Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
வெற்றியான கிறிஸ்தவ வாழ்க்கை - இது நடைமுறையில் சாத்தியமா?

ஒரு நபர் கிறிஸ்தவனாய் சில ஆண்டுகள் வாழ்வதற்குள்ளேயே, வெற்றியான கிறிஸ்தவ வாழ்க்கை என்று ஒன்று யதார்த்தமாக உண்டா? தேவன் பாவமன்னிப்பையும் நித்திய இரட்சிப்பையும் அளிக்கிறார் என்கிற வாக்குத்தத்தம் மாத்திரந்தான் எனக்கு உண்டா? அல்லது என்னுடைய பழைய பழக்கங்களிலிருந்தும் வழிகளிலிருந்தும் நிச்சயமாக நான் வெற்றி அனுபவிக்க முடியுமா? என்று அவர் வியப்புக்கொள்ள ஆரம்பிக்கிறார். நாம் ஒருவரோடொருவர் முற்றிலும் நேர்மையுள்ளவர்களானால், ஏராளமான கிறிஸ்தவர்கள் நல்ல நோக்கத்தோடு இந்தக் கேள்விகளைக் கேட்கிறார்கள் என்பதை நாம் கண்டுகொள்ள முடியும் என்று நான் எண்ணுகிறேன்.

புதிய ஏற்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ள வெற்றிநிலைக்கு மிகவும் தாழ்வாக வாழுகிற அநேகக் கிறிஸ்தவர்களைக் காணவேண்டுமேயானால் நம்மைச்சுற்றி மாத்திரம் பார்த்தால் போதும். கடுமையான பிரச்சனைகளும் பாடுகளுங்கொண்ட மக்களை நான் அடிக்கடி சந்தித்திருக்கிறேன்; அவர்களுடைய சூழ்நிலைக்கு நடைமுறையிலாக்கக்கூடிய எந்த நிவாரணமுமில்லை என்றுகூட நான் எண்ணியதுண்டு. மேலும், என்னைச் சுற்றிலும் நான் பார்க்கும்போது, அநேகக் கிறிஸ்தவத் தலைவர்களில் நான் தோல்வியும் ஏமாற்றமும் காண்பதோடு, கிறிஸ்தவ சமுதாயத்தில் மனச்சோர்வையும் பார்க்கிறேன். கிறிஸ்தவ சமுதாயத்தில் தோல்வி பழக்கமான நிலையாகிவிட்டபடியால் அநேகர் வேதபுத்தகத்தில் வெற்றிக்குரிய கொள்கைகளைத் தேடாதபடி, உலகப்பிரகாரமாக மனரீதியான தத்துவங்களுக்கு நேராகத் திரும்புகிறார்கள். கிறிஸ்தவ சமுதாயத்தில் தோல்வி மிகுந்து வருவதால் இடைக்காலத்தில் தொழில்ரீதியாக ஆலோசனை அளிப்பவர்கள் அதிகமாக வளர்ந்திருக்கிறார்கள். அதின்பலனாக, வெற்றி என்று ஒன்று உண்டா? என்ற கேள்வி இயற்கையாக அமைந்துவிட்டது.

நம்மைச் சுற்றியுள்ள அநேகக் கிறிஸ்தவர்களுடைய தோல்வியைக் காண்பதைவிட மிகவும் மோசமானது நம்முடைய தவறுகளைக் காண்பதே. அநேகக் கிறிஸ்தவர்கள் இச்சை, மனக்கசப்பு, கோபம், விசாரம்போன்ற எண்ணற்ற இருதய வேதனைகளுக்குச் சிறைப்பட்டிருக்கிறார்கள்; தாங்கள் கிறிஸ்தவர்களாகிவிட்டால் இவைகளைச் சந்திக்க நேரிடாது என்றே அவர்கள் எண்ணியிருந்தார்கள். நாம் தோல்வியுற்றிருக்கிறோம் என்று நம்மில் பலரிடமுஞ் சொல்லத் தேவையில்லை. ஏனெனில், அந்த உண்மையை நாம் ஒவ்வொரு நாளும் சந்திக்கிறோம். சில நாட்களுக்குமுன் இன்னொரு பெண்ணின் கணவனோடு தான் பாலியல் தொடர்புகொண்டுள்ளதாக ஒரு பெண் என்னிடத்தில் சாதாரணமாகக் கூறினாள். அவள் அதைச் சொன்னவிதத்தைப் பார்த்தால் அந்த உறவின்மீது அவள் வெற்றிகொள்ள எந்த நம்பிக்கையுமில்லை. அநேக ஆண்டுகளுக்குமுன் தவறான பாலியல் உறவுகொண்டிருந்த ஒரு போதகரை நான் நேருக்குநேர் எதிர்த்தேன். அந்தப் பெண்ணோடு எனக்கிருக்கிற இத்தகைய உணர்ச்சிகளிலிருந்து என்னை விடுவிக்குமாறு நான் தேவனிடம் ஜெபித்து வேண்டினேன்; ஆனால், அவர் அவ்வாறு செய்யாததால் இந்த உறவு அவரால் எனக்கு அனுமதிக்கப்பட்டது என்று நான் ஏற்றுக்கொண்டேன் என்று அவர் கூறினார். தங்கள் வாழ்க்கையில் வெற்றியடைவதற்குரிய ஆதாரமும் வழியும் கண்டடையாத அநேகக் கிறிஸ்தவர்கள் தோல்வியென்பது விசுவாசிகளுக்குரியதுதான் என்று ஏற்றுக்கொள்ளுகிறார்கள்.

