Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

news

கிரேக்க மாரத்தானை டிப்பிற் நிறைவுசெய்தார்

சேமி டிப்பிற் இந்தியாவிற்கு பயணித்துக்கொண்டிருக்கும்போது, இந்தக் கட்டுரையை அவர் கூறினார். இப்பொழுதுதான் அவர் கிரேக்க மாரத்தானில் ஓடிமுடித்திருந்தார்; கீழ்வருவது அங்கு நடந்ததின் அறிக்கையாகும்.

(ஏறக்குறைய பிடிப்பைடைஸான) சேமி டிப்பிற்றின் வாழ்த்துக்கள்

பிடிப்பைஸ் என்ன என்பதைப் புரிந்துகொள்ளவும் ஓட்டத்தின் இறுதியில் என்ன நடந்தது என்பதைக் கண்டுகொள்ளவும் இந்தக் கட்டுரையை முழுவதுமாக வாசிக்கவும்.

பிடிப்பைஸ் என்ற பயரை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால், அவர்தான் அத்தேனே நாட்டு மக்கள் பாரசீகரை மாரத்தான் சமவெளியில் தோற்கடித்தார்கள் என்னும் செய்தியை அத்தேனே பட்டணத்துக்குக் கொண்டுசென்ற ஓட்டக்காரர். அவர் ஏறக்குறைய 26 மைல் தூரமான அந்த ஓட்டத்தை ஓடி, வெற்றியை அறிவித்துவிட்டு, மரித்துவீழ்ந்தார்! நீளதூர ஓட்டப்பந்தயத்தை நடத்தவேண்டுமென்று முதல்முதலாவதாக ஒலிம்பிக் ஒழுங்குக் குழு 1896-ல் தீர்மானித்தபோது, பிடிப்பைஸ் ஓடிய தூரத்தையே பந்தயத் தூரமாக்க அவர்கள் முடிவுசெய்தார்கள். அதன்பலனாக, இந்த ஓட்டப்பந்தயம் மாரத்தான் என்று அழைக்கப்பட்டது; ஏனெனில், மாரத்தான் பள்ளத்தாக்கிலேயே வெற்றி சம்பாதிக்கப்பட்டது.

அதற்கும் எனக்கும் என்ன தொடர்பு? எனக்குப் புற்றுநோய் இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டபோது, புகழ்பெற்ற அத்தேனே மாரத்தான் ஓட்டப்பந்தய காலத்தில் அந்த மாரத்தானில் நானும் ஓடவேண்டுமென்று தேவன் என் இருதயத்தோடு பேசினார் என்பது உங்களில் அநேகருக்குத் தெரியும். 30 ஆண்டுகளுக்குமுன் என்னுடைய நெருங்கிய நண்பனாயிருந்த கென் லீபர்க்கும் நானும் கிரேக்க மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஓடவேண்டுமென்று கனவுகண்டோம்; ஆனால், கென் ஒரு வாகன விபத்தில் கொல்லப்பட்டார். எனவே, அந்தக் கனவு நிறைவேறாமற்போயிற்று. ஆயினும், எனக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டபின், அந்தக் கனவு மறுபடியும் என்னில் உருவாயிற்று.

கென்னின் மூத்த மகளான கிறிஸ்றா லீபர்க் மெல்ற்றன், தன்னுடைய தகப்பனாருடைய இடத்தில் என்னோடு ஓட விரும்பினாள். அவள் தன்னுடைய கழுத்தாடையில் தந்தையின் பெயரைப் பொறித்துக்கொண்டு, ஒரு சட்டத்தில் மாட்டப்பட்ட தன் தந்தையின் படத்தை சுமந்துகொண்டு அவள் வந்தாள்.

