Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
தேவனோடு நெருக்கமான உறவுகொண்ட மோசே

நான் கிறிஸ்துவிடம் வந்த இரவை என்னால் ஒருநாளும் மறக்க முடியாது. அதைவிடச் சிறந்த அனுபவம் இருக்கமுடியாது என்று நான் எண்ணினேன். அகிலாண்டத்தைப் படைத்த தேவனை நான் அறிந்துகொண்டேன். அவருடைய அன்பையும் வல்லமையையும் நேரடியாக என் வாழ்க்கையில் அனுபவித்ததால் என் இருதயம் எழுச்சிகொண்டது. அவரால் நான் கவரப்பட்டேன். வாழ்க்கைக்கு ஒரு புதுக்கருத்து உண்டானது. எல்லாவற்றையும் புதுமையாகக் கண்டேன். ஆனால், தேவனுடைய அன்பு, கிருபை, மற்றும் மன்னிப்பின் செய்தியோடு புரட்சி நடந்த நாடுகளிலும் இனக்கொலை நடந்த பிரதேசங்களிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடங்களிலும் தேவன் என்னைக்கொண்டுசென்ற ஆச்சரியமான யாத்திரையின் வெறும் ஆரம்பமே அது; தேவனோடுள்ள நெருக்கமான உறவுக்குநேரான பயணத்தின் ஆரம்பமே அது.

ஒரு நபர் ஒரு நொடியில் தேவனுக்குள்ளாகப் பிறந்தாலும், ஒரு வாழ்க்கை முழுவதும் தேவனை நெருக்கமாக அறிவதின்மூலந்தான் பயனுள்ளவராக வளர முடியும். ஒருவர் மறுபடியும் பிறந்தவுடன், அவர் முற்றுப்பெற்றுவிட்டார் என்று கிறிஸ்தவர்கள் பலவேளை எண்ணுவதுண்டு. ஆனால், உண்மையில் அவர்களுடைய யாத்திரை அப்போது தொடங்கத்தான் செய்திருக்கிறது. இரட்சிப்பு சென்றடையும் இடமல்ல; அதுதான் ஆரம்ப இடம். நாம் இரட்சிக்கப்படும்போது தேவனை அறிய ஆரம்பிக்கிறோம். ஆனால், அவருடைய சித்தத்தை நிறைவேற்ற வேண்டுமேயானால் நாம் பரிசுத்தமாகுதலில் வளரவேண்டும்.

மீதியானிய வனாந்தரத்தில் மோசே ஒரு மலையில் தேவனைச் சந்தித்தார். தேவன் தன்னை மோசேக்கு வெளிப்படுத்தினார்; ஆனால், அது தேவனோடுள்ள அவருடைய உறவின் ஆரம்பமே. அதற்குப்பின் தேவனை அவர் நெருக்கமாக அறிய ஆரம்பித்தார். தேவனோடுள்ள நெருக்கமான உறவில் மோசே மூன்றுமுறையில் வளர்ந்தார்.

முதலாவதாக, தேவன் சர்வவியாபி என்று மோசே அறிந்தார். நான் உன்னோடே இருப்பேன் (யாத்.3:12) என்று தேவன் மோசேயோடே சொன்னார். மோசே எங்கெங்கு சென்றாலும் தேவன் அங்கெல்லாம் இருப்பார் என்பதை அவர் அறிவது தேவையாயிருந்தது. பார்வோனுக்கு முன்பாக நின்றபோதும், சிவந்த சமுத்திரத்துக்கு முன்பாக நின்றபோதும் தேவன் மோசேயோடே இருந்தார். பட்டணத்திலும் அவரோடிருந்தார், வனாந்தரத்திலும், அவரோடிருந்தார்; மலையிலும் அவரோடிருந்தார், பள்ளத்தாக்கிலும் அவரோடிருந்தார்.