தங்களது கிறிஸ்தவ வாழ்க்கையில் வெற்றியின்மைக்குச் சாக்குப்போக்குச் சொல்லக் கிறிஸ்தவர்கள் வேதவாக்கியங்களைப் பயன்படுத்துவதை நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன். மிகவும் குறிப்பாகத் தாவீது அரசனின் தோல்வியே அடிக்கடி எடுத்துக்காட்டாகக் கூறப்படுகிறது. அவர் தேவனுடைய இருதயத்துக்குப் பிரியமானவராக இருந்தபோதிலும், இச்சைக்கும் விபசாரத்துக்கும் கொலைபாதகத்துக்கும் அடிபணிந்தாரே; அவர் ஒரு தேவமனிதனாயும் தேவனுடைய அரசின் தலைவனாயும் இருந்தும், அவர் அவ்வாறு செய்திருக்க, நாம் அவரைவிடச் சிறப்பாகச் செயல்பட எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? என்பதே அவர்களது தர்க்க ரீதியின் போக்கு. தோல்வியைச் சந்தித்த பக்தியுள்ள மனிதருடைய ஏராளமான எடுத்துக்காட்டுகளினால் வேதபுத்தகம் நிச்சயமாகவே நிரம்பியிருக்கிறது. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன் (ரோம.7:19) என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறியிருக்கிறார். பேதுரு இயேசுவை மறுதலித்தார், தோமா அவரைச் சந்தேகப்பட்டார். ஒரு அரசன் ஆபிரகாமின் மனைவியைத் தேவைப்பட்டபோது அவர் கோழையாக நடந்துகொண்டார். மோசே பார்வோனுக்குப் பயந்து தோல்வியுற்ற நிலையில் மீதியானிய வனாந்தரத்துக்கு ஓடினார். இவ்வாறு நாம் வேதபுத்தகம் முழுவதையும் ஆராயும்போது, விசுவாசிகளுக்கு வெற்றி என்று ஒன்றில்லை என்று எளிதாக எண்ண ஏதுவுண்டு.

கிறிஸ்துவின் அநேகப் பின்னடியார்கள் தோல்வியாகிய சாக்கடையில் தங்கியிருப்பதற்கு இன்னுமொரு காரணமுமுண்டு. இன்னொருவிதமான வாழ்க்கையைக்குறித்து வேதம் விவரிக்கிறது என்பதை அவர்கள் அறிவார்கள். அநேகர் பாவச்சேரியிலிருந்து வெளிவர விரும்பினாலும், அத்தகைய சேரி வாழ்க்கையே தங்களுடைய ஆவிக்குரிய முடிவு என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சேரிகளில்தான் அவர்கள் வாழவேண்டுமென்று அவர்களை நம்பச்செய்திருக்கிற தீயவனும் சீரற்றவனுமான ஒரு தலைவன் இருக்கிறான் என்பதைத்தான் அநேக மக்கள் புரிந்துகொள்ளுவதில்லை. அவர்கள் சாத்தானின் பொய்களை நம்பியிருக்கிறார்கள். மனிதன் படைக்கப்பட்ட காலமுதல் அவன் அதே பழங்கதையைத்தான் சொல்லிவருகிறான். எல்லாத் தலைமுறைகளிலுமுள்ள விசுவாசிகளும் பாவச்சேரிகளில் வாழத்தான் நியமிக்கப்பட்டவர்களென்றும், ஆவிக்குரிய சாக்கடைதான் கிறிஸ்தவ வாழ்க்கையின் அளவுகோல் என்றும் அவர்களை நம்பச்செய்ய அவன் முயற்சித்திருக்கிறான்.

