Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
ஜெபத்தின்மூலம் தேவனை அறிதல்

தேவனைக்குறித்த நெருக்கமான அறிவிலிருந்தே கிறிஸ்தவ வாழ்வின் வெற்றி ஒழுகுகிறது. நான் என்னுடைய மனைவியை முதலில் சந்தித்தபோது, டெபி டெக்ஸ் சார்மன் என்கிற இளம்பெண்ணை உங்களுக்குத் தெரியுமா என்று நீங்கள் என்னிடம் கேட்டிருந்தால், ஆம், எனக்கு அவளைத் தெரியும்; நான் ஒருநாள் அவளைச் சந்தித்தேன் என்றே பதிலளித்திருப்பேன். ஆனால், எனக்கு அவளைத் தெரியும் என்று நான் அன்று சொன்னதும் அவளை எனக்குத் தெரியும் என்று நான் இன்று சொல்லுவதும் முற்றிலும் வெவ்வேறான காரியங்களே. அன்று எனக்கு இல்லாதிருந்த ஒரு நெருக்கமான அறிவு இன்று எனக்கு அவளைக்குறித்து இருக்கிறது. அவளுடைய விருப்பு வெறுப்புக்களும், பலனும் பலவீனங்களும், மகிழ்ச்சி துக்கங்களும் இன்று எனக்குத் தெரியும்.

முதலில் என் மனைவியைச் சந்தித்தபோது நான் அவளை நேசித்தேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால், இன்று எனக்கு அவள்மீதுள்ள அன்பு மிக ஆழமானதும் சிறப்பானதுமாகும். நாங்கள் அநேக சந்தர்ப்பங்களில் சேர்ந்து நடந்ததாலும், அநேகமுறை வெவ்வேறான சூழ்நிலைகளைச் சந்தித்ததாலும் எங்களுடைய அன்பு மிகவும் அதிகமாக வளர்ந்திருக்கிறது. தேவனுடைய காரியத்திலும் இதுதான் உண்மை. நாம் எவ்வளவுக்கதிகமாக அவரை அறிகிறோமோ அவ்வளவுக்கதிகமாக நாம் அவரை நேசிப்போம். நாம் அவரோடுகூட மலையுச்சிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் நடக்கும்போது நமக்கு அவரோடுள்ள அன்பு தீவிரமாகிறது. ஆனால், அவரைச் சரியாக அறிந்துகொள்ள அதிகக் காலமாகும்.

அவரையும் (கிறிஸ்துவையும்) அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதே (பிலி.3:10) தன்னுடைய இருதயத்தின் ஆழமான வாஞ்சை என்று பவுல் அப்போஸ்தலன் எழுதினார். மலையுச்சிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் கிறிஸ்துவை அறியவே பவுல் விரும்பினார். கடினமான காலங்களிலும் நல்ல நேரங்களிலும் அவர் கிறிஸ்துவோடு நடக்க ஆசித்தார். ஏனெனில், கிறிஸ்துவோடுள்ள தன்னுடைய உறவு நீண்டகால நெருக்கமாகிய தோட்டத்தில்தான் வளருமென்று அவர் அறிந்திருந்தார்.

ஆனால், நடைமுறையில் நாம் தேவனை எவ்வாறு தெளிவாக அறிந்துகொள்ள முடியும்? அவருடைய அன்பையும் கரிசனையையும் நாம் எவ்வாறு அனுபவிக்க முடியும்? தேவன் ஆவியாயிருக்கிறார். எனவே, நம்மால் காணக்கூடாதவரும் தொடக்கூடாதவருமாகிய தேவனோடு எவ்வாறு நாம் ஆழமான உறவுகொள்ள முடியும்? அத்தகைய நெருக்கமான உறவைக் கிறிஸ்துவோடு ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு வழி ஜெபமே.

அநேக மக்களுடைய பார்வையில் ஜெபம் என்பது தேவனிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்ளுவதற்குரிய வழியே. நம்முடைய வேண்டுகோளின் விளைவாக தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு அளவில்லாமல் அருளிச் செய்கிறார் என்பது நிச்சயமாகவே உண்மைதான். நாம் கேட்கிறதையும் கேட்க நினைக்கிறதையும்விட மிகவும் கூடுதலாக அவர் தாராளமாய் நமக்குத் தர ஆற்றலுள்ளவர் என்பதும் சத்தியமே. ஆனால், ஜெபம் என்பது அவரிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ள விரும்புகிறதை அடைந்துகொள்ளுவதைவிட மேலானது. ஜெபமானது இரண்டு இருதயங்களுடைய ஐக்கியமாகும். நம்முடைய வாழ்க்கையின் உள்ளான காரியங்களை நாம் தேவனிடம் தெரிவிப்பதும், அவருடைய இருதயத்தின் ஆழமான காரியங்களை அவர் நமக்கு அறிவிப்பதுமே ஜெபமாகும்.

ஜெபம் என்றால் என்ன என்பதைக்குறித்தத் தவறான அறிவு நம்மில் பலருக்கு இருப்பதாலேயே, கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் தோல்வியடைகிறோம். ஆகாயத்திலுள்ள மகாப் பெரிய சாண்டாகிளாசிடம் நாம் சென்று நமக்குத் தேவையான எல்லாவற்றையும் அவரிடம் சொல்லும் நேரமாகவே நாம் ஜெபத்தைக் கருதுகிறோம். ஜெபத்தைக்குறித்த அத்தகைய ஆழமற்ற கண்ணோட்டம் நிச்சயமாகவே தோல்விக்கு வழிநடத்தும். வாங்கவேண்டிய பொருட்களின் பட்டியலோடு நாம் ஒரு கடைக்குள் பிரவேசிப்பதுபோல நாம் பரிசுத்தரும் மகாப்பெரியவருமாகிய தேவனுடைய சமுகத்திற்குச் செல்லக் கூடாது.

