Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
தேவனுடைய வசனத்தின்மூலம் அவரோடு தொடர்புகொள்ளுதல்

நான் எழுதியுள்ள 'ஜெபத்தின் விளைவு' என்ற புத்தகத்திலுள்ள ஜெபத்தைக்குறித்த கோட்பாடுகளை மங்கோலிய குடியரசிலுள்ள விசுவாசிகளின் ஒரு சிறிய குழுவுக்குக் கற்பிக்க அங்கு நான் 1990-களின் ஆரம்பத்தில் சென்றேன். மங்கோலியா சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டதில்லை. அதிகக் காலத்துக்குமுன் திருப்பணியாளர்கள் அங்கு சென்றார்கள்; ஆனால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகாலமாக அந்த நாட்டில் தேவனுடைய இரட்சிப்பின் அற்புதச் செய்தியை யாரும் கேட்டதில்லை.

அந்நாட்டு மக்கள் அநேகம்பேரும் புத்த மதத்தைச் சார்ந்தவர்களாயிருந்தாலும், தேவனைக்குறித்த எல்லா நம்பிக்கையையும் பொதுவுடைமைக்கட்சி அவர்களிலிருந்து துடைத்துப்போட்டது. ஆனால், அந்த நாடு விடுதலையடைந்ததும் சுவிசேஷத்திற்கு வாசல்கள் திறக்க ஆரம்பித்தன. தலைநகராகிய உலான்பட்டாரில் ஒரு சிறு கூட்டம் மக்கள் இயேசுவை விசுவாசித்தார்கள். நான் அங்கு சென்று அவர்களுக்கு ஜெபத்தைக்குறித்துக் கற்பிக்க அழைக்கப்பட்டேன். அநேக மாலைவேளைகளில் ஜெபத்தைக்குறித்த அடிப்படை உண்மைகளை அவர்களுக்குப் போதித்தேன். கூட்டங்களில் தேவன் அற்புதமாக அசைவாடினார். அங்கிருந்து டர்கன் என்ற வேறொரு பட்டணத்திற்கு நான் போகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். அக்காலத்தில் அந்தப் பட்டணத்தில் எந்தவொரு விசுவாசியுமில்லை. அங்குள்ளவர்கள் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டதுகூட இல்லை.

தேவன் யாரென்பதும், அவர் நம்முடைய வாழ்க்கையில் எவைகளைச் செய்யக்கூடுமென்பதுமான நற்செய்தியை நான் அவர்களோடு பகிர்ந்துகொண்டபின்னர் ஒரு வயதானவர் எழுந்து மிகவும் முக்கியமான ஒரு கேள்வியை என்னிடம் கேட்டார். உங்கள் கடவுளின் தோற்றம் என்ன? என்பதே அந்தக் கேள்வி. நான் அதிர்ச்சியடைந்தேன். ஏனெனில், யாரும் இதுவரை இத்தகைய கேள்வியை என்னிடம் கேட்டதில்லை. இதற்கு நீங்கள் என்ன மாறுத்தரம் கொடுத்திருப்பீர்கள்? என்னிடம் கேட்கப்பட்ட மிகவும் கடினமான கேள்விகளில் இதுவும் ஒன்று.

நான் அம்மனிதனைப் பார்த்து, தேவனுடைய தோற்றம் இன்னதென்று நீர் அறியவேண்டுமேயானால் அவருடைய இயல்புகளையும் பண்புகளையும் தன்மைகளையும் விவரிக்கிற ஒரு புத்தகத்தை அவர் நமக்குத் தந்திருக்கிறார் என்பதை நீர் அறியவேண்டும். அந்தப் புத்தகம் ஆவியானவரால் ஏவப்பட்ட பரிசுத்த மனிதரால் எழுதப்பட்டது. அவர்கள் சரித்திரத்தின் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்தார்கள். அவர்களில் சிலர் அரசர்களாயிருந்தார்கள். சிலர் சாதாரண செம்படவர்களாயிருந்தார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் அகிலாண்டத்தைப் படைத்த தேவனை நேருக்குநேர் சந்தித்திருந்தார்கள். அவர் தங்களுடைய வாழ்க்கைகளை எவ்வாறு மாற்றினார் என்கிற சாட்சிகளையும் அவருடைய வல்லமையான கிரியைகளையும் எழுதினார்கள். அவர் கூறிய பிரமாணங்களையும் வாழ்க்கைத் தத்துவங்களையும் அவர்கள் குறிப்பிட்டார்கள் என்று நான் சொன்னேன். என்னுடைய பதில் அந்த மனிதனைத் திருப்திசெய்ததுபோலத் தோன்றியது.