நம்முடைய வலிமையிலும், ஆற்றலிலும் வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை நடத்துவது கூடாதகாரியம் என்பது உண்மையே. நாமாக விடப்பட்டால் நாம் தோல்வியிலேயே வாழுவோம். ஆனால், கிறிஸ்துவை உண்மையாய்ப் பின்பற்றுகிறவர்களுக்கு நற்செய்தி உண்டு. மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் (லூக்.18:27) என்று இயேசு கூறினார். நம்முடைய தேவன் கூடாதவைகளைச் செய்வதிலேயே சிறப்பாற்றலுள்ளவர். நம்முடைய வெற்றிக்குத் தேவையான எல்லாவற்றையும் அவர் நமக்குத் தந்திருக்கிறார். ஒரு கிறிஸ்தவனுக்கு வெற்றியான கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு கனவோ, அல்லது எட்டமுடியாத இலக்கோ அல்ல. இது நிகழ்கால யதார்த்தம். இது சாதிக்கவேண்டிய ஒன்றல்ல; கிறிஸ்துவால் ஏற்கெனவே சாதிக்கப்பட்ட ஒன்றேயிது.

இயேசு சிலுவையில் மரித்தபோது, நம்முடைய எல்லாப் பகைவர்களையும் அவர் வென்றார். மிகவும் முக்கியமாக அவர் சாத்தானைத் தோற்கடித்தார். சகோதரர்களைக் குற்றஞ்சாட்டுகிறவன் என்று பிசாசு விவரிக்கப்படுகிறான். நமக்கு நம்பிக்கை இல்லையென்று அவன் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறான். தோல்விதான் நம்முடைய முடிவென்று அவன் நம்மை நம்பச் செய்கிறான். ஆனால் அவன் பொய்யன். இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவரலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே (ரோம.8:37) என்று வேதவாக்கியம் தெளிவாகக் கூறுகிறது. இயேசு சிலுவையில் மரித்தபோது சாத்தானின் தோல்வியை வெளியரங்கமான கோலமாக்கினார் (கொலோ.2:15) என்று வேதம் சொல்லுகிறது. பிசாசின் பொய்களை நாம் இனிமேலும் நம்பத் தேவையில்லை. வானமண்டலங்களிலுள்ள ஆவிக்குரிய சத்துவங்கள்மீது ஏற்கெனவே வெற்றிபெற்றாயிற்று. இது தான் உண்மை.

ஒருவேளை நாம் சந்திக்கிற மிகவும் கடினமான போராட்டம் நமக்குள்ளேயே நடைபெறுகிறது. அந்தப் போராட்டத்தைக்குறித்துத்தான் அப்போஸ்தலனாகிய பவுல் முக்கியமாக ரோமர் 7-ம் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார். அவர் வெற்றியை விரும்பினார், ஆனால் அவருடைய மாம்சத்தில் நன்மை ஒன்றும் வாசமாயிருக்கவில்லையென்று அவர் அறிக்கையிட்டார் (ரோம.7:18). இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? என்றுகூட அவர் கேள்வி எழுப்பினார் (ரோம.7:24). பின்பு அவர் தன்னுடைய சொந்தக் கேள்விக்கு விடையாக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன் (ரோம.7:25) என்று திட்டமாகக் கூறினார். ஆம், பவுல் தோல்வியை ருசித்திருந்தார்; ஆனால், வெற்றியின் ஆதாரம் கிறிஸ்துவில் காணப்பட்டது என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபின் கற்றுக்கொண்ட மிகவும் முக்கியமான உண்மை இதுவாய்த்தானிருக்கும். வெற்றியான கிறிஸ்தவ வாழ்க்கை நான் எட்டிப்பிடிக்கக்கூடியதல்ல, அது கிறிஸ்து எனக்காகப் பெற்றுக்கொண்டதே. அது நான் அவருக்காக எதைச் செய்யக்கூடுமென்பதல்ல, ஆனால் அவர் ஏற்கெனவே செய்து முடித்தது அது. நான் அல்ல என்பதும் கிறிஸ்துவே எனக்குள் பிழைக்கிறார் என்பதுமே வெற்றியின் பெரிய நம்பிக்கை. அவரில் நம்பிக்கை வைப்பதே என்னுடைய பொறுப்பாகும். என்னை இரட்சித்து மன்னிப்பதற்காக அவரை நான் நம்பினதுபோலவே, என்னைச் சோதிக்கிற எல்லாத் தீய இச்சைகளிலிருந்தும் எனக்கு வெற்றிகொடுக்க அவரை நான் நம்பலாம். கிறிஸ்துவே என் வெற்றி. ஆம், வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை சாத்தியமானதே. இயேசு வெற்றியடைந்ததால் நாம் அதைப் பெற்றுக்கொள்ளலாம். நாம் அவரில் நம்பிக்கை வைப்பது மாத்திரமே தேவை.