எந்த ஆரோக்கியமான உறவு ஏற்படுவதற்கும் அதிகக் காலமெடுக்கலாம். நானும் என்னுடைய மனைவியும் எங்களுடைய இருதயங்களில் இருக்கிறவைகளை ஒருவரோடொருவர் பகிர்ந்துகொள்ள நேரம் எடுத்தபடியால் பல ஆண்டுகளில் நாங்கள் ஆழமான உறவை ஏற்படுத்தியிருக்கிறோம். ஒவ்வொரு வாரமும் தொலைபேசி, காரியாலயம் மற்றும் இது போன்ற மற்ற எந்த தொந்தரவுமில்லாதபடி தனித்திருக்கக்கூடிய இடத்தையும் காலத்தையும் தெரிந்துகொண்டு, ஒருவரோடொருவர் எங்கள் எண்ணங்களைப் பங்கிடுகிறோம். அந்த வாரத்தில் நாங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள், நோவுகள், பாடுகள் மற்றும் வெற்றிகள் எல்லாவற்றையும் நாங்கள் பகிர்ந்துகொள்ளுகிறோம். நாங்கள் இவ்வாறு நேரம் எடுக்காதபோதுதான் எங்கள் உறவில் மிகவும் கடினமான சந்தர்ப்பங்கள் வந்தன.

ஜெபத்தைப்பொறுத்தமட்டிலும் மேற்கூறியது உண்மையே. நாம் தேவனோடு உரையாடவும் அவர் தம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருப்பதை நமக்குக் கூறித்தரவும் அதிகக் காலமெடுக்கும். அக்காரணங்கொண்டுதான் இயேசு, நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அறை வீட்டிற்குள் பிரவேசித்து, கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உங்கள் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணுங்கள்; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உங்கள் பிதா வெளியரங்கமாய் உங்களுக்குப் பலனளிப்பார் (மத்.6:6) என்று தம்முடைய சீஷர்களுக்குக் கற்பித்தார். நாம் ஆவிக்குரியவர்கள் என்பதை பிறருக்குக் காண்பிக்க நாம் முயற்சிக்கும் ஒரு மார்க்க சம்பந்தமான காட்சியல்ல ஜெபம். அது மார்க்கத்துக்கடுத்த கடமையோ சடங்கோ அல்ல. வாழ்க்கையின் பரபரப்புகளிலிருந்து விடுதலையாகி, நம்முடைய இருதயத்தின் உள்ளான காரியங்களைத் தேவனோடு பகிர்ந்துகொள்ளும் மிகவும் முக்கியமான வேளையே ஜெபமாகும். அவருடைய சத்தத்துக்குச் செவிகொடுக்க எடுக்கும் நேரமே அது. அகிலாண்டத்தைப் படைத்தவரோடுள்ள ஐக்கியமே அது.

இந்தக் கோட்பாட்டைக்குறித்து பலரும் கேள்விகள் எழுப்பியிருக்கிறார்கள். நாம் எப்போதும் ஜெப ஆவியிலிருக்கவேண்டும்; எனவே, தேவனோடு தனித்திருக்க ஒரு நேரத்தைப் பிரித்துவைக்கத் தேவையில்லையென்று சிலர் சொல்லுவதுண்டு. இடைவிடாமல் நாம் ஜெபம்பண்ணவேண்டியது உண்மைதான். நம்முடைய அனுதின வாழ்க்கை முழுவதும் நம்மில் ஜெபஆவியைக்கொண்டிருக்க நாம் முயற்சிக்கவேண்டும். ஆயினும், தேவனோடு தனிமையில் தனித்திருக்கவும், அவரோடு நெருக்கமான உறவை வளர்க்கவும் ஒரு வழக்கமானதும் சீரானதுமான நேரம் நமக்குத் தேவையில்லை என்று அது பொருளாகாது. அவ்வாறு செய்ய இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கற்பித்தார். இந்த உலகத்தின் சிந்தனையைச் சிதறடிக்கிற காரியங்களிலிருந்து தேவனோடு உறவாட ஒரு நேரத்தையும் இடத்தையும் ஒதுக்கிவைப்பது அந்த சீஷர்களுக்குத் தேவையாயிருந்ததானால் நமக்கு அது எவ்வளவு அதிகமாய் முக்கியம்.

உங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் நீங்கள் உண்மையாகவே வெற்றியை விரும்புவீர்களேயானால் உங்களுக்கான ஆரம்ப இடம் இதுவாகயிருக்கலாம். வெற்றிக்குரிய எல்லாக் காரியங்களும் இங்கில்லை என்றாலும் இது மிகப்பெரிய ஆரம்ப இடமாகும். தேவனைச் சந்திக்கத்தக்கதாக நீங்கள் ஏன் ஒரு இடத்தையும் நேரத்தையும் ஒதுக்கி வைக்கக்கூடாது? அவருடைய வசனத்தை வாசியுங்கள்; அவருடைய சத்தத்துக்குச் செவிகொடுங்கள். அவர் உங்களுக்குச் சொல்லுகிற எல்லாவற்றுக்கும் கீழ்ப்படியத் தீர்மானியுங்கள்; அங்கே வெற்றியைக் காண்பீர்கள்.