Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
மோசேயின் விசுவாசம்

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம் என்று வேதம் சொல்லுகிறது. தேவனுடைய மக்களின் வருங்காலத்தை நிர்ணயிப்பது விசுவாசமே. அவர்களுடைய வாழ்க்கையின் அடையாளத்தையும் விலைமதிப்பையும் விசுவாசம் தீர்மானிக்கிறது. விசுவாசத்தால் எல்லா ஆசீர்வாதங்களையும் அடைந்துகொள்ளுகிறோம், எல்லாத் தடைகளையும் மேற்கொள்ளுகிறோம். முற்றிலும் விசுவாசத்தினால் வாழும் வாழ்க்கையே வெற்றியான கிறிஸ்தவ வாழ்க்கையாகும்.

மோசே விசுவாசத்தினால் தேவனுடைய மனிதரானார். தேவன் மோசேயைக்கொண்டு செயல்படுத்திய ஒவ்வொரு காரியமும் விசுவாசக் கிரியையே. அவர் நடத்திய ஒவ்வொரு அற்புதச் செயலும் விசுவாசத்தினாலேயே. வெற்றியான ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது விசுவாசமே.

மோசே விசுவாசத்தினால் செய்த மூன்று தெரிந்துகொள்ளுதல்களைக்குறித்து வேதம் சுட்டிக்காட்டுகிறது. முதலாவதாக, மோசே தன்னுடைய புதிய ஆளத்துவத்தின் அடையாளத்தைத் தெரிந்துகொண்டார். விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்தார் (எபி.11:24) என்று வேதம் சொல்லுகிறது. மோசே தான் யார் என்பதில் குழப்பமடைந்திருந்தார். பார்வோனின் குமாரத்தியின் மகன் என்று அறியப்படவேண்டுமா? அல்லது, ஒரு எபிரெய அடிமையின் மகன் என்று அழைக்கப்படவேண்டுமா? என்பதுதான் பிரச்சனை. இறுதியாக அவர் செய்த தெரிந்துகொள்ளுதல் சரியானது. தேவனுடைய ஜனங்களோடே தன்னை ஒருவனாக்கிக்கொண்டார்.

தாங்கள் யார் என்பதைக்குறித்து தவறான தெரிந்துகொள்ளுதல் செய்வதினாலேயே அநேக விசுவாசிகள் தோல்வியில் வாழுகிறார்கள். கிறிஸ்துவோடும் அவருடைய பிள்ளைகளோடும் தங்களை ஒன்றுபடுத்திக்கொள்ள அவர்கள் வெட்கப்படுகிறார்கள். அதின்பலனாக அவர்கள் எப்போதும் தோல்வியடைகிறார்கள். நாம் வெற்றியில் வாழவேண்டுமேயானால் நாம் இரட்சகரைக்குறித்தும் அவரைப் பின்பற்றுகிறவர்களைக்குறித்தும் வெட்கப்படக்கூடாது.

வாழ்க்கையில் எது மிகவும் முக்கியம் என்பதைக் குறித்தத் தெளிவான தெரிந்துகொள்ளுதலையும் மோசே செய்தார். மிகவும் மதிப்புக் கூடியவைகளுக்கு அவருடைய விசுவாசம் அவரை வழிநடத்தினது. அவர் எகிப்திலிருந்த காலம்வரையிலும் தவறானவைகளுக்கு அவர் விலைமதிப்புக் கொடுத்தார். ஆனால், புகழையும் செல்வத்தையுமா? அல்லது உபத்திரவத்தையும் அவமானத்தையுமா? எதைத் தெரிந்துகொள்ளுவது என்னுமிடத்திற்குத் தேவன் மோசேயைக் கொண்டுவந்தார். மோசே இரண்டாவதுள்ளதைத் தெரிந்துகொண்டார். ஆகையால், இறுதியாக அவர் மனித வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற மக்களில் ஒருவரானார். புகழையும் செல்வத்தையும் தேடுவது வெளிப்புறமாக நல்லதுபோலத் தோன்றலாம்; ஆனால் உள்ளேயோ அது தீமையாயிருப்பதால், இறுதியாக அது ஒரு நபரைத் தோல்விக்கு இழுத்துச்செல்லுகிறது. அதற்கு நேர்மாறாக எக்கிரயங்கொடுத்தும் தேவனுக்குக் கீழ்ப்படிவது கடினமானதாகவும் பல வேளைகளில் ஆபத்தானதாகவும் தோன்றலாம்; ஆனால், அது ஜீவனுக்கும் வெற்றிக்கும் வழிநடத்தும். மேலும், அது நாம் தேட மறுத்த புகழுக்கும் நம்மை வழிநடத்தலாம். மோசே அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான் (எபி.11:25,26) என்று வேதம் சொல்லுகிறது.

இறுதியாக, மோசே பயத்துக்குப் பதில் விசுவாசத்தைத் தெரிந்துகொண்டார். தான் ஒவ்வொருநாளும் காண்கிற ஒருவருக்குப் பயப்படுகிறதைவிட, காணாத ஒருவரை நம்புவதையே தெரிந்துகொண்டார். சாத்தான் மோசேயின் எண்ணத்தை அரசனுக்குநேராகத் திருப்பியிருக்கலாம். ஆனால் மோசேயோ, தன் கண்களை ராஜாதி ராஜாவின்மேல் பதித்தார். விசுவாசத்தினாலே அவன் (மோசே) அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான் (எபி. 11:27) என்று வேதம் சொல்லுகிறது.

அநேகக் கிறிஸ்தவர்கள் தங்கள் ஓட்டத்தை நன்றாக ஆரம்பித்தாலும் சரியாக முடிப்பதில்லை. ஏனெனில் பயம் அவர்களை ஊனப்படுத்திவிடுகிறது. விசுவாசம் விடாமுயற்சியை உண்டாக்குகிறது. பயமும் விசுவாசமும் ஒரு வீட்டில் வசிக்கமுடியாது. வாழ்க்கையில் விசுவாசம் வெற்றிக்கு வழிநடத்துகிறது. அது நாம் தெரிந்துகொள்ளுகிறதைப் பொறுத்தேயிருக்கிறது. மோசே தேவனை நோக்கிப்பார்க்கத் தெரிந்துகொண்டார். உங்கள் தெரிந்துகொள்ளுதல் என்ன?