இன்று காலையில் மாரத்தான் ஆரம்பிக்கிற இடத்திற்கு நானும் கிறிஸ்றாவும் செல்லுவதற்குப் பேருந்து பிடிக்க விளையாட்டு அரங்கம் வரையிலும் அவளுடைய கணவர் வேட் எங்களோடு வந்தார். (இதற்கிடையில் டெக்ஸ் வியாதிப்பட்டபடியால், நான் விடுதியை விட்டுப் புறப்பட்டவேளையில் மருத்துவரை அழைத்து அவளைக் கவனிக்கும்படிக் கூறினேன். இப்போது அவள் பரவாயில்லை.) ஓட்டம் ஆரம்பிக்கிற வரைக்கு வந்தபின், எனக்கு அதிக உற்சாகமில்லை. கென்யாவிலிருந்து வந்திருந்த சிறந்த ஓட்டக்காரர்கள் பகத்துத் தடத்தில் ஆரம்பப் பயிற்சியெடுத்துக்கொண்டிருந்தார்கள். நானும் அவர்களோடு பயிற்சியெடுத்தேன். நான் சொல்லுவதை நீங்கள் நமபத்தக்கதாக என்னிடம் ஒரு காமிரா இருந்திருக்குமானால் நலமாயிருந்திருக்கும்.

ஓட்டம் சரியாக 9.00 மணிக்கு ஆரம்பமானது; நானும் நன்றாய் ஆரம்பித்தேன். பின்னால் அரங்கத்தில் சந்தித்ததுவரை நான் கிறிஸ்றாவைக் காணவில்லை; இங்குதான் கதை உண்மையாகவே சுவாரசியமாக ஆரம்பிக்கிறது. முதல் 5 கிலோமீற்றர் வரையிலும் நான் 8:42 வேகத்தில் ஓடினேன்; அது நிச்சயமாகவே எனக்கு சிறப்புத்தான். எனக்குக் களைப்பாயிருக்கவில்லை. அது எனக்கு எளிதாகவேயிருந்தது. அந்த வேகத்தில் நான் ஓடியிருந்தால், 4 மணி நேரத்திற்குள் நான் மொத்தத் தூரத்தைக் கடந்திருப்பேன்; அவ்வாறு செய்வேனென்று நான் நம்பினேன். 10 கிலோமீற்றர் வரையிலும் நான் அதே வேகத்தில் ஓடினேன். நான் பலமுள்ளவனாய் எனக்குத் தோன்றினது. 10 கிலோமீற்றருக்கும் 20 கிலோமீற்றருக்குமிடையே அநேகக் குன்றுகள் இருந்தன; ஆயினும் என்னுடைய வேகத்தில் நிலைத்திருந்தேன். என்னுடைய வேகம் 8:50க்குக் குறைவானது; ஆனால், 4 மணிநேரத்துக்குள் மாரத்தானை ஓடிமுடிக்கமுடியாதவாறு நான் தாமதமானேன்.

20 கிலோமீற்றருக்கும் 30 கிலோமீற்றருக்கும் இடைப்பட்ட இடம் குன்றுகளாகவேயிருந்தது--பெரிய குன்றுகள், நீளமான குன்றுகள், பயங்கரமான குன்றுகள்! என்னுடைய கால அட்டவணைக்குமுன்னேயே ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று நான் அறிந்திருந்தபடியால், 32 கிலோமீற்றர் வரையிலும் நான் சற்று மெதுவாக ஓடினாலும், 4 மணிநேரத்துக்குள் என் ஓட்டத்தை முடிக்கக்கூடியதாயிருந்தது. இறுதி 10 கிலோமீற்றர் (6.2 மைல்கள்) தூரமும் ஒன்றில் இறக்கமாக இருந்தது, அல்லது சமமான நிலப்பரப்பாயிருந்தது. எனவே, இறுதி 10 கிலோமீற்றர் தூரமும் நான் சமாளித்துக்கொள்ளலாம் என்று எண்ணினேன். அதுதான் என் திட்டமாயிருந்தது. ஆனால், குன்றுகளைக் கடந்தபோது, நான் மிகவும் களைத்துவிட்டேன். என்னில் எந்தப் பெலனும் இல்லாதிருந்தது. ஏறக்குறைய 2.5 கிலோமீற்றர் தூரத்திலிருந்த சிற்றுண்டி நிலையம்வரையிலும் சென்றுசேர்வது என்பது என்னுடைய இலக்காயிற்று. அவ்வாறு நான் அங்கு சென்று சில பானங்களைக் குடித்துவிட்டு, சிறிது தூரம் நடந்துசென்றேன். நான் ஓட ஆரம்பித்தபோது, என் சரீரம் முழுவதும் நோவுண்டாயிற்று. 2.5 கிலோமீற்றர் தூரத்திலிருந்த சிற்றுண்டி நிலையம் வரையிலும் மெதுவோட்டம் செய்துவிட்டு, அதன்பின் பானம் அருந்திவிட்டுகொஞ்சங்கூட நடக்கவேண்டும் என்பது என் இலக்காயிருந்தது.

