Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
விசுவாசமும் வெற்றியும்

கிறிஸ்துவின் பக்கத்திலுள்ள யாரும் தோல்வியுறத் தேவையில்லை. தனவந்தனோ தரித்திரனோ, வயது முதிர்ந்தவரோ இளைஞனோ, கற்றவரோ கல்லாதவரோ யாராயிருந்தாலும் நாமனைவருக்கும் வெற்றியின் ஆதாரம் ஒன்றே. அது நம்முடைய லௌகீக சம்பத்தோ, இயற்கையான அறிவுத்திறனோ அல்லது நம்முடைய கல்விச் சான்றுகளோ அல்ல. கிறிஸ்து நமக்காக ஏற்கெனவே செய்துள்ள காரியத்தால் நம் ஒவ்வொருவருக்கும் வெற்றி சாத்தியமானதே. அவர் போரில் வெற்றி பெற்றதால் இது அவருடைய வெற்றி. அவருடைய வெற்றிக்குள் பிரவேசிக்கும்போது நாம் வெற்றியடைகிறோம்; அந்த வெற்றியை நாம் விசுவாசத்தால் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும்.

வேதபுத்தகக் காலத்திலும் தற்காலச் சரித்திரத்திலுமுள்ள சிறந்த விசுவாச வீரர்களைக்குறித்து நாம் வாசிக்கும்போது, அவர்கள் ஒவ்வொருவருடைய வெற்றியும் விசுவாசத்தினால் வந்தது என்பதைக் கண்டுகொள்ளுகிறோம். ஆபேல் விசுவாசத்தினால் ஆராதித்தான். நோவா விசுவாசத்தினால் கிரியைச் செய்தார். ஏனோக்கு விசுவாசத்தினால் சஞ்சரித்தார். ஆபிரகாம் விசுவாசத்தினால் பயணித்தார். மோசே விசுவாசத்தினால் இஸ்ரவேல் மக்களை விடுதலையாக்கினார். தாவீது விசுவாசத்தினால் அரக்கனைக் கொன்றார். பவுல் விசுவாசத்தினால் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். லுத்தர் விசுவாசத்தினால் சீர்திருத்தத்தை ஏற்படுத்தினார். ஒயிட்ஃபீல்டு விசுவாசத்தினால் எழுப்புதலைக் கண்டார். மூடி விசுவாசத்தினால் கண்டங்களை அசைத்தார். வெற்றியடைவதற்குரிய ஒரே வழி விசுவாசமாகவே எப்போதும் இருந்தது, இன்னும் அப்படியேயிருக்கும். நம்முடைய சொந்த வெற்றியும் விசுவாசத்தையே சார்ந்திருக்கிறது.

எனவே, விசுவாசத்தின் தன்மையை நாம் புரிந்துகொள்ளுவது மிகவும் இன்றியமையாததாகும். பேச்சுத்திறமையுமுள்ள ஒரு பேச்சாளரைக் கேட்கும்போது நமக்கு உண்டாகிற ஒருவித உணர்ச்சியா விசுவாசம்? அல்லது எல்லாவற்றையும் நன்மையென சிந்திக்கிற ஆற்றலினால் நாம் பெற்றுக்கொள்ளுகிற உளரீதியான மனநிலையா அது? விசுவாசம் நம்முடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வுகொடுக்கும் மருந்தா? அதை நாம் பெயர் சொல்லி சுதந்தரிக்க முடியுமா? சிலர் சொல்லுவதுபோல் நாம் விசுவாசித்தபின் வியாதிப்படாமலிருக்க முடியுமா? விசுவாசம் என்றாலென்ன? அது எங்கிருந்து வருகிறது? இதற்குரிய பதில் வெற்றியான கிறிஸ்தவ வாழ்க்கைக்குள்ள இரகசியமாகும். ஆயினும், விசுவாசத்தைக்குறித்து வேதம் கற்பிப்பதை நாம் திரித்துக் கூறுவதால் நம்முடைய ஆத்துமாக்களை வெற்றிக்குத் தட்டியெழுப்பவும், திருச்சபையை உலகத்தின் ஒளியாக மறுபடியும் மாற்றவும் இன்னும் ஒரு சீர்திருத்தம் நமக்குத் தேவைப்படுமோ என நான் அஞ்சுகிறேன்.

