Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
மோசே தேவனைச் சந்தித்தார்

ஒவ்வொரு பெருந்தலைவர்களுடைய வாழ்க்கையிலும் திருப்புமுனையான ஒரு காலகட்டமுண்டு. அப்படியில்லாத ஒரு தலைவரைப் பின்பற்ற மக்களுக்குக் கடினமாயிருக்கும். ஏனெனில், அவர்கள் அத்தலைவரைப் புரிந்துகொள்ளமாட்டார்கள். தலைவர் செய்கிறவைகளை, அவர் ஏன் அவ்வாறு செய்கிறார் என்பதைக் கணிப்பது மக்களுக்குக் கடினமாயிருக்கும். ஒருவருடைய தலைமைத்துவத்தின் திசையை நிர்ணயிக்கும் வேளையே அவருடைய திருப்புமுனைக் காலமாகும்.

மக்கள் ஒரு தலைவரைப் புரிந்துகொள்ளுகிறதைப்பொறுத்து அவருடைய வெற்றியும் தோல்வியுமிருக்கலாம். எக்காலத்தும் எல்லாரிலும் மிகச் சிறந்தத் தலைவரான மோசேயின் வாழ்க்கையிலும் அவ்வாறேயிருந்தது. அவர் தம்முடைய ஜனத்தை அடிமைத்தனத்திலிருந்து விடுதலைசெய்தார். வரலாற்றின் ஒரு முக்கிய காலகட்டத்தில் அவர் தேவனுடைய கருவியாயிருந்தார். ஆனால், அவர் தேவனைச் சந்தித்தது அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனையாயிற்று. மீதியானிய வனாந்தரத்தில் அவர் ஒரு ஏழை மேய்ப்பனாயிருந்தார். ஒரு மலையில்வைத்து தேவன் தம்மை மோசேக்கு வெளிப்படுத்தினார். ஒரு முட்செடி எரிந்தும் வெந்துபோகாதிருந்தது. தேவன் அந்த முட்செடியிலிருந்தார். மோசேயின் கவனத்தைக் கவர்ந்தபின் தேவன் அவரைப் பெயர்சொல்லி அழைத்தார். அந்த அனுபவத்திலிருந்து மோசே ஒருபோதும் மீளவில்லை. அவருடைய வாழ்க்கையையும் ஊழியத்தையும் வரையறுக்கிற ஒரு அனுபவமாயிருந்தது அது.

தேவன் தன்னுடைய தன்மையையும் இயல்பையும் மோசேக்கு வெளிப்படுத்தினார். அவர் மோசேயைப் பார்த்து, இங்கே கிட்டிச்சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார் (யாத்.3:5). மோசே கற்றுக்கொண்ட தேவனுடைய முதலாம் பண்பு அவர் பரிசுத்த தேவனென்பதுவே. தேவன் வரும்போது பரிசுத்தமும் வருகிறது. நாம் தேவனுடைய பிரசன்னத்தில் நிற்கும்போது பூரண பரிசுத்தத்தின் முன்னில் நாம் நிற்கிறோம். அவரில் எந்தக் குறைபாடுகளோ அசுத்தமோ இல்லை. எனவே நாம் தேவனைச் சந்திக்கும்போது, மோசே செய்ததையே நாமும் செய்யவேண்டும்; அதாவது பரிசுத்த பூமியில் நாம் நிற்கமுடியாதபடி நம்மைத் தடைசெய்கிற எல்லாவற்றையும் நம்முடைய வாழ்க்கையிலிருந்து நீக்கிப்போடவேண்டும்.

மோசேயின் வாழ்க்கையை வரையறுத்த தேவனுடைய இன்னொரு பண்புமுண்டு. அது அவருடைய நித்திய வல்லமையாகும். தேவன் தம்மை மோசேக்கு வெளிப்படுத்தினபோது, நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டார் (யாத்.3:6). இளைஞனாயிருந்தபோது மோசே ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கலாம். அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் வல்லமையாய்ச் செயல்பட்ட அதே தேவன் இப்போது தம்மை மோசேக்கு வெளிப்படுத்தினார். அதினால் மோசே மிகவும் பயந்தார். மகத்துவமுள்ளவரும் நித்தியமானவரும் சர்வவல்லமையுள்ளவருமான தேவனுக்குமுன்பாக அவர் நின்றார். அதற்குப்பின் அவர் பழைய மோசேயாயில்லை.

சர்வ வல்லவரும் பரிசுத்தமுமான அதே தேவன் மனதுருக்கமுமுள்ளவர் என்று மோசே கண்டுகொண்டார். தேவன் மோசேயைப் பார்த்து, எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன் (யாத்.3:7) என்று சொன்னார். தேவன் தங்களை மறந்துவிட்டார் என்றோ, அல்லது தங்கள் பாடுகளைக்குறித்து அவர் அக்கறைப்படவில்லை என்றோ மக்கள் நிச்சயமாய் எண்ணியிருக்கக்கூடும். ஆனால், தேவன் தம்மை வித்தியாசமாக மோசேக்கு வெளிப்படுத்தினார். எனவே, தம்முடைய மக்கள்மீது பரிவும் கரிசனையுள்ளவராக மோசே தேவனை அறிந்துகொண்டார். தேவனுடைய மனதுருக்கமே இஸ்ரவேல் மக்களை விடுதலைசெய்ய மோசேயை ஓட்டியது. அந்தச் சந்திப்பிற்குப் பிறகு மோசேயின் வாழ்க்கையும் ஊழியமும் தலைமைத்துவமும் முன்புபோலில்லை. அவர் தேவனைச் சந்தித்ததால் அவருடைய வாழ்க்கையிலும் பணியிலும் ஒரு திருப்புமுனையுண்டாயிற்று.

தேவனை ஒருவர் சந்திக்கும்வேளையே அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனையாகும். நாம் தேவனைச் சந்தித்தபின், நம்முடைய வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதைக்குறித்து எந்தக் கேள்வியும் வராது; அது தெளிவாக வரையறுக்கப்படும். நீங்கள் தேவனைச் சந்தித்தபின், நீங்கள் யாரென்றும் உங்கள் வாழ்க்கையும் ஊழியமும் எங்கு செல்லுகிறதென்றும் தீர்மானிக்கப்படும். நீங்கள் எவைகளை அறிந்திருக்கிறீர்கள் என்பதல்ல, நீங்கள் யாரை அறிந்திருக்கிறீர்கள் என்பதே உங்கள் வாழ்க்கையை வரையறுக்கும்.