Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
மோசே பள்ளிக்குச் சென்றார்

ஒவ்வொரு தேவ பிள்ளைக்கும் ஒரு கல்வி தேவை. ஒருவரை ஆண்டவருடைய ஊழியக்காரராக்கத் தேவையான கல்வி சாதாரணக் கல்வியைவிட வேறுபட்டது. இந்த உலகத்தின் பள்ளி மக்களுக்குரிய தகவலைக் கொடுக்கிறது. ஆனால் தேவனுடைய பள்ளி, வாழ்க்கை அனுபவத்தை அளிக்கிறது. ஒருவர் பெரிய கலாசாலைகளிலும் சிறந்த கட்டிடங்களிலும் உலகக் கல்வியைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், கடினத் தாக்குதல்களும் பலமான எதிர்ப்புகளும் சந்திக்கிற விளையாட்டு அரங்கங்களில்தான் தேவனுடைய கல்வியை அவர் பெற்றுக்கொள்ளுகிறார். உலகக் கல்வியை முடிக்கும்போது ஒருவர் பட்டம் பெறுகிறார். தேவனுடைய கல்வியை முடிக்கும்போது அவர் பண்பைப்பெறுகிறார்.

மோசே தேவனுடைய பள்ளிக்குச் சென்றார். அவர் ஏற்கனவே எகிப்திலுள்ள மிகச்சிறந்த கலாசாலைகளில் கல்வி கற்றிருந்தார். அவர் பார்வோனின் குமாரத்தியின் மகனாக வளர்ந்தார். சமுதாயத்தில் மிகச் சிறந்த வாய்ப்புக்கள் அவருக்குக் கிடைத்தன. ஆயினும், தேவனுடைய சித்தத்தை நிறைவெற்ற அவை ஒன்றும் அவரை ஆயத்தப்படுத்தவில்லை. அவர் உலகக் கல்வியைப் பெற்றார், ஆனால் கிறிஸ்துவைக்குறித்த அறிவு அவருக்கில்லை. ஆயினும், அவருடைய கல்விக்காகத் தேவனிடம் ஒரு திட்டமிருந்தது. தேவனுடைய பள்ளியில் மோசேயைச் சேர்ப்பதற்கு முன்னதாக அவர் வாழ்க்கையில் தோல்வியைச் சந்திக்கவேண்டியதாயிற்று. யாத்திராகமம் 2:11-15 ஐ வாசிக்கவும்.

மோசேயைத் தேவன் தம்முடைய அரசில் பயன்படுத்துமுன்னதாக அவர் தோல்வியை அனுபவிக்கும்படி தேவன் அனுமதிக்க வேண்டியதாயிற்று. மீதியான் வனாந்தரத்தில் தேவன் மோசேயைத் தம்முடைய பள்ளியில் சேர்த்தார். சுருக்கிச் சொன்னால், மோசே தாழ்மையென்னும் கலாசாலையில் பரிசுத்தஆவியானவர் என்னும் பேராசிரியருக்குக்கீழ் கல்விகற்றார். அந்தப் பட்டப்படிப்பு முடிந்தபின்தான் அவர் தேவனுடைய மனிதராக முடியும்; அப்போதுதான் அவர் தேவனைச் சார்ந்து செயல்படுவார்.

மீதியான் வனாந்தரத்தில் செயல்பட்டுவந்த தாழ்மை என்னும் கலாசாலையில் மோசே பல பாடப்பிரிவுகளைக் கற்கவேண்டியதாயிற்று. முதலாவதாக, தேவனுடைய பணி தேவனுடைய காலத்திலேயே செய்யப்படவேண்டுமென்று அவர் கற்றுக்கொண்டார். அவர் ஒரு எகிப்தியனைக் கொன்றார். தம்முடைய ஜனத்தின் துன்பத்தை அவர் கண்டார். அவர்களுடைய அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுதலைசெய்ய அவர் ஆசித்தார். ஆனால், குறிப்பிட்ட காலத்துக்கு நாற்பது ஆண்டுகளுக்குமுன் அவர் அவ்வாறு செயல்பட்டார். தேவனுக்கு ஒரு கால அட்டவணை உண்டு. சரியான நேரம், சரியான செய்தியோடு சரியான இடத்திலிருப்பவனே தேவனுடைய மனிதன். ஆனால் மோசே தவறான சமயத்தில் சரியான இடத்திலிருந்தார். தேவனுடைய கால அட்டவணைப்படி பரிசுத்தஆவியானவருடைய ஒத்தாசையோடு செயல்பட மோசே கற்கவேண்டியதாயிற்று.

மேலும், தேவனுடைய பணி தேவனுடைய வல்லமையிலேயே செய்யப்படவேண்டும் என்றும் மோசே கற்றுக்கொள்ளவேண்டியதாயிற்று. எகிப்திலுள்ள எல்லா யுத்தக்கலைகளையும் மோசே கற்றுத் தேர்ச்சியடைந்திருந்தார். ஆனால், தேவனுடைய வேலை மனித சக்தியில் செய்யப்பட முடியாது; பரிசுத்தஆவியானவரின் வல்லமையிலேயே செய்யப்படவேண்டும். தன்னுடைய எபிரெய சகோதரர்களுக்குத் தீமை இழைக்கப்படுகிறதை மோசே கண்டார்; அதைச் சரிசெய்ய விரும்பினார். அவர் தன்னால் இயன்றதைச் செய்தார், அது அவருடைய ஜனத்துக்குக் கூடுதல் துன்பத்தையே கொண்டுவந்தது. பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, தேவனுடைய ஆவியினாலேயே அவருடைய வேலை செய்யப்படவேண்டும் என்பதை மோசே கற்றுக்கொண்டார்.

தாழ்மையாகிய கலாசாலையில் மோசே இறுதியாக ஒரு பாடங்கூட கற்றுக்கொள்ளவேண்டியதாயிற்று. தேவனுடைய ஊழியம் தேவனுடைய வழியிலேயே செய்யப்படவேண்டுமென்பதுவே அது. உலகத்தின் வழிமுறைக் கூடுதல் அடிமைத்தனத்திற்கும், மரணத்திற்கும் வழிநடத்துகிறது. ஆனால், தேவனுடைய வழிமுறையோ கிறிஸ்துவின் தன்மைக்கு ஒத்தவர்களாக்குகிறது. தாழ்மையாகிய கலாசாலையிலிருந்து பட்டம்பெறுமுன் மோசே மீதியான் மலையில் தேவனைச் சந்திக்கவேண்டியதிருந்தது. அந்த வேளையில்தான் தேவன் யார் என்பதை அவர் தெளிவாய் அறிய ஆரம்பித்தார். தேவனைக்குறித்த அறிவினால் அவர் தன் பண்பை விருத்தியாக்கினார். அதற்கப்புறம் மாத்திரமே தேவனுடைய ஜனத்தை அவர்களுடைய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க மோசே ஆயத்தமானார்.

தேவனுக்கேற்ற ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்க நீங்கள் விரும்புகிறீர்களா? தேவனுடைய பள்ளியில் சேருங்கள்!