Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
வெற்றியான ஆண்களும் பெண்களும்

ஒரு புதிய ஆண்டை ஆரம்பிக்கும்போது, தேவ மனிதர்களைக் காண இந்த உலகம் மிகவும் தேவைப்படுகிறது. வரலாற்று முக்கியம் நிறைந்த இக்காலகட்டத்தில், மனுக்குலத்தை இருள் சூழுவதுபோலத் தோன்றுகிறது. இத்தகைய நள்ளிரவு நேரத்தில் தேவனுடைய கரத்தில் ஆயுதமாயிருக்கும் ஆண்களும் பெண்களும் பிரகாசமாய் ஜொலிக்கிற விளக்குகளாயிருக்கிறார்கள். எனவே, இந்த ஆண்டில் தேவனுடைய மக்களான சில ஆண்கள் மற்றும் பெண்களுடைய வாழ்க்கைகளைத் தியானத்தோடு சிந்திக்கலாம்.

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவ பக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு (1தீமோ.6:10,11) என்று பவுல் இளைஞனான தீமோத்தேயுவுக்கு எழுதினார். தீமோத்தேயு பவுலைவிட மிகவும் வயது குறைந்தவராயிருந்தும் பவுல் அவரைத் தேவனுடைய மனுஷன் என்று அழைக்கிறதைப் பார்க்கிறோம். தேவனுடைய மனிதர் என்று அழைக்கப்படுவதற்கு வயது ஒரு வரம்பல்ல. தேவனை அறியும் நாட்டமும், அவரோடு தாழ்மையாக நடப்பதும், அழிந்துபோகிற உலகத்தோடு அவருடைய அன்பைப் பகிர்ந்துகொள்ளுவதுமே ஒருவரைத் தேவனுடைய மனிதனாக்குகிறது.

தேவனுடைய மனுஷனுக்குரிய பல தகுதிகளைப் பவுல் கூறியுள்ளார். முதலாவதாக, முக்கியமான காரியத்தில் தன் சிந்தையைப் பதிக்கவேண்டுமென்று தீமோத்தேயுவுக்கு அவர் கூறுகிறார். வேறு எதுவும் அவருடைய சிந்தையைச் சிதறடிக்கக்கூடாது. பணமோ மற்றும் உலகப் பொருட்களோ அவருடைய ஒருமுகமான நோக்கை மங்கலாக்கக்கூடாது. அநேகர் தங்கள் நேரான கண்ணோட்டத்தை இழந்து, அதின்பலனாக பல நோவுகளையும் துக்கங்களையும் அனுபவித்தார்கள் என்றும் பவுல் சொன்னார். பொருளாசையினாலே சிலர் கவரப்பட்டு அழிவைத் தேடிக்கொள்ளுகிறார்கள். விலையேறப்பெற்ற பொருட்களைப் பெற்றுக்கொள்ளுவதில் எந்தத் தவறுமில்லை. நாம் அனுபவிப்பதற்காகவே தேவன் அவற்றைப் படைத்திருக்கிறார். ஆனால், நம்முடைய தேவைகளுக்காகத் தேவனால் கொடுக்கப்பட்டவைகள் என்று அவைகளைப் பாராதபடி, அவைகளை நாம் நேசிக்க ஆரம்பிக்கும்போது, வேதனைகளுக்கு வழி நடத்துகிற சறுக்கலான பாதையில் நாமிருக்கிறோம்.

கிறிஸ்துவையும் அவருடைய நீதியையும் முதலாவது தேடுவது நம்முடைய நோக்கமாயிருக்கவேண்டும். வெற்றியான தேவனுடைய மனிதர்கள் நாடவேண்டிய ஆறு இயல்புகள் உண்டு. நாம் நீதியைத் தேடவேண்டும்; அதாவது, தேவனோடுள்ள சரியான உறவு அது. நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கியமான காரியம் தேவனோடு சரியான தொடர்புகொள்ளுவதே. தேவனோடுள்ள கூட்டுறவை அழிக்கிறவைகளையல்ல, விருத்தியாக்குகிறவைகளையே நாம் நாடவேண்டும். அவ்வாறு நீங்கள் செய்யும்போது வெற்றியைக் கண்டடைவீர்கள்.

