Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
தேவனுடைய நண்பனான மோசே

நீங்கள் மரித்தபின் எவ்வாறு அறியப்பட விரும்புகிறீர்கள்? நீங்கள் என்ன பாரம்பரியத்தைப் பின்வைத்துச் செல்ல விரும்புகிறீர்கள்? உங்கள் கல்லறையில் வைக்கப்படும் கல்லில் ஒரு வாக்கியம் எழுதப்படவேண்டுமேயானால் உங்களை விவரிக்கும் அந்த வாக்கியம் எதுவாயிருக்கவேண்டும்? இந்தக் கேள்விகளுக்குரிய பதில் நீங்கள் யார் என்பதற்குரிய சுருக்கமான விளக்கத்தைக் கொடுக்கும்.

வேதபுத்தகத்தில் மோசே பல்வேறு முறைகளில் விவரிக்கப்பட்டுள்ளார். அவர் தேவனுடைய மனிதன் என்றும், இஸ்ரவேலில் எழும்பின தீர்க்கதரிசிகளில் பெரியவர் என்றும், கர்த்தருடைய தாசன் என்றும் அழைக்கப்பட்டுள்ளார். ஆனால், மோசேயைக்குறித்த மிகச் சிறந்த விவரணம் அவர் தேவனுடைய நண்பர் என்பதுவே. ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார் (யாத்.33:11) என்று வேதம் சொல்லுகிறது. அவர் தேவனுடைய நண்பன் என்று அறியப்படத்தக்கதாக அவர் தேவனோடு நெருங்கிய உறவு வைத்துக்கொண்டார்.

தேவன் தங்களுடைய நண்பர் என்று பலரும் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்; ஆனால், நான் தேவனுடைய நண்பனாயிருக்க விரும்புகிறேன் என்று யாராவது சொன்னதை நான் அரிதாகவே கேட்டிருக்கிறேன். தேவனுடைய சத்தத்துக்குச் செவிகொடுத்து, அதற்குக் கீழ்ப்படிகிறவனே தேவனுடைய நண்பன். தேவனோடு மோசே கொண்டிருந்த உறவில் மோசே மாத்திரம் எப்போதும் பேசிக்கொண்டேயிருக்கவில்லை; மாறாக, அவர் தேவனுடைய சத்தத்துக்குச் செவிகொடுத்தார்.

அநேக ஆண்டுகளுக்குமுன் நான் இஸ்ரவேல் நாட்டைச் சந்தித்தபோது, ஒரு யூதக் கிறிஸ்தவன் என்னிடம், அநேக மக்கள் எங்களுடைய நாட்டிற்குப் பல நோக்கங்களோடு வருகிறார்கள். சிலர் சுற்றுலாப் பயணிகளாக வருகிறார்கள், வேறு சிலர் வேதத்தைக்குறித்து அதிகம் கற்றுக்கொள்ள வருகிறார்கள். ஆனால், வெகுசிலரே தேவனைக்குறித்து இன்னும் கூடுதல் அறிந்துகொள்ளவேண்டும் என்கிற இருதயத்தோடு வருகிறார்கள் என்று கூறினார். பின்னும் அவர் தொடர்ந்து, நான் தேவனுடைய இருதயத்தை அறியும் ஒரு மனிதனாயிருக்க விரும்புகிறேன்; தேவனுடைய நண்பனாயிருக்க விரும்புகிறேன் என்று கூறி முடித்தார்.

