Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
ஆண்டவரே, ஜெபிக்கக் கற்றுத்தாரும்

இயேசு நம்புவதற்கரிய அநேகக் கிரியைகளைச் செய்ததை சீஷர்கள் கண்டார்கள். அவர் தண்ணீரைத் திராட்சரசமாக்கியதையும், நோயுற்றவர்களை ஆரோக்கியப்படுத்தியதையும், அசுத்த ஆவிகளைத் துரத்தியதையும், சிறப்பான பிரசங்கங்களைப் போதித்ததையும் மற்றும் மரித்தோரை உயிரோடு ஏழுப்பினதையுங்கூட அவர்கள் கவனித்தார்கள். ஆயினும், இவைகளில் எதையாவது ஒன்றைச் செய்வதற்குத் தங்களைக் கற்பிக்கும்படி அவர்கள் அவரிடம் ஒருபோதும் கேட்டதில்லை. ஆனால், ஆண்டவரே, எங்களுக்கு ஜெபம்பண்ணப் போதித்தருளும் (லூக்.11:1) என்று கேட்டார்கள். அவருடைய எல்லாச் சிறந்த செயல்களின் இரகசியமும் அவருடைய ஜெபவாழ்க்கையே என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். அதிகாலையில் அதிக நேரத்தை அவர் ஜெபத்தில் செலவிட்டார். அவருடைய வெற்றியின் இரகசியத்தை அவர்களும் அடைந்துகொள்ள விரும்பினார்கள்.

எவ்வாறு ஜெபிக்கவேண்டுமென்று இயேசு தம்முடைய சீஷர்களுக்கு அதற்குப் பின்வரும் வசனங்களில் கற்பித்தார். இதற்கு ஒத்த ஒரு வேதபாகத்தை நாம் மத்தேயு 6:9-13-ல் பார்க்கிறோம். அந்த வேதபாகத்தில் இயேசு ஜெபத்தைக்குறித்த ஐந்து அடிப்படை உண்மைகளைக் கற்பித்தார். ஒவ்வொன்றும் தேவனுடைய ஒரு குறிப்பிட்ட இயல்பின் சுருக்க விளக்கமாய் இருந்தது. ஜெபம் தேவனை அறிய ஆரம்பிப்பதே. அவருடைய எல்லா மகிமையிலும் மகத்துவத்திலும் நாம் அவரைக் காணும்போது, அவரிடத்தில் நம்முடைய இருதயத்தை ஊற்றிவிட ஆரம்பிக்கிறோம். ஒரு நபர் ஜெபிக்கும்போது அவர் என்னதான் செய்கிறார்? என்று என்னிடத்தில் பலவேளை கேட்கப்பட்டதுண்டு. முப்பது நிமிடங்களோ அல்லது ஒரு மணிநேரமோ ஜெபிப்பதற்கு என்னதான் இருக்கிறது? என்று மக்கள் அடிக்கடி எண்ணுகிறார்கள். ஆனால், ஜெபத்துக்குரிய அடிப்படைத் தத்துவங்களை நடைமுறைப்படுத்த நாம் ஆரம்பிக்கும்போது கூடுதல் நேரம் தேவைப்படுவதாக மக்கள் கண்டுகொள்ளுகிறார்கள். எனவே நாம் எவ்வாறு ஜெபிக்கவேண்டும்? இயேசு கற்பித்த அடிப்படைத் தத்துவங்களென்ன?

முதலாவது தத்தவம் துதித்தலும் நன்றியறிவித்தலுமே. மத்தேயு 6:9-ல் தேவன்மீது நம் பார்வையைத் திருப்பியவராக இயேசு ஜெபத்தின் வாசலைத் திறந்தார். தேவனுடைய மூன்று இயல்புகளை சீஷர்கள் பார்க்கும்படி அவர்களுக்கு அவர் கற்பித்தார்: அ) எங்கள் பிதாவே; ஆ) பரமண்டலங்களிலிருக்கிறவர்; இ) உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. தேவன் நம்முடைய பிதா என்பது அவர் நல்லவர் என்பதைக் காண்பிக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் பாடுகள் வரும்போது இதை அறிந்திருப்பது மிகவும் முக்கியமானதாகும். தேவன் நல்லவரென்றும் நம்முடைய வாழ்க்கைக்குரிய மிகவும் சிறந்தவைகளையே அவர் விரும்புகிறாரென்றும் நாம் புரிந்துகொள்ளுவது தேவை. நாம் அப்பம் கேட்டால் அவர் கல்லைக் கொடுக்கமாட்டார். ஆனால், உலகமோ பிசாசோ நமக்குக் கல்லைக் கொடுத்தால் அவர் அதை அப்பமாக மாற்றுவார்.

