Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
சந்தேகங்களைச் சமாளித்தல்

தேவனைக்குறித்த சந்தேகம் உங்களுக்கு எப்போதாவது வருவதுண்டா? என்று என்னிடம் அடிக்கடி கேட்கப்படுவதுண்டு. ஒரு கிறிஸ்தவ எழுத்தாளன், சர்வலோக சுவிசேஷகன் மற்றும் முப்பத்துமூன்று ஆண்டுகளுக்குமேலாக கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவனாகிய நான் சந்தேகத்தோடு இன்னும் போராடுகிறேன் என்பதைக் கேட்கும்போது அநேக மக்களும் ஆச்சரியப்படுவதுண்டு. ஆனால் எனக்கும் ஐயப்பாடுகளுண்டு. உங்கள் விசுவாசத்தில் ஐயப்படுவது பாவமல்லவென்று அநேக ஆண்டுகளுக்குமுன் நான் கற்றுக்கொண்டேன். ஆனால், உங்கள் சந்தேகங்களை விசுவாசிப்பதுதான் பாவமாகிறது.

என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆரம்பத்தில் நான் அடிக்கடி சந்தேகப்பட்டேன். தேவனுக்குப் பிரியமில்லை என்று நான் அறிந்திருக்கிற காரியங்களைச் செய்யும்போது, உடனே இருதயப் பரிசோதனை செய்யும் கேள்விகள் என்னில் எழும்பும். அக்காரியத்தைச் செய்துவிட்டு, நீ எவ்வாறு கிறிஸ்தவனாய் வாழ முடியும்? தேவன் ஒருவர் உண்டானால் இவைகள் ஏன் தொடர்ந்து சம்பவித்துக்கொண்டேயிருக்கின்றன? என்பது போன்ற கேள்விகளே அவைகள்.

நான் இரட்சிக்கப்பட்டு சில நாட்களுக்குப்பின் ஒருநாள் என் அறையில் தேவனை நோக்கிக் கதறினேன். என் ஆத்துமா சந்தேகங்களால் நிறைந்திருந்தன. தேவன் ஒருவர் உண்டா? அல்லது நீ மூளைச்சலவைச் செய்யப்பட்டிருக்கிறாயா? உனக்கு உணர்ச்சிகரமான ஒரு அனுபவம் மாத்திரந்தான் ஏற்பட்டதா? என்பன போன்ற கேள்விகள் என்னைக் குழப்பின. நான் தேவனை நோக்கிக் கூப்பிட்டேன். இயேசுவே, எனக்கு உதவி செய்யும் என்கிற வார்த்தைகளை மாத்திரமே அந்த நேரத்தில் எனக்குச் சொல்லக்கூடியதாயிருந்தது. சிறிது நேரம் நான் அவ்வாறு தேவனை நோக்கி அழுதபின், சமாதானம் ஒரு ஆறுபோல என் ஆத்துமாவுக்குள் புரண்டோடியது. நான் தேவனுடைய பிள்ளையென்று பரிசுத்த ஆவியானவர் என்னுடைய ஆவியுடனேகூட சாட்சி கொடுத்தார். கிறிஸ்துவை யதார்த்தமானவராக நான் அறிந்திருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். அது உணர்ச்சிகளைவிட ஆழமானது, மனித அறிவைவிட அகலமானது, அது ஒரு ஆவிக்குரிய அறிவு.

கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு பயணத்தைப் போன்றது. பாதை முழுவதும் புதிய காரியங்களைக் கண்டுகொள்ளுகிறீர்கள். நீங்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டே வளருகிறீர்கள். வளராத ஒரு நபர் எப்போதும் தோல்வியில் முடிவடைகிறார். நான் சந்தேகங்களைச் சந்தித்தபோதுதான் கிறிஸ்தவ வாழ்க்கையைக்குறித்த அநேக மகத்துவமான காரியங்களைக் கண்டுபிடித்தேன். சந்தேகம் என்னை விசுவாசத்தின் புதிய உச்சிக்குக் கொண்டுபோகிறதேதவிர நம்பிக்கையிழவின் ஆழத்திற்குள் என்னைத் தள்ளவில்லை என்று நான் கற்றுக்கொண்டேன். மேலும், என்னுடைய சந்தேகங்களின் ஆதாரத்தைப் பிரித்தறியவும் நான் அறிந்துகொண்டேன்.