விசுவாசம் நம்மிடமிருந்தல்ல, தேவனிடமிருந்தே ஆரம்பிக்கிறது. நம்புவதற்குரிய மனநிலைக்கு நம்மைக் கொண்டுவருவதல்ல விசுவாசம். அது ஒருவிதமான இனம்புரியாத உணர்ச்சியல்ல. விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும் என்று வேதம் சொல்லுகிறது. விசுவாசம் நமக்குள்ளிருந்து ஆரம்பிப்பதில்லை. விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம் என்பதுபோலவே, தேவனில்லாமல் விசுவாசங்கொள்ளுவதும் கூடாதகாரியம். விசுவாசம் நமக்கு வெளியேயுள்ள ஒரு ஆதாரத்திலிருந்து ஆரம்பிக்கிறது. அது தேவன் பேசுவதிலிருந்து ஆரம்பிக்கிறது. அது தேவனுடைய வார்த்தையிலிருந்து ஆரம்பிக்கிறது. தேவனுடைய வசனத்தை நாம் கேட்பதினால் நம்முடைய இருதயங்களில் உருவாக்கப்படுகிற நிச்சயமே அது.

தேவன் தம்முடைய வார்த்தைகளை நம்முடைய இருதயங்களோடு பேசும்போது விசுவாசம் ஆரம்பிக்கிறது; அதன்பின் அது இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனுக்கு நேராக திருப்பிவிடப்படுகிறது. வேதத்தில் கூறப்பட்டுள்ள கலப்பற்ற விசுவாசம் இயேசுவுக்கு நேராகவே காண்பிக்கப்படுகிறது. விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கக்கடவோம் என எபிரெயர் 12:1 கூறுகிறது. இயேசுவே நம்முடைய விசுவாசத்தை ஆரம்பித்துப் பாதுகாக்கிறார். அவரே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார். யோவான் சுவிசேஷத்தில் இயேசு தேவனுடைய வார்த்தை என்று குறிப்பிடப்படுகிறார். ஆகையால் அவரில் ஆரம்பித்து அவரில் தொடராத எந்த விசுவாசமும் உண்மையான விசுவாசமல்ல.

அநேகக் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவில் மாத்திரம் நம்பிக்கை வைக்காமல், தங்களிலும் தங்கள் ஆற்றல்களிலும் தங்கள் பணச் சேமிப்புகளிலும் தங்கள் அனுபவங்களிலுங்கூட நம்பிக்கை வைப்பதால் தோல்வி அனுபவிக்கிறார்கள். தேவன் பலவேளைகளில் தம்முடைய ஆற்றலை நமக்குக் காண்பிக்கத்தக்கதாக நம்மில் ஆற்றலற்ற நிலையை அனுமதிக்கிறார். தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி நம்முடைய குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவதற்காக (பிலி.4:19) நம்முடைய செல்வத்தை அவர் நம்மைவிட்டு எடுத்துப்போடலாம். நம்முடைய அனுபவங்கள் நம்மை வஞ்சிக்கலாம். ஆனால், இயேசுவோ நிகரற்ற சத்தியம். இயேசுவை மாத்திரமே நம்புவதினால் வெற்றி வருகிறது.

