Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
தேவனுடைய வசனத்தை நமது இருதயத்தில் வைத்துவைத்தல்

நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன் (சங்.119:11) என்று எழுதியதின்மூலம் வெற்றியான கிறிஸ்தவ வாழ்க்கையின் இரகசியத்தை சங்கீதக்காரன் வெளிப்படுத்தினார். மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் (மத்.4:4) என்று இயேசு கூறியபோது, இதே கரிசனையையே அவர் வெளிப்படுத்தினார். ஜீவ அப்பத்துக்காக வாஞ்சிக்கிற ஒரு உள்ளான பசி நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. நம்முடைய இருதயத்தின் ஆழமான ஆவல்களைத் தீர்க்க தேவன் கொடுக்கிற ஆகாரத்தை ஏற்றுக்கொள்ளும்போது மாத்திரமே நம்முடைய பசியும் தாகமும் தீர்க்கப்பட முடியும். இல்லாவிட்டால், ஆவிக்குரிய நிலையில் நாம் பலவீனராகி, இறுதியாக நாம் நம்பிக்கை இழவுக்குள்ளும் தோல்விக்குள்ளும் விழுவோம். கிறிஸ்துவோடுள்ள நம்முடைய அனுதின வாழ்க்கையில் நாம் வெற்றியை அனுபவிக்கவேண்டுமானால் தேவனுடைய வசனத்தை நம்முடைய இருதயத்தில் வைத்துவைக்கவேண்டும்.

ஆனால், நடைமுறையில் நாம் அதைச் செயல்படுத்துவது எவ்வாறு? கிறிஸ்துவோடு நான் நடந்த அநேக ஆண்டுகளில் நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய வசனத்தை வைத்துவைக்கும் ஐந்து வழிமுறைகளைக் கற்றுக்கொண்டேன். முதலாவது, நாம் தேவனுடைய வசனத்தை வாசிக்கவேண்டும். நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள் (யோவா.15:3) என்று இயேசு சொன்னார். தேவனுடைய வசனத்தை நாம் வாசிக்கும்போது, நம்முடைய வாழ்க்கையைச் சுத்தப்படுத்தும் திறன் அதற்கிருக்கிறது. வேதவாக்கியங்களை முறையாக, ஒழுங்காக, தியானத்தோடு வாசிக்கவேண்டியது மிகவும் முக்கியம். நாம் அதை ஒழுங்குமுறையாக வாசிக்கும்போது தேவனுடைய தன்மையைக் கண்டுகொள்ள ஆரம்பிக்கிறோம்; அவருடைய இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதையும் கண்டுபிடிப்போம்; அவர் யாரென்றும், அவர் எவ்வாறு செயல்படுகிறாரென்றும் நாம் கற்றுக்கொள்ளுவோம். அதை நாம் கிரமமாகவும் வாசிக்கவேண்டும். நாம் நேரந்தவறாது உணவருந்தாவிட்டால் உயிர்வாழ முடியாது. அவ்வாறிருக்க, தேவனுடைய ஆவிக்குரிய ஆகாரத்தைக் காலந்தவறாது உண்ணாவிட்டால் ஆவிக்குரிய நிலையில் நாம் உயிர்வாழலாமென்று எவ்வாறு எண்ணலாம்?

நாம் தியானச் சிந்தையோடும் வேதத்தை வாசிக்கவேண்டும். அதாவது, தேவனுடைய வசனத்தைத் தியானிப்பதின்மூலம் அதை நம்முடைய வாழ்க்கையில் வைத்துவைக்கலாம். வேதவாக்கியங்களை வாசிக்கும்போது அவைகளைக்குறித்து நாம் சிந்திக்கவேண்டும். மற்றப் புத்தகங்களைப்போல நாம் வேதபுத்தகத்தை வாசிக்கக்கூடாது. வேதபுத்தகம் தேவனுடைய வார்த்தை; தேவன் நம்முடைய இருதயங்களோடு பேசுவதே அது. ஆகையால் நாம் வாசித்தவைகளை நம்முடைய மனதிலும் உணர்ச்சிகளிலும் செயல்களிலும் சேமிக்க நமக்குச் சமயம் தேவை. நாம் வாசித்தவைகளைக்குறித்து ஆராய்ந்து, நம்முடைய வாழ்க்கையில் செயல்படுத்தவேண்டும். வேதத்தை வாசித்து ஒரு நாளை ஆரம்பிப்பது நமக்கு உதவியாயிருக்கும். அதன்பின் நாம் பயணிக்கும்போதும் பணிபுரியும்போதும் படிக்கும்போதும் நாள்முழுவதும் தேவன் நமக்குச் சொல்லியுள்ளவற்றைத் தியானிக்கலாம்.