வெற்றியான தேவனுடைய மகனாகவோ மகளாகவோ இருக்க விரும்புகிற ஒரு நபர் தேவனுடைய நண்பராயிருக்கவேண்டும்; அதாவது, அவர் தேவனோடுள்ள நெருக்கமான உறவுநிலையில் அவருக்குச் செவிகொடுக்கவும் அவரோடு உரையாடவும் கற்றவராயிருக்கவேண்டும். அதிகம் வேலைப்பளுவும் கூடுதல் பொறுப்புக்களும் இத்தகைய நெருக்கமான உறவைக் களவாடலாம்; அவை தேவனோடு ஆழமாகத் தொடர்புகொள்ளுவதைத் தடைசெய்யலாம். ஆனால், மோசே அவ்வாறு நடைபெறுவதற்கு அனுமதிக்க மறுத்துவிட்டார். அவர் ஏராளமான பொறுப்புக்களை வகித்தார். சுமார் முப்பது இலட்சம் மக்களுக்குரிய பொறுப்பு அவருக்கு இருந்தது. அவர்களுக்கு உணவும் உடையும் உறைவிடமும் கொடுக்கவும், அவர்களை வழிநடத்தவும் அவர் கடமைப்பட்டிருந்தார்.

இந்தப் பொறுப்புக்களையெல்லாம் நிறைவேற்றிவிட்டு, அதே வேளையில் தேவனுடைய நண்பனாயிருப்பதற்கு மோசேக்கு எவ்வாறு கூடியதாயிற்று? அது எளிய காரியம். ஏராளமான மக்கள் வசித்த பாளயத்துக்கு வெளியே அவர் ஒரு கூடாரம் அமைத்திருந்தார். அவர் அதற்குள் சென்று தேவனைச் சந்தித்தார். அவர் நேசித்த தேவனோடு நெருக்கமாக உரையாட அந்தக் கூடாரம் அவருக்குப் போதுமான தனிமை கொடுத்தது.

ஒரு தேவனுடைய நண்பர் தேவனைத் தனிமையில் சந்தித்து, அவருடைய இருதயத்துக்குச் செவிகொடுக்கத்தக்கதாக ஒரு இடத்தையும் காலத்தையும் தெரிந்துகொள்ளுவார். அவர் கரத்தில் வேதபுத்தகத்தோடும், தேவனுடைய சத்தத்தைக் கேட்கத் திறந்த செவிகளோடும் வருவார். அத்தகையவரைத் தேவன் நம்பி, தன்னுடைய இருதயத்திலுள்ள ஆழமான இரகசியங்களை அவருக்கு அறிவிப்பார்.

தேவனுடைய பிரசன்னத்துக்குள் துரிதமாகச் சென்றுவிட்டு, அங்கிருந்து வேகமாக வெளியேறுகிறவரல்ல தேவனுடைய நண்பர். அவரோடு உரையாட அதிக நேரம் ஆகும். தன்னுடைய வேலைப்பளு அதிகமானபோது ஜெபிப்பதற்குக் கூடுதல் சமயம் தேவைப்பட்டது என்று மார்ட்டின் லுத்தர் கூறுவது வழக்கம். ஆனால், நம்மில் பலரும் பாரமான பொறுப்புக்களும் ஏராளமான நிகழ்ச்சிகளும் தொடர்ந்துவரும்போது நேர் எதிராக நடந்துகொள்ளுகிறோம். நாம் செய்கிற முதலாம் காரியம் தேவனோடு செலவிடும் காலத்தைக் குறைத்துக்கொள்ளுவதே. ஆனால், நாம் உண்மையாகத் தேவனுடைய நண்பராயிருக்க விரும்புவோமேயானால், பிதாவோடு தொடர்புகொள்ளப் போதுமான நேரம் எடுக்காமலிருக்கக்கூடாது என்று கற்றுக்கொள்ளுவோம். தேவனோடுள்ள நட்புக்கு நம்முடைய வாழ்க்கையில் நாம் முதலிடம் கொடுப்போம்.

நம்முடைய பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் என்ன பாரம்பரியத்தை வைத்துப்போகப் போகிறோம்? நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே அது இருக்கிறது. முக்கியமானவைகளுக்கு நாம் நிச்சயமாகத் தேவையான காலமெடுப்போம். தேவனுடைய நண்பனாயிருப்பது உங்களுக்கு எவ்வளவு முக்கியம்?