நான் கிறிஸ்துவிடம் வருமுன் என்னுடைய சந்தேகத்தின் மூலகாரணம் ஆழமானது. அவைகள் முழுவதும் ஆவிக்குரிய தன்மைகொண்டவை. அவை என்னுடைய ஆளத்துவத்தின் மையத்தைத் தாக்கின. எனக்கு தேவனோடு இன்றியமையாத உறவு இல்லாததால்தான் நான் சந்தேகித்தேன். தேவனைக்குறித்தத் தெளிவான அறிவு எனக்கு இல்லாததால்தான் தேவனைப்பற்றிய நிச்சயம் எனக்கில்லாதிருந்தது. தேவன் ஆவியாயிருக்கிறார்; அவருடைய ஆவி எனக்குள் வசிக்கவில்லை.

ஆனால், நான் விசுவாசியானபின் அனுபவித்த சந்தேகங்கள் மேலாம்பரமானவையே. மனிதனிலுள்ள மிகவும் ஆழமான பகுதி அவனுடைய ஆவியே. நான் அத்தகைய ஆழத்தில் சந்தேகிக்கவில்லை. ஏனெனில், நான் தேவனுடைய பிள்ளையாயிருக்கிறேனென்று ஆவியானவர்தாமே என்னுடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார் (ரோம.8:16). வேறு வார்த்தைகளில் சொன்னால், என்னுடைய இருதயத்தின் அடித்தளத்தில் பரிசுத்த ஆவியானவர் வசிக்கிறபடியால் என்னுடைய ஆளத்துவத்தின் ஆழத்தில் நான் தேவனுடைய பிள்ளையென்று அறிந்திருக்கிறேன்.

நான் தேவனுடைய பிள்ளையென்றும், என்னுடைய எல்லாப் பாவங்களையும் கழுவி என்னைச் சுத்திகரிக்க கிறிஸ்துவின் இரத்தம் போதுமானதென்றும் பரிசுத்த ஆவியானவர் எப்போதும் என்னை அறிவுறுத்துகிறார். இது வெறும் அறிவுக்கேற்ற இறையியலல்ல, நடைமுறை இறையியலே. அல்லேலூயா! தேவனுடைய ஆவி எனக்குள் வசித்து, நான் இயேசுவுக்குரியவனென்றும் அவர் எனக்குரியவரென்றும் எப்போதும் அறிவிக்கிறார். அது என் இருதயத்தின் ஆழத்திற்குள்ளிருக்கிறது, அதை நான் அறிந்திருக்கிறேன். அது புத்திபூர்வமான அறிவோ உணர்ச்சிகரமான எண்ணமோ அல்ல, அது ஆவிக்குரியது. அவர் என் வாழ்க்கையில் பிரசன்னராயிருக்கிறார்.

அப்படியானால் சந்தேகங்கள் வருகின்றனவே, அவைகள் எங்கிருந்து வருகின்றன? இயேசு என்னுடையவர் என்கிற ஆழமான நிச்சயம் எனக்கிருக்கிறபோதிலும், நான் மேலாம்பரமான சந்தேகங்களைச் சமாளிக்கவேண்டியதிருக்கிறது. அறிவுக்குரியதும் உணர்ச்சிகளுக்குரியதுமான என்னுடைய வாழ்க்கைப் பகுதிகளிலிருந்தே அவைகள் வருகின்றன. எடுத்துக்காட்டாக, நான் தேவனுக்குக் கீழ்ப்படியாமை காண்பிக்கும்போது என்னுடைய உள்ளான ஆளத்துவத்தில் அறிவுக்குரிய அல்லது உள்ளுணர்ச்சிக்குரிய ஒரு தழும்பு விழுகிறது. நான் உண்மையாகவே தேவனுடைய பிள்ளைதானா என்று கேள்வி கேட்க ஆரம்பிக்கிறேன். கிறிஸ்துவின் சிலுவை மரணம் என்னுடைய பாவ மன்னிப்புக்குப் போதுமானது என்பதை என்னுடைய இருதயத்தின் ஆழத்தில் நான் அறிந்திருந்தாலும், என்னுடைய விவாதத்தில் தவறு உண்டாகிறது. நான் தேவனுடைய பிள்ளைதானா என்று மனதளவில் சந்தேகிக்க ஆரம்பிக்கிறேன். அல்லது நான் என்னுடைய உள்ளுணர்வுகளில் தோல்வி காணும்போது, எனக்கு நிச்சயமாகவே நித்தியஜீவனுண்டா? என்று சந்தேகிக்கிறேன். ஆனால், நான் உண்மையாக மனந்திரும்பி என் பாவங்களை அறிக்கையிடும்போது, கிறிஸ்துவினுடைய இரட்சிப்பின் நிச்சயத்தில் நான் மறுபடியும் இளைப்பாறுகிறேன். இத்தகைய சந்தேகங்கள் மேலாம்பரமானவையே, எனவே அவை தற்காலிகமானவை.