ஆனால், அது எனக்கு மிகவும் கடினமாயிற்று. ஒவ்வொரு அடி எடுத்துவைக்கவும் நோவு அதிகமாகிக்கொண்டேயிருந்தது. அடுத்த ஒரு கிலோமீற்றர் தூரம் வரையிலும் மெதுவாக ஓடிவிட்டு, அதன்பின் நடக்கவேண்டும் என்று நான் தீர்மானித்தேன். ஒரு கிலோமீற்றர் தூரம் வரையிலும் நான் கடந்துவிட்டேன், ஆனால் அதற்கப்புறம் செல்லமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அதன்பின், அடுத்த சிவப்பு விளக்கு வரையிலும் சென்றுவிடத் தீர்மானித்தேன். அதை நிறைவேற்றியபோது, என்னால் கொஞ்சமும் நகரமுடியவில்லை. நான் சிறிது தூரம் நடக்கவும் அதன்பின் மெதுவாக ஓடவும் ஆரம்பித்தேன். சிறிது நேரத்துக்குப்பின், என்னால் நடக்கக்கூடமுடியாது என்று எண்ணக்கூடிய அளவு என்னில் நோவுண்டாயிற்று.

ஆனல், இதைத் தேவனுடைய மகிமைக்காகவும், கென் லீபர்க் என்னும் என்னுடைய நெருங்கிய நண்பனுடைய நினைவுக்காகவுமே செய்தேன். எனவே இதிலிருந்து நான் பின்வாங்கக்கூடாதென்பது எனக்குத் தெரியும். ஆனல், அது எனக்கு மிகவும் கடினமானதாயிருந்தது. ஒரு கிலோமீற்றருக்குக் குறைவான தூரத்திற்குள் நான் சென்றபோது எனக்கு மிகவும் நோவெடுத்தபடியால் நான் அழுதுவிட்டேன். நான் நின்றுவிட ஆயத்தமானபோது, ஒரு வளைவில் திரும்பினேன்; அந்தத் தெரு அரங்கத்துக்குநேராக வழிநடத்தியது. அந்தக் காட்சியை விவரிப்பது மிகவும் கடினம். நூற்றுக்கணக்கான மக்கள் தெருவின் இருபுறமும் நின்றுகொண்டு, எங்களை உற்சாகப்படுத்தினார்கள். நான் அழுதுகொண்டே ஆண்டவரை நோக்கிப்பார்த்தேன்; பெலன் எனக்குள் எழும்ப ஆரம்பித்தது. நான் மெதுவாக ஓடினேன். மக்கள் ஆர்ப்பரித்துக்கொண்டேயிருந்தார்கள். நான் அரங்கத்திற்குள் சென்றுசேர்ந்தேன்; அந்தக் காட்சி மிகவும் அற்புதமாயிருந்தது. எங்களை உற்சாகப்படுத்தி ஆர்ப்பரித்த ஆயிரக்கணக்கான மக்களால் அந்த முதல் ஒலிம்பிக் அரங்கம் நிரம்பியது.