பரமண்டலங்களில் இருக்கிறவர் என்பது தேவனுடைய மகத்துவத்தைக் குறிக்கிறது. அவர் தம்முடைய அரியணையில் அமர்ந்திருக்கிறார். வானத்திலும் பூமியிலும் அவருக்கு சகல வல்லமையும் அதிகாரமும் உண்டு. அவர் சர்வவல்லமையுள்ள தேவன்.

உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக என்று இயேசு கற்பித்ததிலிருந்து தேவனுடைய பரிசுத்தத்தை அவர் நமக்குக் காண்பிக்கிறார். தேவன் தனித்தன்மை வாய்ந்தவர். நாம் அவருடைய படைப்புக்கள். அவரே படைத்தவர். நாம் பாவிகள், அவர் முற்றிலும் தூய்மையானவர். இந்த அகிலாண்டத்தில் எங்கும் அவரைப்போல ஒருவருமில்லை. எனவே, பக்திவினயத்தோடு நாம் அவருக்குமுன் தலை வணங்கவேண்டும்.

தேவன் நமக்குச் செய்திருக்கிற அநேக நல்ல காரியங்களுக்காக அவருக்கு நாம் நன்றிகூறுகிறோம். தேவன் யாராயிருக்கிறார் என்பதற்காக, அதாவது அவருடைய இயல்புகளுக்காகவும் பண்புகளுக்காகவும் அவரை நாம் துதிக்கிறோம். ஆகையால் நாம் ஜெபிக்கும்போது, தேவன் யார் என்றும், அவர் நமக்கு என்ன செய்திருக்கிறாரென்றும் சிந்திக்க முதலாவது நாம் சிறிதுநேரம் எடுக்கவேண்டும். பரிசுத்த அலங்காரத்தோடே அவரைத் தொழுதுகொள்ளுங்கள். நம்முடைய வாழ்க்கையில் அவர் செய்த வல்லமையான கிரியைகளுக்காக அவரைத் தோத்தரியுங்கள்.

மத்தேயு 6:10-ல் நாம் காணும் இரண்டாம் அடிப்படைத் தத்துவம் பரிந்துபேசுதலாகும். இயேசு தேவனுடைய இயல்புகளை சீஷர்களுக்குச் சுட்டிக்காண்பித்தபின் உலகத்தின் தேவைகளை அவர்களுக்குக் காண்பித்தார். நம்முடைய கவனம் இப்போது தேவனிலிருந்து மாறி உலகத்திலுள்ள அவரது அரசு மற்றும் சித்தத்துக்கு நேராகச் செல்லுகிறது. நாம் தேவனை அறிந்துகொள்ளும்போது அவருடைய இருதயத்தில் உள்ளதையே ஆசிக்க ஆரம்பிப்போம். தேவனுடைய இருதயத்தில் என்ன இருக்கிறது? அது இரண்டாயிரம் ஆண்டுகளாகியும் இன்னும் மாறவில்லை. தேவனுடைய இருதயத்திலிருப்பது உலகமே (யோவா.3:16)! தேவனுடைய அரசு உலகத்துக்கு வரவும், அவருடைய சித்தம் மக்களுடைய வாழ்க்கையில் செய்யப்படவும் கிறிஸ்துவைத் தேவைப்படும் மக்களுக்காக நாம் ஜெபிக்க ஆரம்பிக்கவேண்டும். இதுதான் நான் அறிந்ததில் மிகவும் வல்லமையான ஜெபம். ஏனெனில், இது தேவனுடைய இருதயத்தை நேரே சென்றடைகிறது. தேவனுடைய இருதயத்தோடும் அரசோடும் சித்தத்தோடும் நாம் ஒருமனப்படும்போது அவர் வானத்தையும் பூமியையும் ஒன்றுபோல் அசைப்பார்.

