Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
வெற்றி - முயற்சியா, நம்பிக்கையா?

முப்பது ஆண்டுகளுக்குமுன்னே நான் கிறிஸ்துவை அறிய நேர்ந்தபோது, என்னுடைய வாழ்க்கை தீவிரமான மாற்றமடைந்தது. அநேக ஆண்டுகளாக என்னை அடிமைப்படுத்தியிருந்த துன்மார்க்கம் மற்றும் சுயநலம் என்பவற்றிலிருந்து தேவன் என்னை விடுவித்தார். தேவன் என்னுடைய வாழ்க்கையில் செய்தவை என்னை மயிர்சிலிர்க்கச் செய்தன. நான் வெற்றிகொள்ள விரும்பிய அநேக பழக்கங்கள் இருந்தன; ஆனால், அவைகளின்மீது எனக்கு வெற்றியில்லாதிருந்தது. எனினும், இயேசு என் இருதயத்திற்குள் வந்தவுடன் நான் மெய்யாகவே விடுதலையானேன்.

நான் கிறிஸ்துவைப் பின்பற்ற ஆரம்பித்து அநேக மாதங்களுக்குப்பின்னும் என்னைவிட்டு விலகாத ஒரு பழக்கத்தை நான் கவனித்தேன்; நான் அதிகப் பொறாமைகொண்டவனாயிருந்தேன். எனக்கு மிகவும் அன்பானவர்களிடம் வேறு யாராவது பேசினால் எனக்குள் கோபம் பொங்கி எழுந்தது. என் குரோதத்தினால் அவர்களை அடிக்கவேண்டுமென்று எண்ணினேன். ஆனால் இது தவறென்றும், இத்தகைய உணர்வுகள் தேவனுக்குப் பிரியமானவையல்லவென்றும் எனக்குத் தெரியும். எனவே, நான் பொறாமைப்படாதிருக்க மிகவும் கடினமாக முயற்சிப்பது தேவை என்று நான் தீர்மானித்தேன். பொறாமைப்படாதிருக்க நீங்கள் எப்போதாவது முயற்சித்தீர்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஒரு நண்பனாக நான் அறிவுரை கூறட்டும்; அவ்வாறு முயற்சியாதீர்கள், அது முற்றிலும் கூடாத காரியம்!

பொறாமைப்படக்கூடாதென்று எவ்வளவு கடினமாக நான் முயற்சித்தேனோ அவ்வளவுக்கதிகமாக நான் பொறாமைப்பட்டேன். நான் பல்லைக்கடித்துக்கொண்டு எனக்கிருக்கிற எல்லாச் சக்தியையும் ஒருங்கிணைத்தாலும் மீண்டும் நான் கூடுதல் பொறாமைப்பட்டேன். என்னசெய்வதென்று எனக்குத் தெரியவில்லை. நான் கூடுதல் கடினமாய் முயற்சித்தேன், அதைவிடக் கூடுதல் நிர்ப்பந்தமாய்த் தோல்வியுற்றேன். என்னை மேற்கொண்ட இந்தப் பாவத்தின்மீது வெற்றிகொள்ள எவ்வளவு கடினமாய் முயற்சித்தேனோ அவ்வளவுக்கதிகமாய் நான் அதால் அடிமைப்படுத்தப்பட்டேன் என்று எனக்குத் தோன்றிற்று.

ஒரு நாள் வெற்றியான கிறிஸ்தவ வாழ்க்கையின் இரகசியத்தை நான் கற்றுக்கொண்டேன். அது, வெற்றி முயற்சியிலல்ல நம்பிக்கையிலேயே இருக்கிறது என்றும், நான் வெற்றியைப் பெற்றுக்கொள்ள என்னச் செய்யக்கூடுமென்பதிலல்ல, கிறிஸ்து ஏற்கனவே என்ன செய்திருக்கிறாரென்பதையே சார்ந்திருக்கிறது என்பதுமே. நான் செய்யவேண்டியதெல்லாம் அவரில் நம்பிக்கை வைப்பதே. நானோ வேறு யாருமோ சோதிக்கப்படுகிற எல்லாவிதத்திலும் அவர் சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராயிருந்தார். இன்னொருவிதத்தில் சொன்னால், அவர் பொறாமையை மேற்கொண்டாயிற்று; என்னுடைய தேவை அவரை நம்புவதே. அவர் என்னில் வாழுகிறபடியால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் அவர் செய்த காரியங்களை இன்றும் அவர் செய்வார். நான் முயற்சிப்பதை நிறுத்திவிட்டு நம்ப ஆரம்பிக்கவேண்டும்; அதாவது, இயேசுவே பொறாமையின்மீதுள்ள என்னுடைய வெற்றி என்று நான் விசுவாசிக்கவேண்டும். என்னை இரட்சித்து, என் பாவங்களை மன்னித்த அதே இயேசு என்னை வாதிக்கிற பாவத்தின்மீது வெற்றிபெற்றுத்தரவும் ஆற்றலுள்ளவராயிருக்கிறார்.

