Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

news

ஏப்ரல் 2010

வாழ்த்துக்கள்!

நான் சேட்டனூகா, கிளீவ்லேண்ட் மற்றும் றென்னஸி போன்ற அமெரிக்க மாநிலங்களிலிருந்து நம்முடைய நாட்டுக்கு எழுப்புதல் வருமென்கிற நம்பிக்கையோடு தற்போதுதான் திரும்பி வந்துள்ளேன். தென் கிழக்கு றென்னஸியில் நடைபெற்ற உயிர்மீட்சிக்கான உள்ளக்கதறல் மாநாட்டில் தேவன் ஆச்சரியமாக அசைவாடினார். அங்கு ஐம்பதுக்கதிகமான திருச்சபைகள் பங்கெடுத்திருந்தன. எனினும், இக்கூட்டங்கள் வெறும் திருச்சபைகளின் கூட்டுறவாக மட்டும் இருக்கவில்லை. தேவன் எங்களை சந்தித்தார்.

அங்குள்ள ஒரு திருச்சபையில் செவ்வாய் மாலை நான் செய்திகொடுத்தபோது, அங்கு வந்திருந்தவர்களில் ஒரு மனிதனைத் தேவன் தொட்டார். அவர் மனக்கிலேசத்தோடு எழுந்து மேடைக்கு நேராக நடந்து வந்து, முகங்குப்புற விழுந்து, மனஸ்தாபத்தோடு தேவனை நோக்கிக் கதறினார். அதேவேளையில் இன்னொருவர் கூட்டத்தின் மறுபக்கத்திலிருந்து எழுந்து வந்து பீடத்தின் அருகாமையில் முழங்காலிட்டார். மூன்றாவது ஒருவர் கூட்டத்தின் நடுப்பாகத்திலிருந்து இறங்கி வந்து பீடத்தண்டையில் விழுந்து தேவனுடைய மன்னிப்புக்காக வேண்டினார். அப்பொழுது நான் பிரசங்கித்துக்கொண்டுதானிருந்தேன். பிரசங்கத்தின் முடிவில் நான் அழைப்புக் கொடுக்குமுன், பீடத்தின் அருகாமையில் ஏறக்குறைய பதினைந்துபேர் வந்துவிட்டனர். தங்கள் வாழ்க்கையில் தேவன் உயிர்மீட்சி அனுப்பவேண்டுமன்று விரும்புகிற மக்கள் முன்னே வருமாறு நான் அழைப்புக்கொடுத்தபோது தங்கள் வாழ்க்கையைக் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்த மக்களால் ஆலயத்தின் முன்பக்கம் முழுவதும் நிரம்பியது.

ஆம், இந்தத் திருச்சபை மாத்திரமல்ல, ஐம்பதுக்கதிகமான திருச்சபைகள் இக்கூட்டங்களில் பங்கெடுத்துத் தேவனுடைய செயல்பாட்டில் ஈடுபட்டன. இக்கூட்டங்கள் அங்குள்ள ஐந்து பெரிய ஆலயங்களில் நடைபெற்றன. மற்ற திருச்சபைகளிலுள்ள மக்கள் ஒவ்வொரு மாலையும் இந்த ஐந்து ஆலயங்களிலொன்றில் பங்கெடுத்தனர். அந்த ஐந்து ஆலயங்களில் என்னோடுசேர்ந்து ஐந்துபேர் மாறி மாறி செய்தியளித்தோம். (இக்கடிதத்தின் இறுதியில் செய்தியாளர்களின் பட்டியலைக் காணலாம்.) ஒவ்வொரு ஆலயத்திலும் மேற்கூறியதுபோன்ற அநுபவங்கள் ஒவ்வொரு மாலையிலும் நடைபெற்றதாகக் கூறப்பட்டது.

அமெரிக்காவின் ஒரு பகுதியில் மக்களை உயிர்மீட்சிக்காக அழைக்கும் சிறப்பான முறையே பயன்படுத்தப்பட்டது. தனி நபருக்கல்ல, உயிமீட்சியின் செய்திக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. செய்தியாளர்கள் தங்களது செய்தியில் ஒருமுகப்பட்டிருந்தபடியால், திருச்சபைகளுக்குள் ஒற்றுமையின் ஆவி உருவாயிற்று. தேவன் தம்முடைய மக்களின் மத்தியில் காணப்படும் ஒருமனதைக் கனம்பண்ணுவதாக வாக்களித்திருக்கிறார்.

நாங்கள் றென்னஸியில் ஊழியஞ்செய்த நாட்களில் அநேக அற்புதங்களைக் கண்டோம். மிகவும் ஆச்சரியமான காரியங்களில் ஒன்று என்னவென்றால், எல்லாக் கூட்டங்களிலும் ஏராளமான மக்கள் ஒழுங்காகப் பங்கெடுத்ததே. எல்லா ஆலயங்களும் எப்போதும் நிரம்பியிருந்தன. அவ்வாறு வாஞ்சையோடு மக்கள் நிரம்பிவழிந்தது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மக்கள் செய்திக்குக் கருத்தோடு செவிசாய்த்ததை அமெரிக்காவில் நான் கடந்த பல ஆண்டுகள் கண்டதில்லை. பாடல் ஆரம்பித்த நேரமுதல் நான் செய்தியை முடித்ததுவரைக் கூட்டங்களில் அமைதியும் ஆர்வமும் காணப்பட்டன.