தேவன் தம்முடைய வார்த்தையின்மூலம் நம்முடைய இருதயங்களுக்குள் பேசும்போது விசுவாசம் ஆரம்பிக்கிறது. நம்முடைய எல்லாத் தேவைகளையும் சந்திக்கத்தக்கதாக இயேசுவை நோக்கும்போது விசுவாசம் தொடருகிறது. ஆனால், இறுதியில் விசுவாசம் செயல்பட்டேயாகும். நம்முடைய கிரியைகள் விசுவாசத்தை உருவாக்குவதில்லை, அதற்கு நேர்மாறாகவே நடக்கிறது. அதாவது, நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய கிரியையை விசுவாசம் உருவாக்குகிறது. எனவே, நம்முடைய எந்தவிதத் திறமைகளைக்குறித்தோ வாய்ப்புகளைக்குறித்தோ சாதனைகளைக்குறித்தோ நாம் பெருமைபாராட்ட முடியாது. நாம் கிறிஸ்துவுக்குள் மாத்திரமே மேன்மைபாராட்ட முடியும். நம்முடைய வெற்றிக்கும் சாதனைக்கும் ஒரே ஆதாரம் அவரே. நாம் கிறிஸ்துவில் உண்மையாய் நம்பிக்கை வைப்போமேயானால் அவருடைய வெற்றியை நாம் அறிந்துகொள்ளுவோம்.

சிலவேளை மக்களுடைய அறைகூவலை நான் சந்திப்பதுண்டு. மக்கள் என்னிடம் வந்து, சேமி, நான் கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன், ஆனால் அது எந்த விதத்திலும் எனக்கு உதவவில்லை என்று சொல்லுவதுண்டு. நான் அவர்களைத் துருவிக் கேட்கும்போது, அவர்கள் கிறிஸ்துவின் பரிபூரணத்திலும் வல்லமையிலும் நம்பிக்கை வைக்காதபடி, தங்களது முயற்சிகளிலும் அறிவாற்றலிலும் கூடுதல் நம்பிக்கை வைக்கிறார்களென்பதை நான் கண்டுகொண்டேன். இயேசுவோடு வாழுகிற இந்தப் பயணத்தில் முப்பது ஆண்டுகளுக்குமேலாக ஈடுபட்டிருக்கிறேன். நான் திட்டமாகக் கூறக்கூடிய ஒரேயொரு காரியம், நான் இயேசுவைப் பலமுறை துக்கப்படுத்தினாலும் அவர் ஒருமுறையேனும் என்னைக் கைவிடவில்லையென்பதே.

கிறிஸ்தவ வாழ்க்கையின் வெற்றி விசுவாசத்தினால் மாத்திரமே வருகிறது என்கிற பெரிய உண்மையை நான் கண்டுபிடித்திருக்கிறேன். தேவனுடைய வார்த்தையாகிய இயேசுவின்மூலமாய் நம்மோடு பேசும் தேவனை நோக்குவதினால் விசுவாசம் ஆரம்பிக்கிறது. நாம் இயேசுவைக் கண்டுகொண்டிருப்பதால் அது தொடருகிறது. இறுதியாக, அது நம்முடைய வெற்றியிலல்ல, அவருடைய வெற்றியில் முடிவடைகிறது. அவர் பெற்ற வெற்றிக்குள்ளே நாம் புகுந்துகொள்ளுகிறோம். நோவா, ஆபிரகாம், மோசே, தாவீது, பவுல், லுத்தர் மற்றும் ஒயிட்ஃபீல்டு என்பவர்கள் மகாப் பெரியவர்களாகயிருக்கவில்லை; அவர்கள் மகாப்பெரியவரும் வல்லமையுள்ளவருமான தேவனில் நம்பிக்கை வைத்ததினாலேயே அவர்கள் பெருங்காரியங்களைச் சாதித்தார்கள். அவர்களுடைய தேவன் நம்முடைய தேவன் என்கிற சிந்தை எத்தனை சிறப்பானது! நம்முடைய சிறந்த ஆற்றல்கள் நம்மை வெற்றிக்கு வழிநடத்தாது. மகத்துவமான தேவனில் வைக்கும் எளிய விசுவாசமே வெற்றியைக் கொண்டுவருகிறது.