தேவனைக்குறித்தத் தெளிவான அறிவு இல்லாததினாலே பொதுவாக ஆவிக்குரிய சந்தேகங்கள் எழும்புகின்றன. அதேவேளையில், உணர்ச்சிகளுக்குரிய சந்தேகங்கள் தவறான செயல்களிலிருந்தும் மனநிலைகளிலிருந்தும் வருகின்றன. வேதபுத்தகம் தேவனைக்குறித்தும் நம்மைப்பற்றியும் சொல்லுகிறதை நாம் விசுவாசிப்பதற்குப்பதிலாக ஆண்டவரைக்குறித்து நம்முடைய கலாச்சாரம் எதைக் கற்பிக்கிறதோ அதையே நாம் அடிக்கடி நம்புகிறோம். அதன்விளைவாக நாம் தோல்வியடைகிறோம். நாம் கிறிஸ்துவுக்குள் அனுபவிக்கிற எல்லா வெற்றிகளும் நம்முடைய விசுவாசத்திலிருந்தே தோன்றுகின்றன. கிறிஸ்தவ வாழ்க்கையில் விசுவாசமென்னும் அஸ்திவாரத்திலேயே வெற்றி கட்டியெழுப்பப்படுகிறது. ஆனால், விசுவாசமாகிய அந்த அடித்தளம் தேவனுடைய வசனத்தின் சத்தியத்தின்மீதேயல்லாமல் வேறொன்றின்மீதும் போடமுடியாது. சந்தேகங்களின்மீது வெற்றி நடைமுறையில் அனுபவிக்க வேண்டுமானால் வேதத்திலுள்ள வாக்குத்தத்தங்களில் நாம் நிலைநிற்கவேண்டும்.

தேவனுடைய வசனத்தைச் சரிவர அறியாததினாலேயே அறிவுக்குரிய சந்தேகங்கள் எழும்புகின்றன. ஆனால், தேவனுடைய வசனத்துக்குக் கீழ்ப்படியாமைக் காண்பிப்பது உணர்ச்சிக்குரிய சந்தேகங்களை உண்டாக்குகிறது. கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தால் நாம் தேவனோடுள்ள உறவுக்குள் பிரவேசிக்கிறோம், நாம் அவருடைய பிள்ளைகளாகிறோம். ஆயினும், நம்முடைய வாழ்க்கையில் நாம் பாவத்தை அனுமதிக்கும்போது அவரோடுள்ள நெருங்கிய தொடர்பு முறிந்துவிடுகிறது. அப்போது அவருடைய அன்பின் ஆழத்தையும் அகலத்தையும் உயரத்தையும் நம்முடைய வாழ்க்கையில் ஒருபோதும் அனுபவிப்பதில்லை. நம்மீது அவருக்குள்ள அன்பு மாற்றமடைவதில்லை. நாம் எப்போதும் அவருடைய பிள்ளைகளாகவே இருக்கிறோம்; ஆயினும் அவரோடுள்ள நம்முடைய ஐக்கியம் சிதைந்துபோகிறது. நம்முடைய பாவங்களுக்காக மனம் வருந்தி, அவைகளை நாம் அறிக்கையிடும்போது அந்த ஐக்கியம் மறுபடியும் சீராகிறது. பரிசுத்தமாகிய நெடுஞ்சாலையில் நாம் பயணிக்கும்போது மாத்திரமே பூரண பரிசுத்தராயிருக்கிற தேவனோடு நெருக்கங்கொள்ள முடியும்.

நம்மைக்குறித்து தேவன் சொல்லுகிறவைகளை நம்பி, அந்தச் சிறந்த உண்மைகளின் அடிப்படையில் செயல்படும்போது, நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அனுபவபூர்வமாக அறிகிறோம். அப்போது சந்தேகங்கள் ஒழிந்துபோகும், விசுவாசம் வளரும், வெற்றி என்பது நமது போர்முழக்கமாகும். வெற்றியென்றால் என்ன என்பதை அதன்பின் புரிந்துகொள்ளுவோம்.