Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
இரட்சிப்பின் நிச்சயம்

வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ஒரு மிகப்பெரிய தடை இரட்சிப்பின் நிச்சயம் இல்லாதிருப்பதே. தேவன் நம்முடைய பாவங்களை மன்னித்திருக்கிறார் என்பதை நாம் எப்போதும் சந்தேகிப்போமேயானால், சாத்தான் நம்மைப் பயனற்றவர்களாக்கிவிடுகிறான். வெற்றிக்காக வாஞ்சித்தும், போராட்டத்திலும் தோல்வியிலும் வாழுகிற அநேகக் கிறிஸ்தவர்களை நான் சந்தித்திருக்கிறேன். தேவனோடுள்ள நம்முடைய உறவில் பொறுப்புறுதி இல்லையென்றால் தோல்வி நிச்சயம், வெற்றி வெறும் கனவே.

அநேக ஆண்டுகளுக்குமுன் என்னுடைய நண்பர் ஒருவர் கிறிஸ்துவை அறிந்திருந்தபொழுதிலும், தேவன் தன்னை ஏற்றுக்கொண்டிருக்கிறாரா என்பதைக் குறித்துத் தொடர்பாக சந்தேகப்பட்டுக்கொண்டிருந்தார். அவர் அன்பற்ற ஒரு குடும்பத்தில் வளர்ந்துவந்தவர். தந்தை ஒரு மதுபானப் பிரியர். அவர் குடிவெறியில் பிள்ளைகளை அதிகம் அடிப்பார். அதின்பலனாக என் நண்பர் விசுவாசியானபோது, தேவன் தன்னுடைய தந்தை என்பதை ஒப்புக்கொள்ளுவது அவருக்குக் குழப்பமாகவேயிருந்தது. அவர் தவறுசெய்தபோதெல்லாம், தேவன் தன்னைத் தள்ளிவிடுவாரோவென்றும், அதனால் என்ன நேரிடுமோவென்றும் அவர் அஞ்சினார். ஒருநாள் ஒரு கிறிஸ்தவத் தலைவர் என்னுடைய நண்பருக்கு ஆவிக்குரிய ஆலோசனை கூற ஆரம்பித்தார். அவர் தேவனுடைய வார்த்தைகளின் உண்மைகளை அவருக்குக் கற்றுக்கொடுத்ததோடு, அவரே அந்த உண்மைகளில் ஜீவிக்கிற சாட்சியாயிருந்தார்.

என்னுடைய நண்பர் தோல்வியுற்றபோதெல்லாம் இந்தத் தலைவர் அவருக்கு இரக்கம் காண்பித்தார். அவரைக் கடுமையாய்த் தாக்கிப் பேசாதபடி ஊக்குவித்தார். அவர் ஆவிக்குரிய வாழ்க்கையில் விழுந்தபோது அவரைத் தூக்கிவிட்டார். எனவே, என்னுடைய நண்பர் தன்னுடைய வாழ்க்கையில் அனுதினமும் அதிகமதிகமாக வெற்றி காண ஆரம்பித்தார். அதன்பிறகு என் நண்பரை நான் அநேக ஆண்டுகள் சந்திக்கவில்லை. அதிக காலத்துக்குப்பின் நான் வசிக்கிற பட்டணத்துக்கு அவர் வந்தார். என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஒரு உணவு விடுதிக்கு வரும்படி அவர் அழைத்தார். அவருடைய வாழ்க்கையில் நம்பமுடியாத மாற்றம் ஏற்பட்டிருந்தது. அவர் திடநம்பிக்கை கொண்டிருந்தார். எல்லாரும் தன்னை ஒப்புக்கொள்ளவேண்டுமென்று அவர் இப்போது முயற்சிப்பதில்லை. ஏனெனில், தேவன் தன்னை அங்கீகரித்திருக்கிறார் என்பதை அவர் அறிந்திருந்தார்; கிறிஸ்துவுக்குள் வளர்ந்து முதிர்ச்சியடைய அது ஏதுவாயிற்று.

சகோதரர்களைக் குற்றஞ்சாட்டுகிறவனென்று சாத்தானை வேதம் அழைக்கிறது. அவன் நம்மைத் தேவனிடத்தில் குற்றஞ்சாட்டுகிறான். நம்முடைய சகவிசுவாசிகளிடமும் குற்றஞ்சாட்டுகிறான். ஆனால், அவன் நம்மைக்குறித்துக் கூறுகிற குற்றச்சாட்டுகளை நாம் நம்பும்போதுதான் நமக்குப் பெரிய இழப்புண்டாகிறது. நாம் விசுவாசிக்கிறதுபோலவே நாமும் ஆகிறோம். தேவன் சொல்லுகிறதை நாம் விசுவாசித்தால் கிறிஸ்துவின் கிருபையிலும் அவரைக்குறித்த அறிவிலும் நாம் வளருகிறதைக் கண்டுகொள்ளலாம். ஆனால், பிசாசின் குற்றச்சாட்டுகளை நம்பினால் நாம் தோல்வியடைகிறோம்.