எலலா ஆலயங்களிலும் அழைப்புக் கொடுக்கப்பட்டபோதெல்லாம் எங்களுக்கு ஆச்சரியமே காத்திருந்தது. உயிர்மீட்சி அடையவேண்டுமென்னும் ஆர்வத்தோடு ஏராளமான மக்கள் முன்வந்தார்கள். இது ஒரு ஆலயத்தில் மட்டுமல்லாது, எல்லா ஆலயங்களிலும் இவ்வாறாகவே நடந்தது. எடுத்துக்காட்டாக, ஒரு ஆலயத்தில் நான் செய்தியின் முடிவுக்கு வந்தபோது பீடத்தினருகே மக்கள் நிரம்பிவிட்டார்கள். நான் ஜெபித்துக் கூட்டத்தை முடித்தேன். பாடகர்கள் படிக்கொண்டேயிருக்க, கூடுதல் மக்கள் பீடத்தண்டை வந்துகொண்டேயிருந்தார்கள். ஆராதனையை முடிக்கமுடியாதோ என்று தோன்றியது. மக்கள் தேவனுடைய சமுகத்தில், நின்றார்கள், உட்கார்ந்தார்கள், அழுதார்கள்.

இக்கூட்டங்கள் திருச்சபைகளுக்காகவே நடத்தப்பட்டன. இக்கூட்டங்களுக்கு நாங்கள் உயிர்மீட்சிக்கான உள்ளக்கதறல் என்ற தலைப்பைக் கொடுத்தோம். இக்கூட்டங்களில் விசுவாசிகள் உயிர்மீட்சியடைந்ததோடு, அநேக அவிசுவாசிகள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். ஒரு இரவு ஒரு தம்பதியர் கிறிஸ்துவுக்குத் தங்கள் இருதயங்களைக் கொடுத்தார்கள்; மறுநாள் அவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அவர்கள் விவாகரத்து பெறும் நிலையிலிருந்தார்கள். ஆனால், திருமுழுக்கின்போது, அவர்கள் ஒருவரோடொருவர் ஒப்புரவானார்கள்.

இன்னொரு மனிதன் தேவன் தன்னுடைய வாழ்க்கையை மாற்றியதாக சாட்சிசொன்னார். சில மாதங்களுக்குமுன், அவர் ஒரு திருச்சபையில் டீக்கனாயிருந்தபோது, ஒரு சண்டையில் ஈடுபட்டார். இளமைமுதல் அவருடைய இருதயத்தில் காணப்பட்டிருந்த கசப்பையும் கோபத்தையும் குறித்துக் கண்ணீரோடு அறிக்கையிட்டார். அநேக ஆண்டுகளாகத் தனக்குள் அடங்கியிருந்த கோபம் தன்னைத் தேவன் விரும்பும் ஒரு மனிதனாக வாழவிடாது தடுத்திருந்தது என்று அறிவித்தார். தன்னுடைய பெருமையே அவரில் காணப்பட்ட கோபத்துக்கும் கசப்புக்கும் வேர் என்பதைத் தேவன் வெளிப்படுத்தினார் என்று எல்லார் முன்னிலையிலும் அவர் பகிர்ந்துகொண்டார். தேவன் அவரை உடைத்தார்; அவர் மனந்திரும்பி, தேவனும் திருச்சபையும் தன்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டார்.

அமெரிக்காவில் ஆவிக்குரிய உயிர்மீட்சி உருவாக வாய்ப்பு உண்டு என்று நான் திட்டமாக நம்புவதின் காரணத்தை இப்போது நீங்கள் புரிந்திருப்பீர்கள். குடும்ப உறவுகள் சீர்செய்யப்பட்டன; கோபம் மற்றும் வைராக்கியம் உள்ள மக்கள் மறுரூபப்படுத்தப்பட்டார்கள்; தேவனுடைய பிரசன்னம் செய்தியில் காணப்பட்டது; கண்ணீர் சிந்தியதும் பசிதாகமுள்ள இருதயங்கொண்டதுமான மக்களால் பீடம் நிரம்பியது. தேவன் நம்மோடு இடைபட்டு இன்னும் முடியவில்லை; நம்முடைய நாட்டில் வல்லமையோடு அசைவாட தேவன் விரும்புகிறார்.

அவருடைய நாமத்தை நாங்கள் தொடர்ந்து பிரசித்தம்பண்ணுகிறபடியால் எங்கள் ஊழியங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். ஏப்ரல் மாத இறுதியில் சுவிசேஷத்துக்கு அடைக்கப்பட்ட ஒரு நாட்டில் உபத்திரவம் அநுபவிக்கும் கிறிஸ்தவர்கள் மத்தியில் நான் ஊழியஞ்செய்வேன். மே மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் உயிர்மீட்சிக்கான ஒரு மாநாட்டில் செய்திகொடுப்பேன். தேவன் அனுப்புகிற இடத்திலெல்லாம் அவரே எனக்கு ஞானம் அளிக்க எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! உங்களுடைய அன்புக்காகவும் அவருடைய அரசின் பணியில் உங்களின் பங்காளித்துவத்துக்காகவும் நன்றி!

தென்கிழக்கு றென்னஸிக்காக நடைபெற்ற உயிர்மீட்சிக்கான உள்ளக்கதறல் மாநாட்டின் பேச்சாளர்கள்: ஹென்றி ப்ளாக்பி, ரிச்சர்ட் பிளாக்பி, பிரேங்காயிஸ் கார், ஜான் மெக்கிரகார், வைரன் பாலஸ், சேமி டிப்பிற்.