அடுத்தமுறை என் இருதயத்தில் பொறாமையும் கோபமும் எழும்பியபோது, தேவனே, என்னுடைய இரட்சிப்புக்காக நான் உம்மை நம்பினதுபொல என்னுடைய பொறாமையின்மீதும் கோபத்தின்மீதும் இன்று நீரே என்னுடைய வெற்றியாயிருக்கும்படி நான் உம்மை நம்புகிறேன் என்று எனக்குள் ஜெபித்தேன். மிகவும் அற்புதமான ஒரு காரியம் நடந்தது. அத்தகைய உணர்ச்சிகள் என்னைவிட்டு நீங்கிப்போயின. ஆனால், சிறிது காலத்துக்குள் மறுபடியும் பொறாமைகொள்ளும்படி சோதிக்கப்பட்டேன். அப்போதும் நான் இயேசுவிடம் திரும்பி, ஆண்டவரே, நீரே என் வெற்றியாயிருக்கும்படி நான் மறுபடியும் உம்மை நம்புகிறேன் என்று சொன்னேன். நான் வெற்றியும் பெற்றுக்கொண்டேன்.

சாத்தான் மறுபடியும் மறுபடியும் என்னிடம் திரும்பி வந்து என்னைச் சோதித்தான். ஆனால் நான் இயேசுவையே நம்பிக்கையோடு நோக்கிப் பார்த்தேன். அநேக மாதங்களுக்குப்பின் சாத்தான் முன்னைப்போல் என்னை அடிக்கடி சோதிக்கவில்லையென்பதை நான் கவனிக்க ஆரம்பித்தேன். என்னிடமல்ல, இயேசுவிடமே இடைபடுவதால் அவன் சோர்ந்துபோயிருக்கக்கூடும். நம்முடைய வாழ்க்கைகளில் பிசாசை இயேசு வென்றிருக்கிறார். சோதனை, பாவம் மற்றும் பிசாசின்மீது நாம் அனுபவிக்கிற வெற்றி நம்முடைய சொந்த ஆற்றலின் முயற்சியாலல்ல. நம்முடைய சுயம் வீணென்பது சாத்தானுக்குத் தெரியும். நம்முடைய பலவீனங்களையெல்லாம் அவன் அறிந்திருக்கிறான். நம்மை எங்கே தாக்கமுடியுமென்பது அவனுக்குத் தெரியும். எனவேதான் நம்மீதல்ல, கிறிஸ்துமீது முற்றிலும் நம்பிக்கை வைக்கவேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் இயேசு பாவமற்றதும் முற்றிலும் பூரணமுமான வாழ்க்கை நடத்தியபோது, வெற்றி அவரால் பெறப்பட்டாயிற்று. அவர் சிலுவையில் மரித்தபோது முடிந்தது என்று அறிவித்தார்; அதாவது அவர் பணியைச் செய்து முடித்தார். அவர் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தார். எல்லாத் தீய சத்துவங்களின் தோல்வியையும் அவர் வெளியரங்கமான கோலமாக்கினார். மூன்று நாட்களுக்குப்பின் அவர் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார். மனிதன் சந்திக்கக்கூடிய எல்லாப் பகைவர்களையும் அவர் மேற்கொண்டார். பாவம், மரணம், நரகம் மற்றும் சாத்தானையும் அவனுடைய அசுத்த ஆவிகளையும் அவர் வெற்றிகொண்டார். இந்த வெற்றிதான் அவருடைய சாதனை. அவரை நாம் நம்பும்போது அவருடைய வெற்றிக்குள் நாம் பிரவேசிக்கிறோம்.

வெற்றியான கிறிஸ்தவ வாழ்க்கையைக்குறித்து ஒரு விசுவாசி கற்றுக்கொள்ளக்கூடிய மிகச் சிறந்த பாடம், நம்முடைய முயற்சியிலல்ல நம்முடைய நம்பிக்கையிலேயே நாம் வெற்றி அனுபவிக்கிறோமென்பதுவே. நம்முடைய ஆற்றலில் பாவத்தை மேற்கொள்ள முயற்சிப்பது பல தானியேல்கள் கிடக்கும் ஒரு குகையில் ஒரு சிங்கத்தைப் போடுவது போலவும், தாவீதைப்போல விசுவாசம் நிறைந்த நூறு இளைஞர்களை ஒரு கோலியாத் சந்திப்பதுபோலவுமே இருக்கும். அத்தகைய நிலை முற்றும் தோல்வியே. ஆனால், இளைஞனான தாவீதின் விசுவாசம் நம்முடைய வாழ்க்கையில் எல்லா அரக்கர்களையும் தோற்கடித்துவிடும். தானியேல் தேவனை நம்பினார், சிங்கங்கள் சக்தியற்றுப்போயின. தாவீது தன்னுடைய மாம்சத்தில் செயல்பட்டபோதுதான் தோல்வியைத் தழுவினார். சிம்சோன் சோதனையோடு விளையாடியபோது தன்னுடைய பெலனை இழந்தார். அவர்களுடைய வெற்றியும் ஆற்றலும் இருந்த ஒரே இடத்தில்தான் நம்முடைய வெற்றியுமிருக்கிறது. அவர்கள் தேவனை நம்பியபோது அவர்களில் அன்புகூர்ந்த கிறிஸ்துவினாலே அவர்கள் முற்றும் ஜெயங்கொண்டார்கள். முயற்சியை நிறுத்து, நம்பிக்கையை ஆரம்பி!