மூன்றாவதாக, தேவனுடைய வசனத்தைக் கேட்பதின்மூலமாக அதை நாம் வாழ்க்கையில் வைத்துவைக்கலாம். விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும் (ரோம.10:17) என்று பவுல் எழுதினார். இது அற்புதமானதொரு வாக்கியம். உங்கள் விசுவாசத்தை விருத்தியாக்கவும், அதில் வளரவும் எவ்வாறு முடியுமென்று எப்பொழுதாவது நீங்கள் வியப்புக்கொண்டதுண்டா? அத்தகைய விசுவாச வளர்ச்சி தேவனுடைய வசனத்தைக் கேட்பதினால் வருகிறது என்று பவுல் தெளிவாகக் கூறுகிறார்.

அநேக ஆண்டுகளுக்குமுன் நான் பெருநாட்டில் இரண்டு பட்டணங்களில் பிரசங்கித்தேன். முதல் பட்டணத்தில் விளையாட்டு அரங்கம் மூன்றில் இரண்டு பங்கு நிறைந்திருந்தது. தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தைக்குறித்த ஒரு எளிய செய்தியை நான் தெளிவாகப் பிரசங்கித்தேன். இரண்டாவது பட்டணத்திலும் அதே அளவு மக்கள் கூடியிருந்தார்கள்; ஆனால், ஒரு பெரிய வேற்றுமையைக் கண்டேன். முதல் பட்டணத்தைவிட இரண்டாவது பட்டணத்தில் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள அதிகமான மக்கள் முன்வந்தனர். இரண்டு இடங்களிலும் தேவையான ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. இரண்டு பட்டணங்களிலும் ஏறக்குறைய ஒரே எண்ணிக்கையான அக்கிறிஸ்தவர்களே கூட்டங்களில் பங்கெடுத்தார்கள். அவ்வாறிருக்க, இது ஏன் நடந்தது என்று நான் ஆச்சரியப்பட்டேன். அப்போதுதான் முதல் பட்டணத்தில் ஒலிப்பெருக்கி வசதியில் பிரச்சனையிருந்தது என் ஞாபகத்துக்கு வந்தது. முதலாவது பட்டணத்தில் தேவனுடைய வார்த்தையை மக்கள் தெளிவாகக் கேட்கக்கூடாதிருந்தது. ஆனால், இரண்டாவது பட்டணத்தில் ஒலிப்பெருக்கிவசதி மிகவும் சிறப்பாய் அமைந்திருந்தது. அப்பொழுது ஒரு சிறந்த உண்மையை நான் உணர்ந்துகொண்டேன். தேவனுடைய வசனத்தை தெளிவாகவும் துல்லியமாகவும் கேட்டால்தான் விசுவாசம் வருகிறது. நாம் எவ்வாறு தேவனுடைய வசனத்தைக் கேட்கிறோமென்பதுதான் நாம் எவ்வாறு விசுவாசத்திற்குக் கீழ்ப்படிகிறோமென்பதைத் தீர்மானிக்கிறது.