தேவனைத் தெளிவாக அறியவேண்டுமென்று உண்மையாக நீங்கள் விரும்பினால், அவர் யாரென்றும், அவர் எவ்வாறு செயல்படுகிறாரென்றும் விளக்குகிற நேரிடையான சாட்சி உண்டென்று நீங்கள் புரிந்துகொள்ளுவது தேவை. தேவன் தம்முடைய மக்களுக்குக் கொடுத்த அவருடைய வார்த்தையே வேதபுத்தகம். நாம் தேவனை அறிந்துகொள்ளவும், அவரோடு ஒன்றித்து வாழக் கற்றுக்கொள்ளவும் விரும்பினால் நாம் அவருடைய வசனத்தை வாசிக்கவும் கற்கவும் தியானிக்கவும் நம்மை அர்ப்பணிப்பது தேவை. அனுதினமும் தேவனுடைய வசனத்தை நம்முடைய வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கு நான்குவிதமான நோக்கங்களுண்டு.

நம்முடைய வாழ்க்கையில் வேதவாக்கியங்கள் எவைகளைச் செய்யக்கூடும் என்பதை விளக்கமாகப் பவுல் அப்போஸ்தலன் இளைஞனான தீமோத்தேயுவுக்கு எழுதினார். வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பித்தலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது (2 தீமோ.3:16,17) என்று அவர் எழுதினார். நம்முடைய வாழ்க்கையின் எதிர்மறையானதும் நேரடியானதுமான காரியங்களில் தேவன் எவ்வாறு இடைபடுகிறார் என்று பவுல் பட்டியலிடுகிறார். முதலாவது வேத வாக்கியங்கள் நமக்குக் கற்பிக்கிற காரியங்களைக் குறிப்பிடுகிறார். அவர் யாரென்றும், அவரை நாம் எவ்வாறு அறிந்து அவரோடு நடக்கமுடியுமென்றும் நாம் கற்றுக்கொள்ளுகிறோம். இரண்டாவது, நம்முடைய வாழ்க்கையில் தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்கள் காணப்படும்போது வேதம் நம்மைக் கண்டிக்கிறது. வேதத்துக்குத்தான் நம்மீது இறுதியான அதிகாரமுண்டு. அதற்குத்தான் நாம் கணக்குக் கொடுக்கவேண்டும். நம்முடைய வாழ்க்கையைச் சுற்றிலும் தேவன் ஒரு வட்டம் வரைகிறார்; எல்லையைக் கடக்கும்போது அவர் நம்மை அறிவிக்கிறார்.

நாம் தவறுசெய்யும்போது தேவன் சுட்டிக்காட்டமாத்திரம் செய்யவில்லை, அவர் நம்மைத் திருத்துகிறார்; அதாவது, நாம் வாழவேண்டிய பாதுகாவலான வட்டத்திற்குள் எவ்வாறு திரும்பவரமுடியும் என்பதை வேதவாக்கியங்களின்மூலம் நமக்குக் காண்பிக்கிறார். இறுதியாக, அவரோடுள்ள தகுதியானதும் நேர்மையுமான உறவில் சரியாக வாழ்வதின் வழிகளை அவர் நமக்குப் போதிக்கிறார். அவர் யாரென்றும், அவர் எவ்வாறு செயல்படுகிறாரென்றும், அவர் நம்மிடமிருந்து எவைகளை எதிர்பார்க்கிறாரென்றும் அறியாதபடி நம்முடைய வாழ்க்கையில் தொடர்பான வெற்றியை அனுபவிக்கமுடியுமென்று எண்ணுவது நினைக்கமுடியாத காரியமாகும்.

ஒரு வெற்றிவீரனுக்குத்தான் வெற்றி பெறுவதற்குரிய திட்டம் எப்போதுமுண்டு. வெற்றிபெறும் வாழ்க்கைக்குரிய செயல்திட்டத்தைத் தேவன் நமக்குத் தந்திருக்கிறார். வேதபுத்தகமாகிய மிகப் பழமைவாய்ந்த புத்தகத்தில் அதை நாம் காண்கிறோம். உங்களுடைய வாழ்க்கை ஓட்டத்தில் நீங்கள் வெற்றிபெறவேண்டுமேயானால் எக்காலத்துக்கும் பொருத்தமான வேதபுத்தகத்தைப் படியுங்கள். அது தேவனுடைய வார்த்தை. அது நம்முடைய வாழ்க்கைக்குரிய தெய்வீகத்திட்டம். நாம் நீதியைப் படிப்பதற்கு நமக்கு வழிகாட்டும் கையேடு. எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் எவ்வாறிருக்கிறார் என்பதைக்குறித்த பூரணமும் நிறைவுமான விவரணத்தை அது கொடுக்கிறது. அதை வாசியுங்கள், மகிழ்ச்சியான வெற்றியை அறுவடைசெய்யுங்கள்.