மூன்றாவது அடிப்படைத் தத்துவம் விண்ணப்பமே (மத்.6:11). தங்கள் அன்றன்றுள்ள அப்பத்துக்காக தேவனிடம் கேட்கவேண்டுமென்று இயேசு சீஷர்களைக் கற்பித்ததின்மூலம் தங்களுடைய தேவைகளை ஆண்டவரிடம் கொண்டுவரவேண்டுமென்று அவர்களுக்குக் கூறிக்கொடுத்தார். மனுக்குலத்தின் மிகவும் அடிப்படைத் தேவை ஆகாரமே. தங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்கிற யேகோவாயீரேயாக தேவனைத் தம்முடைய சீஷர்கள் அறியவேண்டுமென்று இயேசு விரும்பினார். தம்முடைய பிள்ளைகளின் தேவைகளைச் சந்திக்க தேவன் ஆவலுள்ளவராயிருக்கிறார். அவர் நம்மை நேசிக்கிறார், நம்மைப் பராமரிக்கிறார். ஒவ்வொரு நாளும் நம்முடைய தேவைகளைத் தேவனிடம் கொண்டுவரவேண்டும். நாம் அவ்வாறு செய்யவேண்டுமென்று அவர் நம்மைக் கட்டளையிடுகிறார்.

இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கற்பித்த ஜெபத்தின் ஒழுங்குமுறையைக் கவனிக்கவேண்டும். முதலாவது அவர்களது சிந்தனை தேவனுக்கு நேராக ஒருமுகப்படுத்தப்பட்டது. அதற்கப்புறம் அவருடைய அரசு பூமிக்கு வருவதைக்குறித்து நாம் ஜெபிக்கிறோம்; அதாவது நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்கிறோம். இறுதியாக நம்முடைய தேவைகளை நாம் தேவனிடம் கொண்டுவருகிறோம். இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கற்பித்த ஜெபத்தின் வரிசைக்கிரமம் தேவன் முதலாவது, பிறர் இரண்டாவது மற்றும் நம்முடைய தேவைகள் மூன்றாவதாகும். ஆனால், நம்மில் பலரும் அதற்கு நேர்எதிரான வரிசைக்கிரமத்திலேயே ஜெபிக்கிறோம்.

நம்முடைய தேவைகளைத் தேவனிடம் கொண்டுவர ஆரம்பித்தபிற்பாடு, ஆவிக்குரிய தேவைகளாகிய இருதயத்தின் ஆழமான கரிசனைகளுக்கு நேராக நம்மை அவர் நடத்துகிறார். எனவே ஜெபத்தில் நாலாவது தத்துவம் பாவமன்னிப்பு; அது தேவனுடைய பரிசுத்தத்தையும் கிருபையையும் பொறுத்தது. மத்தேயு 6:12-ல் கூறப்பட்டுள்ள இந்த உண்மை நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய கிருபையையும் மன்னிப்பையும் பெற்றுக்கொள்ள தேவனையே சார்ந்திருக்கவேண்டும் என்று நம்மைக் கற்பிக்கிறது. நாம் மற்றவர்களை மன்னிக்க தேவனுடைய கிருபையாகிய ஆழமான கிணற்றிலிருந்து மொள்ளவேண்டும். நம்முடைய ஜெபவாழ்க்கையில் தோல்வியை உண்டாக்குகிற இரண்டு பிரச்சனைகள் நம்முடைய இருதயத்திலுள்ள குற்ற உணர்வும் மனக்கசப்புமாகும். இந்த வேதபாகத்தில் அவைகளுக்குரிய நிவாரணத்தை இயேசு கூறினார்.

இறுதியாக மத்தேயு 6:13-ல் ஆவிக்குரிய போராட்டத்தில் எவ்வாறு ஈடுபடுவதென்று இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கற்பித்தார். இந்த உலகத்தின் சோதனைகளிலிருந்து விலக்கிப் பாதுகாவலான இடத்துக்கு நம்முடைய வாழ்க்கையை வழிநடத்துகிற மகாப்பெரிய மேய்ப்பராக நாம் இயேசுவை நோக்கிப்பார்க்கிறோம். அதோடு, தீய சத்துவங்களுக்கும் வல்லமைக்குமீதுள்ள நம்முடைய வெற்றியாக நாம் அவரைக் காண்கிறோம். இயேசுவே நம்முடைய வெற்றி. நம்முடைய வாழ்க்கையில் அவருடைய ஜெபத்திட்டத்தைப் பின்பற்றும்போது நாம் வெற்றியில் வாழுகிறோம். இயேசுவையே நோக்கிப்பாருங்கள்! ஆண்டவரே, எனக்கு ஜெபிக்கக் கற்றுத்தாரும் என்று அவரிடம் கேளுங்கள்! அவர் உங்களுக்கு ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கும்போது நீங்கள் வெற்றியைக் கண்டடைவீர்கள்.