கிறிஸ்துவைப்போலாக நாடுங்கள்; அதுவே உங்கள் வாழ்க்கையின் இலக்காயும் குறிக்கோளுமாயிருக்கட்டும். அத்தகைய நோக்கம் உங்களைத் துயரத்துக்கு வழிநடத்தாமல், மகிழ்ச்சிக்கும் வெற்றிக்கும் வழிநடத்தும். ஆனால், அது சற்று கடினமான காரியமாகும். திடீரென்று ஒருநாள் நான் கிறிஸ்துவைப்போலாகப்போகிறேன் என்று நீங்கள் தீர்மானிப்பதால், உடனடியாக வல்லமையும் வெற்றியுமுள்ள கிறிஸ்தவர்களாக முடியாது. அவ்வாறாவது உங்கள் ஆற்றலிலில்லை. நீங்கள் விசுவாசத்தினால் வாழவேண்டும், நடக்கவேண்டும், சுவாசிக்கவேண்டும். கிறிஸ்துவின் தன்மைகளைப் பிரதிபலிக்கிற நபராக உங்களை மாற்றும்படி அவரை நீங்கள் நம்பவேண்டும். நீதியையும் தேவபக்தியையும் தேடுவதோடு விசுவாசத்தையும் நாடவேண்டும். அதை எவ்வாறு செய்யலாம்? விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும் என்று வேதம் சொல்லுகிறது. தேவனுடைய வசனத்தை ஆழ்ந்து ஆராய்வதின்மூலம் விசுவாசத்தை நாடவேண்டும். அப்போது நீரூற்றிலிருந்து புத்துணர்ச்சியளிக்கிற தண்ணீர் பொங்கிவருவதுபோல, உங்கள் உள்ளான ஆளத்துவத்திலிருந்து விசுவாசம் பொங்கிவரும்.

உங்கள் விசுவாசத்தோடே அன்பையும் சாந்தகுணத்தையும் கூட்டுங்கள். தேவனை மிகவும் வைராக்கியமாய்த் தேடுகிற இரண்டு கூட்டம் கிறிஸ்தவர்கள் உண்டென்று நான் கண்டிருக்கிறேன். ஒரு வகுப்பாரைத் தீர்க்கதரிசிகள் என்று நான் அழைக்கிறேன். மற்ற வகுப்பார் இரக்கம் காண்பிக்கிறவர்கள். தீர்க்கதரிசி நீதியையும் தேவ பக்தியையும் விசுவாசத்தையும் நாடுகிறார். ஆனால், இரக்கம் காண்பிக்கிறவர் அன்பையும் சாந்தகுணத்தையும் நாடுகிறார். ஏதாவது ஒன்றைத் தேடுங்களென்று பவுல் சொல்லாமல், எல்லாவற்றையும் நாடவேண்டுமென்றே சொல்லுகிறார். நம்முடைய தூய்மைநிலையோடு சேர்ந்து நாம் அன்பு, இரக்கம், மற்றும் சாந்தகுணமான ஆவியை நாடவேண்டும். நம்மைப் பகைக்கிறவர்களை நாம் நேசிக்கவேண்டும். நம்மைத் தேவைப்படுகிறவர்கள்மீது கரிசனைகொள்ளவேண்டும்; நம்மைச் சுற்றிலும் விழுந்துபோகிறவர்களைச் சாந்தமாய் நடத்தவேண்டும். நாம் கிருபையும் இரக்கமுமுள்ளவர்களாயிருக்கவேண்டும்.

தேவனுடைய மனிதர்களான ஆண்களும் பெண்களும் கிறிஸ்துவையும் அவருடைய நீதியையும் கடைசிமட்டும் நாடுவார்கள். அதில் அவர்கள் நிலைத்திருப்பார்கள். உற்சாகத்தோடு ஆரம்பிக்கிற அநேகர் சோர்பிலே முடிவடைகிறார்கள். ஆனால், தேவனுடைய மனிதர்கள் ஓட்டத்தை ஓடி முடிப்பார்கள். அவர்கள் சென்றடையவேண்டிய இடத்தில் தங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிற கிறிஸ்துமீதே தங்கள் பார்வையைப் பதிக்கிறார்கள். அவர்கள் குறுகிய ஓட்டமல்ல, மாரத்தான் ஓட்டமே ஒடுகிறார்கள். ஆகையால்தான் எபிரெய நிருப ஆக்கியோன், விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி ஓடக்கடவோம் என்று எழுதினார். உங்கள் கண்களைக் கிறிஸ்துமீது பதிக்குமாறு நான் உங்களை ஊக்குவிக்கிறேன். வெற்றியான கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ஆரம்பமும் முடிவும் அவரே. அவரை நோக்கிப் பார்த்து வெற்றியை அனுபவியுங்கள்.