சரித்திரப் புகழ்பெற்ற அந்த அரங்கத்தில் ஆரவாரிக்கும் கூட்டத்திற்குநேரான பாதையில் நான் என் விரல்களைப் பரத்துக்கு நேராக நீட்டியபடியே அதிகமான வேதனையோடும் உணர்ச்சியினாலேற்பட்ட அழுகையோடும் ஓடினேன். நான் ஓட்டத்தின் கடைசி வரையைக் கடந்தேன்; நான் செய்துவிட்டேன், நான் ஓட்டத்தை முடித்துவிட்டேன் என்று மாத்திரமே என்னால் கூறக்கூடியதாயிருந்தது. எனக்கு மயக்கமாயிருந்தது; எங்கள் ஓட்டத்துக்கு ப் பொறுப்பாயிருந்தவர் என்னைப் பார்த்தார்; நான் நன்றாயில்லை என்பதை அறிந்துகொண்டார். எனவே துரிதமாக எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவந்தார்.

கிரேக்க நாட்டிலுள்ள கிறிஸ்துவுக்குள் சகோதரனாகிய ஜோஹனத்தான் மாக்ரிஸும் அவருடைய நண்பரும் என்னுடையஓட்டத்தைப் படம்பிடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒளிப்பதிவுக் கருவியோடு என்னிடம் ஓடிவந்து, அந்த ஓட்டப்பந்தயத்தைக் குறித்த என்னுடைய கருத்தைக் கேட்டார்கள். என்னுடைய வாழ்க்கையில் நான் செய்துள்ள எல்லாவற்றிலும் மிகவும் கடினமான காரியம் இதுதான். நான் எதிர்பார்த்த அளவு நான் ஓடவில்லை. ஆனால், ஓட்டத்தினிடையில், வேகமல்ல மிகவும் முக்கியமான காரியம், ஓட்டத்தை நிறைவுசெய்வதுதான் முக்கியம் என்னுமிடத்துக்கு வந்துவிட்டேன் என்று கூறினேன்.

அதன்பின் நான் மேலேபார்த்துக்கொண்டே, நான் மயக்கம்போட்டு விழப்போகிறேன் என்று சொன்னேன். ஆகாயம் சுழல ஆரம்பித்தது; எல்லாம் எனக்கு மங்கலாய்த் தோன்றியது. உடனே மருத்துவக்குழு என்னிடம் ஓடிவந்து, நான் சாய்ந்துவிழுந்தபோது என்னைத்தாங்கிக்கொண்டார்கள். என்னை ஒரு டாலியில் கிடத்தி மருத்துவக் கூடாரத்துக்குக் கொண்டுவந்ததைத்தவிர அடுத்த சில நிமிடங்களில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. அநேக மருத்துவர்கள் என்னை சிகிச்சையளிக்க ஆரம்பித்து பல சோதனைகளை செய்தார்கள். அங்கு நான் படுத்திருந்தபோது, உயிரற்றவனைப்போலானேன்.

என்னை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லுவது தேவையென்று மருத்துவர்கள் தீர்மானித்தார்கள். சில மணிநேரம் நான் மருத்துவக் கூடாரத்தில் இருந்தேன். கிற்ஸ்றா நான் ஓட்டத்தை முடித்து ஒருமணிநேரத்துக்குப்பின் இறுதிக்கோட்டுக்கு வந்தாள்; ஜோஹனத்தானின் மகன் ஜஸ்ற்றின் அவளிடம் ஓடிச்சென்று, நான் மருத்துவக் கூடாரத்திலிருப்பதைக் கூறினான். எனக்கு என்ன நடந்தது என்பதை அறிய அவளும் வேடும் என்னிடம் வந்தார்கள்.