ருமேனியாவில் புரட்சிவெடித்தபோது, மக்களின் இருதயங்களிலிருந்து ஒரு அற்புதமான கூக்குரல் எழும்பிவந்தது. அங்குள்ள மக்களுடைய வாழ்க்கைமுழுவதும் தேவன் இல்லையென்று அவர்கள் மூளைச்சலவைச் செய்யப்பட்டிருந்தார்கள். ஆனால், தேவன் செயல்பட்ட ஒரு அற்புதமான விநாடியிலே அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரத்தில் இரண்டு இலட்சத்துக்கு அதிகமானபேர் கூடி தேவன் நம்மோடிருக்கிறார் என்று தங்கள் மொழியில் கத்த ஆரம்பித்தார்கள்.

இயேசு இந்த உலகத்துக்கு வந்தபோது, அவருக்குக் கொடுக்கப்பட்ட பெயர்களில் ஒன்று இம்மானுவேல், அதாவது தேவன் நம்மோடிருக்கிறார் என்பதாகும். தேவன் தம்முடைய மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும்போது, அவர்கள் எங்கு சென்றாலும் தாம் அவர்களோடிருப்பதை அவர்கள் அறியவேண்டுமென்று அவர் விரும்புகிறார்.

தாம் நித்தியமானவரென்றும் தேவன் மோசேக்குத் தம்மை வெளிப்படுத்தினார். தேவன் எப்போதும், எல்லா இடத்திலும் இருக்கிறார். உம்முடைய நாமம் என்ன? என்ற நியாயமான கேள்வியை மோசே தேவனிடம் கேட்டார். அவர் இஸ்ரவேல் மக்களிடத்திற்குத் திரும்பிச் செல்லவேண்டுமேயானால் அவரை அனுப்பியவருடைய பெயரையாவது அவர் அறிந்திருக்கவேண்டும். அக்கேள்விக்குத் தேவன் கொடுத்த பதில் அவருடைய தன்மையின் சிறப்பாகும். இருக்கிறவராகவே இருக்கிறேன் (யாத்.3:14) என்று தேவன் கூறினார். நான் இருந்தவராகவே இருந்தேனென்றோ, இருப்பவராகவே இருப்பேனென்றோ அவர் கூறவில்லை என்பதைக் கவனிக்கவேண்டும். அந்தவேளையிலும் தேவன் மோசேயோடு இருக்கிறவராகவே இருக்கிறவராய் இருந்தார். இன்றும் அவர் இருக்கிறவராகவே இருக்கிறார். நாளைக்கும் அவர் இருக்கிறவர்தான். அவருக்கு வயது முதிர்வதில்லை. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.

இறுதியாக, தேவன் முற்றிலும் உண்மையுள்ளவர் என்று மோசே அறிந்துகொண்டார். மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம் (யாத்.3:15) என்றார். ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுக்குத் தேவன் செய்ததை மோசேக்கும் செய்வார். முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களில் தேவன் உண்மையும் உத்தமமுமாயிருந்ததுபோல தேவன் மோசேயோடும் உண்மையுள்ளவராயிருப்பார்.

மோசே பெரியவனாயிருந்ததினால் தேவனுடைய மனிதனாகவில்லை; ஆனால், எங்கும் வியாபித்திருப்பவரும் எக்காலத்திலுமிருப்பவரும் முற்றும் உண்மையுள்ளவருமான ஒரு மகாப்பெரிய தேவனை அறிந்ததினாலேயே அவர் அவ்வாறானார். மோசேயின் தேவன்தான் இயேசுகிறிஸ்துவை உண்மையாய்ப் பின்பற்றுகிற ஒவ்வொருவருக்கும் தேவன் என்பது எவ்வளவு அற்புதமானது! ஒரு நபரைத் தேவனுடைய மனிதனாக்குவது மனிதனில் ஆரம்பிக்காமல், அந்நபரை அவ்வாறாக்குகிற தேவனில் ஆரம்பிக்கிறது. தேவனுடைய இயல்புகளைத் தங்கள் ஆத்துமாவின் அடையாளமாகக்கொண்ட ஆண்களும் பெண்களுமே அவருடைய அரசில் பயனுள்ளவர்களாயிருப்பார்கள். இரட்சகரோடுள்ள நெருக்கமான உறவினாலேயே அத்தகைய அடையாளம் மனித இருதயத்தில் பதிக்கப்படுகிறது.