விரும்புகிறதையெல்லாம் பெற்றுக்கொள்ளலாம் என்கிற புதிய இறையியல் கொள்கையைக்குறித்து நான் பேசவில்லை. தேவனுடைய வாக்குத்தத்தத்தில் நிலைநிற்கவேண்டுமென்கிற பழமையான இறையியலையே நான் பேசுகிறேன். உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், .... தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன் (1 யோவா.5:13) என்று தேவனுடைய வசனத்தில் வாசிக்கிறோம். நமக்கு நித்தியஜீவன் உண்டென்று நம்புகிறோமென்றல்ல, விரும்புகிறோமென்றல்ல, எண்ணுகிறோமென்றல்ல, அறிந்திருக்கிறோம் என்று வேதம் சொல்லுகிறது. நாம் தேவனுடைய பிள்ளைகளென்கிற பூரண நிச்சயத்தில் நாம் இளைப்பாறலாம். அது நாம் செய்த எக்காரியத்தினாலுமல்ல, அவருடைய சுத்த கிருபையினாலேயே.

நமக்கு நித்தியஜீவன் உண்டென்று நாம் எவ்வாறு நிச்சயமாக அறியமுடியுமென்று இதற்கு நேர் முந்தைய வசனம் கூறுகிறது. குமாரனை உடையவன் ஜீவனை உடையவன் (1 யோவா.5:12) என்று நாம் அங்கு வாசிக்கிறோம். நமக்கு நித்தியஜீவன் உண்டென்று நாம் அறிவது எவ்வாறு? நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய குமாரன் உண்டென்றால் நமக்கு நித்தியஜீவன் உண்டென்கிற திட்டமான நிச்சயத்தில் நாம் இளைப்பாறலாம். ஏனெனில், நமக்கு அவ்வாறு உண்டென்று தேவனுடைய வசனம் சொல்லுகிறது. அதன்பின், தேவனுடைய வாக்குத்தத்தங்களில் நிலைத்துநிற்க நாம் கற்றுக் கொள்ளவேண்டும்.

தேவனோடுள்ள உறுதியான உறவிலிருந்து வெற்றி ஒழுகுகிறது. தேவனுடைய வசனத்திலுள்ள நித்திய வாக்குத்தத்தங்களில் நிலைநிற்பதாலேயே அது வருகிறது. பிதாவுக்குத் தன்னுடைய பிள்ளைகள்பேரிலுள்ள அற்புதமான அன்பைக்குறித்த நடைமுறை அறிவே இது. ஆகையால்தான் நம்மில் அன்புகூர்ந்த கிறிஸ்துவினாலே நாம் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாகிறோம் என்று வேதம் சொல்லுகிறது. நாம் சாதாரண வெற்றியாளர்களல்ல, முற்றிலும் வெற்றி பெறுகிறவர்களாகிறோம்.

இந்த மகாப் பெரிய உண்மையைப் புரிந்துகொள்ளும்போது, நாம் கழுகுகளைப்போல உயரப் பறக்க ஆரம்பிக்கிறோம். நம்முடைய இயல்புக்குள் பரந்துசெல்லுகிற ஒரு நம்பிக்கையுண்டு. வெற்றியாளர்கள் எப்போதும் நம்பிக்கையோடிருப்பார்கள்; ஆனால், சுயநம்பிக்கை கொள்ளமாட்டார்கள். வெற்றியாளர்களுக்குத் தங்களுடைய சாத்தியக்கூறுகள் தெரியும்; அது அவர்களுடைய இருதயத்திலும் மனதிலும் பதிந்துகிடக்கின்றன. ஆனால், இயேசுகிறிஸ்துவில் விசுவாசிக்கிற நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் வெற்றிக்குரிய சாத்தியக்கூறு அளவில்லாதது. ஏனெனில், இயேசுவே நமக்குரிய வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறார். நம்முடைய வெற்றியிலல்ல, அவருடைய வெற்றியில் நாம் நடக்கிறோம். பரலோகத்தில் நமக்கு ஒரு திட்டமான வருங்காலம் உண்டு, இந்த உலகில் இரட்சகரோடு நமக்கு ஒரு பத்திரமான உறவு உண்டு, மற்றும் கிறிஸ்துவுக்குள்ளான நமது நிலையில் நம்பிக்கையுண்டு என்பனபோன்றவைகளிலிருந்து வெற்றி வருகிறது. கிறிஸ்துவுக்குள் வாழ்வதே உலகத்திலுள்ள எல்லா இடங்களிலும் மிகவும் பாதுகாவலானதாகும். கிறிஸ்து நமக்குள் வாழுகிறாரென்பதே நமக்கிருக்கிற மிகவும் ஆசீர்வாதமான நிச்சயமாகும்.