புதான் தேவன், அவர் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவராயிருந்தார் என்று நற்சான்று கூறினார். தேவனை அவருடைய பரிசுத்தத்தில் நீங்கள் தரிசித்து எவ்வளவு காலமாகிறது? பரிசுத்த பூமியில் பெருமைக்கு இடமில்லை; தாழ்மையுள்ள இருதயங்களுக்கே அங்கு அனுமதியுண்டு.