என்னை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார்கள். மருத்துவ ஊர்தியில் என்னோடிருந்த தாதி ஜோஹனானிடம் என்னுடைய ஓட்டத்தைக்குறித்தும், நான் யார் என்பதையும் கேட்டார்கள். அவர் என்னுடைய அனுபவத்தையும் கிறிஸ்துவையும் அவர்களோடு பகிர்ந்துகொண்டார். மருத்துவமனையில் நான் இருதய நோய் மருத்துவர்களாலும் மற்றும் உள் நோயாளிகள் பிரிவிலுள்ள மருத்துவர்களாலும் இரத்தப் பரிசோதனை, இ.கெ.ஜி, X-Ray போன்ற அநேகப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டேன். காத்திருப்போர் அறையில் சிலர் மிகவும் நம்பிகையற்ற நிலையில் காணப்பட்டார்கள்; அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வந்தவர்களைப்போலிருந்தார்கள். அவர்களொடு நான் பேச ஆரம்பித்தேன். அவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த அகதிகள்; அவர்கள் அப்போதுதான் அத்தேனே பட்டணத்துக்கு வந்திருந்தார்கள். அவர்கள் மிகுந்த குழப்பத்திலிருந்தார்கள்; நான் அவர்களோடு கிறிஸ்துவைப் பகிர்ந்துகொண்டதோடு, அவர்களை ஜொஹனானிடம் அறிமுகம் செய்துவைத்தேன், ஏனெனில், அவர் அகதிகள் மத்தியில் ஊழியஞ்செய்துவந்தார்.

நான் சந்தித்த எல்லா மருத்துவர்களும் இதுதான் உங்களுடைய முதல் மாரத்தான் ஓட்டமா? என்று என்னிடம் கேட்டார்கள். ஆம் என்று நான் பதிலளித்தபோது, உங்களுடைய வயது என்ன என்று கேட்டார்கள். நான் அவர்களிடம் எனக்கு 61 வயது என்று சொன்னபோது, அவர்களுக்குள் கிரேக்க மொழியில் மிகவும் துரிதமாகப் பேசிக்கொண்டார்கள்.

இன்று இதே நிலையில் இன்னொரு மனிதனும் இருந்தார். அவருக்கும் இது முதல் மாரத்தான்; அவருடைய வயது 60. ஆனால் அவருக்கும் எனக்குமிடையேயுள்ள மிகப்பெரிய வேற்றுமை என்னவென்றால் அவர் மரித்துப்போனார்.

இறுதியாக மருத்துவர்கள் என்னை மருத்துவமனையிலிருந்து அனுப்பிவிட்டார்கள்; நான் என்னுடைய அருமை மனைவியோடு என்னுடைய விடுதி அறைக்குப் பாதுகாவலாகத் திரும்பினேன். இப்போது நான் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளேன்; என்னைக்குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. எங்களுக்கு எல்லாம் சரியாகிவிடும். ஆயினும் இப்போது நாங்கள் காயப்பட்ட இரு மான்களைப்போலிருக்கிறோம். நீங்கள் எங்களுக்காக ஜெபிப்பதை வெகுவாய் மதிக்கிறோம். நாளைக்கு நாங்கள் ஆம்ஸ்டர்டாமுக்குச் செல்லுகிறொம், அங்கு இரவைக் கழிப்போம். அதற்குப்பின் இந்தியாவில் 10 நாட்கள் ஊழியஞ்செய்ய செவ்வாய்க்கிழமை செல்லுகிறோம். தேவன் றெக்ஸுக்கு முழுமையான ஆரோக்கியத்தைக் கொடுக்கவும் எனக்கு பெலனளிக்கவும்ஜெபித்துக்கொள்ளுங்கள்.

நாங்கள் உங்களை நேசிக்கிறோம், பாராட்டுகிறோம்.

சேமியும் றெக்ஸும்