தேவனுடைய வசனத்தை மனனம் செய்வது நாம் அதை நம்முடைய வாழ்க்கையில் வைத்துவைப்பதற்குரிய நான்காவது வழியாகும். இது நாம் வளருவதற்கு பல வழிகளில் ஆற்றலளிக்கிறது. முதலாவதாக, நாம் வேத வாக்கியங்களை மனனம் செய்தால் தேவையான வேளைகளில் தேவனுடைய வசனத்தைப் பயன்படுத்த உதவியாயிருக்கும். நாம் அவற்றை நம்முடைய ஆத்துமாவின் உட்பாகத்தில் பதுக்கி வைக்கிறோம். ஒரு வாக்குத்தத்தமோ, கட்டளையோ, சாட்சியோ நமக்குத் தேவைப்படுகிற அதே வேளையில் தேவனுடைய வசனத்திலிருந்து நமக்குத் தேவையானவைகள் நமது மனதில் தோன்றுகின்றன. அவ்வாறாக நம்முடைய மனதைப் புதுப்பிக்க நாம் ஆற்றலடைகிறோம். நம்முடைய எல்லா எண்ணங்களையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம் (2 கொரி.10:5). இரண்டாவதாக, நம்முடைய விசுவாசத்துக்கடுத்த எல்லாக் கேள்விகளுக்கும் எல்லா வேளைகளிலும் பதிலளிக்க நாம் ஆற்றலடைகிறோம். அதின்பலனாக நம்முடைய விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ளுவதில் அதிகத் தைரியமுள்ளவர்களாகிறோம்.

இறுதியாக, நாம் தேவனுடைய வசனத்தை ஆராய்ந்து கற்கவேண்டும். நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு (2 தீமோ.2:15) என்று பவுல் இளைஞனாகிய தீமோத்தேயுவுக்குக் கூறினார். வேதத்தைக் கற்பதற்கு பல வழிகளுண்டு. ஆயினும், எந்த முறையில் நாம் வேதத்தைக் கற்றாலும் அவற்றில் தேவனைச் சந்திக்கத்தக்கதான ஒரு இருதயம் நமக்கு எப்போதும் தேவை. அறிவுபூர்வமாக புரிந்துகொள்வதற்காக வேதத்தைக் கற்காமல், தேவனைக் கூடுதலாக அறிந்துகொள்ளவே நாம் கற்கவேண்டும். மோசேயின் வாழ்க்கை வரலாற்றை நான் கற்றுக்கொண்டிருந்த நேரந்தான் என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆளத்துவ வளர்ச்சிக்குரிய சிறந்த சமயமாயிருந்தது. அக்கல்வியின் வேளையில் நான் தேவனைச் சந்தித்தேன்; அவர் என்னுடைய வாழ்க்கைப்போக்கின் திசையைத் திருப்ப உதவிசெய்தார்.

நீங்கள் உங்கள் மனதைச் செலுத்தக்கூடிய வேறுவிதமான கல்விமுறைகளுமுண்டு. வேதத்திலுள்ள புத்தகங்களையோ, அதிகாரங்களையோ அல்லது வசனங்களையோ தனித்தனியாக விளக்கவுரையோடு படிக்கலாம். அல்லது தேவனுடைய கிருபை, ஜெபம் போன்ற தலைப்புகளின் அடிப்படையில் வேதத்தைக் கற்கலாம். வேதபுத்தகத்தில் வரும் வார்த்தைகளின் மூலப்பொருளை ஆராய்வது இன்னொருமுறையான கல்வியாகும். எந்த முறையில் வேதவாக்கியங்களைக் கற்றாலும், தேவனை அறிய வாஞ்சிக்கும் ஒரு இருதயத்தோடு நீங்கள் அதைச் செய்யவேண்டியது தேவை.

ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார் (யாத்.33:11) என்று வேதம் சொல்லுகிறது. தேவன் மோசேயோடு பேசினதுபோல உங்களோடும் நேரடியாகப் பேச விரும்புகிறார். அவர் அவ்வாறு பேசுவது தம்முடைய வசனத்தின்மூலமாகவே. தேவன் தம்முடைய இருதயத்திலிருக்கிறதை உங்களோடு பகிர்ந்துகொள்ள நீங்கள் விரும்பினால் அவருடைய வசனத்தை உங்கள் இருதயத்திற்குள் ஏற்றுக்கொள்ளவேண்டும். தேவன் பேசும்போது நீங்கள் சுத்தமாவீர்கள்; அப்போது நீங்கள் வெற்றியோடு வாழ ஆரம்பிப்பீர்கள்.